"ஜெய் ஸ்ரீராம்".. சரமாரியாக அடித்து உதைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் பன்ச்மஹால் மாவட்டத்தில் 3 முஸ்லீம் இளைஞர்களை ஒரு கும்பல் ஜெய்ஸ்ரீராம் சொல்லக் கூறி அடித்து உதைத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 40 வயதான மெக்கானிக் சித்திக் அப்துல்சலாம் என்பவர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது மகன் சமீர் (17) மற்றும் அவனது இரு நண்பர்களான சல்மான் மற்றும் சோஹெல் ஆகியோரை மதி பகுதியில் உள்ள பாபா என்ற இடத்தில் வைத்து மடக்கிய 6 பேர் கும்பல் தாக்கியது.

ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி இவர்களை அந்தக் கும்பல் தாக்கியது. தாக்குதல் நடத்திய கும்பலில் இருந்தவர்களுக்கு 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும். வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவட்ட எஸ்பி லீனா பாட்டீல் கூறுகையில், புகார்தாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். சம்பவ இடத்திலிருந்து கிடைத்த சிசிடிவி பதிவுகளைப் பார்த்தபோது அப்படி எந்த சம்பவமும் நடந்தது போலத் தெரியவில்லை. இரு தரப்புக்கும் இடையே இருந்த பழைய முன்பகை காரணமாக தாக்குதல் நடந்திருப்பதாக தெரிகிறது.
குற்றம் சாட்டப்பட்ட 6 பேரைக் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்த பைக் ரேஸின்போதுதான் பிரச்சினை உருவானதாக தெரிகிறது. விசாரணை முடிவில் அனைத்தும் தெரிய வரும் என்றார்.