
கார்ப்பரேட்டுகளிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை இவ்வளவு கோடியா! பட்டியலில் உள்ள 5ஜி நிறுவனம்!லிஸ்ட் இதோ
காந்திநகர்: குஜராத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக முதல் இடத்தில் இருக்கிறது.
2021-2022 ஆண்டில் தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் 79% நிதியை பாஜக பெற்றிருக்கிறது.
மறுபுறத்தில் காங்கிரஸை பொறுத்த அளவில், 28.7% நிதியை பெற்றிருக்கிறது. ஏற்கெனவே கார்ப்பரேட்டுகளிடம் பாஜக அதிக அளவில் நன்கொடை பெறுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மோடிக்கு ராவணன்போல் 100 தலையா இருக்கு? காங்கிரஸ் தலைவர் பேச்சு -அவமதிச்சுட்டாங்க! வெகுண்டெழுந்த பாஜக

அதிகரிப்பு
கடந்த 2020-2021ம் ஆண்டு பாஜக ரூ.477.5 கோடி அளவுக்கு நிதியை பெற்றிருந்தது. ஆனால் இந்த ஆண்டு இந்த நன்கொடை 28.7% அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடுவது வழக்கம். நாளை குஜராத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த புள்ளி விவரங்களின்படி அதிக நன்கொடை பெற்ற கட்சியாக இந்தமுறையும் பாஜகதான் இருக்கிறது. மேற்குறிப்பிட்டதைப்போல கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாஜக பெற்ற நன்கொடையானது 28.7% அதிகரித்துள்ளது. அதாவது ரூ.614.5 கோடியை பாஜக நடப்பாண்டில் நன்கொடையாக பெற்றிருக்கிறது.

ஏர்டெல் உட்பட
இந்த ரூ.614.5 கோடியில், 56% நிதியானது இரண்டு தேர்தல் அறக்கட்டளையிலிருந்து பெறப்பட்டுள்ளன. பார்தி ஏர்டெல் குழுமம், ஆர்செலர் மிட்டல் குழுமம், ஜிஎம்ஆர் குழுமம், டிஎல்எஃப், டோரண்ட் பவர் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய 'ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட்' இந்த ஆண்டு ரூ.336.5 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் கடந்த ஆண்டு ரூ.209 கோடியை நன்கொடையாக வழங்கியிருந்தன. 'ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்டை' போலவே, 'ஏபி ஜெனரல் எலெக்டோரல் டிரஸ்ட்' இந்த ஆண்டு ரூ.10 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

காங்கிரஸ்
ஆனால் காங்கிரஸ் குறைந்த அளவிலேயே நன்கொடையை பெற்றிருக்கிறது. அதாவது கடந்த 2020-2021ம் ஆண்டில் கட்சி ரூ.74.5 கோடியை நன்கொடையாக பெற்றிருந்தது. அதேபோல 2021-2022ம் ஆண்டில் ரூ.95.5 கோடியை நன்கொடையாக பெற்றிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 28% அதிகமாகும். 2019-2020ம் ஆண்டில் தேசிய கட்சிகள் ரூ.1,015 கோடி அளவுக்கு நிதியை பெற்றிருந்தன. இது கடந்த 2020-2021ம் ஆண்டில் ரூ.592 (41%) கோடியாக குறைந்தது. ஆனால் இந்த 2021-2022ம் ஆண்டில் இது ரூ.778.7 கோடியாக சற்று அதிகரித்திருக்கிறது. பாஜக, காங்கிரஸ், என்சிபி, திரிணாமுல் காங்கிரஸ், பிஎஸ்பி, சிபிஎம் மற்றும் தேசிய மக்கள் கட்சி என ஏழு கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதர கட்சிகள்
இதில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு அடுத்து தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சிதான் அதிக அளவில் நன்கொடையை பெற்றிருக்கிறது. இக்கட்சி நடப்பாண்டில் ரூ.57.9 கோடியை நிதியாக பெற்றிருக்கிறது. அடுத்து சிபிஎம் ரூ.10 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.43 லட்சமும், தேசிய மக்கள் கட்சி ரூ.35 லட்சத்தையும் நன்கொடையாக பெற்றிருக்கிறது. இதைத் தவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தங்கள் நன்கொடை விவரங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. பாஜக கார்ப்ரேட் நிறுவனங்களிடம் அதிக அளவில் நன்கொடை பெற்று அந்நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.