சொராபுதீன் என்கவுண்டர் கொலை வழக்கில் அமித் ஷா விடுதலை: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
மும்பை: சொராபுதீன் சேக் எண்கவுண்டர் வழக்கில் பாஜக தலைவர் அமித் ஷாவை விடுதலை செய்து மும்பை சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் இருந்து மும்பைக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாற்றப்பட்டது.
கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கில் அமித் ஷா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 18 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் மீது கிரிமினல் சதி, ஆதாரங்கள் அழிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளும், ஆயுத தடுப்பு சட்டப் பிரிவின் கீழும் சில குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.
சொராபுதீன் சேக் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ ஆகியோர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் தீவிரவாதத் தடுப்பு போலீசாரால் கடத்தப்பட்டு போலி எண்கவுண்டரில் கொலை செய்யப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால், சொராபுதீன் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் ஏ தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், குஜராத்தின் பல முக்கிய தலைவர்களைக் கொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாகவும் குஜராத் போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர்.
2006ம் ஆண்டில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான துள்சிராம் பிரஜாபதி குஜராத் போலீசாரால் எண்கவுண்டரில் கொல்லப்பட்டார். அவர் தப்பிச் செல்ல முயன்றபோது கொன்றதாக குஜராத் போலீஸ் கூறியது.
இந்த 3 கொலைகளிலும் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து 2010ம் ஆண்டில் இவரை சிபிஐ கைது செய்தது. ஆனால், 3 மாதத்தில் இவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமித்ஷா மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் மொத்தம் 38 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தம் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யக் கோரி அமித்ஷா மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமித்ஷா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான சாட்சியம் இல்லாததால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்வதாக இன்று அதிரடியாக அறிவித்தது.
இதன் மூலம் போலி என்கவுண்ட்டர் வழக்குகள் அனைத்திலிருந்தும் அமித்ஷா விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications