அகமதாபாத் விமான விபத்தில் 242 பேரும் பலி.. உடல்கள் அடையாளம் காண டிஎன்ஏ சோதனை.. எப்படி நடக்கும்?
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி உள்ளனர். பயணிகள் 230 பேர், பணியாளர்கள் 10 பேர் என 242 பேரும் இறந்துள்ளனர். தீயில் கருகிய அவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பரிசோதனை எப்படி நடக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் அடுத்த 8 நிமிடத்தில் விபத்தில் சிக்கியது. அகமதாபாத் விமான நிலையம் அருகே பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி உள்ளனர். ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுபற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமான விபத்து நடந்த இடத்தில் பயணிகளின் உடல்கள் தீயில் கருகிய நிலையில் கிடந்தன. அந்த உடல்களை மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. உடல்கள் கருகியதால் பயணிகளை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது.
இந்நிலையில் தான், பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அகமதாபாத் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த டிஎன்ஏ பரிசோதனை என்பது எப்படி நடக்கும்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இறந்தவர்களின் உடலில் இருந்து டிஎன்ஏ சேகரிக்கப்படும். அதேபோல், விமான பயணிகளின் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ சேகரிக்கப்படும். இந்த டிஎன்ஏக்களை ஒப்பிட்டு உடல்கள் அடையாளம் காணப்படும். பொதுவாக டிஎன்ஏ பரிசோதனை சர்ச்சைகள் ஏற்படும்போது குழந்தைகளின் பெற்றோரை (Parental testing) கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும்.
அதேபோல் குற்றவாளிகளை அடையாளம் காணவும் (Forensic testing) டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் மரபணுவை கண்டறிய (Gene therapy) அதாவது பெற்றோர் அல்லது குழந்தையின் மரபணு நிலை மற்றும் பிறப்பு குறைபாடுகளை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும். அதேபோல் ஒருவரின் வம்சாவளி (Genetic Genealogy) குறித்து ஆராயவும் இந்த டிஎன்ஏ பரிசோதனை என்பது மேற்கொள்ளப்படும்.
இதுதவிர தீவிபத்துகளில் சிக்கி கூட்டம் கூட்டமாக மக்கள் இறக்கும்போது அவர்களை அடையாளம் காணவும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் விமான விபத்தில் சிக்கி உடல் கருகி இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அகமதாபாத் மருத்துவமனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications