முலாயம்சிங் யாதவ் பிறந்த நாளும்... ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் கச்சேரியும்...
லக்னௌ: முலாயம்சிங் யாதவின் பிறந்தநாள் விழா ஆடம்பரமாக கொண்டாடப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசைக்கச்சேரி, வண்ணமயமான வானவேடிக்கை என திருவிழா கொண்டாட்டத்துடன் பிறந்தநாள் விழா களை கட்டியுள்ளதை அம்மாநில எதிர்கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.
அதேநேரத்தில் கிளீன் உத்தரபிரதேசம்... கிரீன் உத்தரபிரதேசம் என்ற நோக்கத்துடன் பிறந்தநாள் கொண்டாடப்படுவதாக மாநிலத்தை ஆளும் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தந்தையும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) அம்மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரான சைவாய் கிராமத்தில் வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி மாலையில் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு 75வது பிறந்தநாள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதுவே சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் இந்த ஆண்டும் ஆடம்பர கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க ராஷ்டிரிய ஜனதாதளத்தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜனதாதளத்தலைவர் சரத்யாதவ், முன்னாள் பிரதமர் தேவே கவுடா, முலாயம்சிங்கின் பால்ய நண்பர் அமர்சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல பாலிவுட் நட்சத்திர தம்பதிகள் அமிதாப் பச்சன், ஜெயபாதுரி, ஹிருதிக் ரோசன், சல்மான் கான் உள்ளிட்டோருக்கும் முலாயம் சிங் யாதவ் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறந்தநாள் விழாவின் ஹைலைட்டே நம் ஊர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமானின் இசைக்கச்சேரிதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உ.பி மாநிலத்தில் தினந்தோறும் பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுகின்றன, சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக ஊடகங்கள் எழுதி வருகின்றன. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும்போது, முதலமைச்சரின் குடும்பத்தினருக்கு ஆடம்பரமான இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தேவைதான என்று சர்ச்சை எழுந்தது. இதனை மறுத்துள்ள விழாக்குழுவினர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications