27 எம்.எல்.ஏக்களுடன் டெல்லி ஆளுநரை சந்தித்தார் கேஜ்ரிவால்! சட்டசபையை கலைக்க கோரிக்கை!!
டெல்லி: டெல்லி சட்டசபையை கலைக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் நஜீப்பிடம் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 31, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8 இடங்களில் வென்றன. இதனால் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது.
டெல்லி முதல்வரானார் அரவிந்த் கேஜ்ரிவால். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் ஆட்சி நிலைக்கவில்லை.

அரவிந்த் கேஜ்ர்வால் தலைமையிலான அரசு ராஜினாமா செய்தது. கடந்த சில மாதங்களாக டெல்லி மாநில சட்டசபை முடங்கியுள்ளது.
இந்த நிலையில் திடீரென பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இதனிடையே டெல்லி ஆளுநர் நஜீப்பை தமது கட்சியின் 27 எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாஜக, குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரினால் எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஆளுநர் கேட்டுப் பெற வேண்டும் என்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கேட்டுக் கொண்டனர். அத்துடன் டெல்லி மாநில சட்டசபையை கலைக்க வேண்டும் என்றும் ஆளுநரை அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.