
இமாச்சல் வெற்றி உற்சாகத்தில் ராகுல் காந்தி.. மீண்டும் தொடங்கியது பாரத் ஜோடோ யாத்திரை
ஜெய்பூர்: கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜடோ யாத்திரையை' மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, தனது தாயாரான சோனியா காந்தியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றதைத் தொடர்ந்து இன்று மீண்டும் ராஜஸ்தானில் யாத்திரையை தொடர்கிறார்.
எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை பலப்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்த நடைப்பயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார்.
கன்னியாகுமரி தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ தொலைவு வரை பயணம் செய்து காஷ்மீர் சென்று சேர்கிறார்.

இடைவெளிக்கு பிறகு
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் நுழைந்த நடைப்பயணத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று சோனியா காந்தியின் பிறந்தநாள் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பதற்காக விடுப்பு எடுத்திருந்தார். இதனையடுத்து 93வது நாளான இன்று மீண்டும் யாத்திரையில் பங்கேற்கிறார். இதற்கு முன்னதாக வியாழக்கிழமை இந்த நடைப்பயணத்தில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஆனால் இன்றைய பயணத்தில் ராகுல்காந்தி மட்டும் தனியாக பங்கேற்கிறார். இப்பயணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பூண்டி மாவட்டத்தின் கேசோராய்பட்டன் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குட்லி கிராமத்தில் தொடங்குகிறது. இங்கிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம் செய்து 30 கி.மீ வரை இம்மாவட்டத்தில் மக்களை ராகுல் சந்திக்கிறார்.

குற்றச்சாட்டு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் ராகுல் பங்கேற்க மாட்டார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக குரல் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சீனா ஆக்கிரமிப்பு, பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் என இக்கூட்டத்தில் காங்கிரஸ் புயலை எழுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கேற்றாற்போல் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் மக்களிடத்தில் ராகுல் கட்சிக்காக ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார். அதேபோல கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்துள்ள நிலையில் பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

முக்கிய முடிவு
எனவே இது தொடர்பான போராட்டங்களையும் காங்கிரஸ் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த போராட்டங்கள் மற்றும் பாரத் ஜடோ யாத்திரை என எல்லாமும் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவுக்கு வந்துவிடும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டுதான் நடக்க இருக்கிறது. எனவே அதுவரை கட்சியை எப்படி மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என்று கட்சியின் மூத்த தலைவர் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டர். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

நம்பிக்கை
அதன்படி, பாரத் ஜடோ யாத்திரைக்கு பிறகு கட்சி சார்பில் மீண்டு ஒரு நடைப்பயணத்தை தொடங்குவது என்பதுதான் அந்த முடிவு. இப்பயணத்திற்கு 'ஹாத் சே ஹாத் ஜோடோ' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாரத் ஜடோ யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறுகிறது. ஆனால், 'ஹாத் சே ஹாத் ஜோடோ' கட்சியின் அனைத்து மூத்த தலைவர்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும். இதில் ராகுல் காந்தியும் பங்கேற்றிருப்பார் என்றும், பாரத் ஜடோ யாத்திரையில் பெற்ற அனுபவங்களை இதில் அவர் பகிர்ந்துகொள்வார் என்றும் கட்சி தலைமை கூறியுள்ளது. இப்பயணத்தை இரண்டு மாத காலமாக திட்டமிட்டிருக்கும் காங்கிரஸ், தேர்தல் நெருக்கமாக வருவதால் கட்சியின் வாக்கு வங்கியை இது இரட்டிப்பாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.