ஒரு தண்ணி பாட்டில் 850 ரூபாய்.. "இதைத்தான் அமித்ஷா குடிப்பாராம்" அவருக்காக ரொம்ப தூரத்திலிருந்து..!
பனாஜி (கோவா) : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவா வந்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.850 என கோவா மாநில அமைச்சர் கூறியுள்ளார்.
அமித்ஷா கேட்டதற்காக அந்த தண்ணீர் பாட்டில் பனாஜியில் இருந்து 10.கி.மீ தொலைவில் உள்ள ஊரிலிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா விலை உயர்ந்த தண்ணீர் பாட்டிலை பயன்படுத்தி வருவது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதுகுறித்து விமர்சித்து வருகின்றனர்.
கவனிச்சீங்களா.. “எல்லாமே பிளான் படி நடக்குது” - அமித்ஷா வந்துட்டு போன பின்னாடிதான் இந்த பிரச்சனையே!

கோவா முன்னாள் முதலமைச்சர்
கோவா மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் விவசாயத்துறை அமைச்சருமான ரவிநாயக், அம்மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தையும், குடிநீர் பற்றாக்குறை எந்த அளவிற்கு ஆபத்தாக மாறிவருகிறது எனவும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பேசினார்.
அப்போது, கோவா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.850 என ரவி நாயக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பாட்டில் 850 ரூபாய்
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் ரவி நாயக், "கோவா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். அப்போது அவர் ஹிமாலயன் நிறுவனத்தின் தண்ணீர் பாட்டிலை வரவழைக்குமாறு கூறினார்.
இதற்காக பனாஜியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மபுசா என்ற ஊரிலிருந்து அந்த தண்ணீர் பாட்டிலை வரவழைத்து அவருக்குக் கொடுத்தோம். இந்த பாட்டில் ஒன்றின் விலை ரூ.850 எனத் தெரிவித்தார்.

தண்ணீர் விலை உயர்வு
மேலும் பேசிய அவர், நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும் மினரல் வாட்டர் பாட்டில்களின் விலை கூட ரூ.150 முதல் 160 வரை உள்ளது. இப்படி தண்ணீர் விலை உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் தண்ணீரின் விலை, தங்கம், வைரம் ஆகியவற்றின் விலையும் ஒரே அளவில் இருக்கும் என்று அமெரிக்க நாளிதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. எனவே, தண்ணீரை சேமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சர்ச்சை
தொடர்ந்து பேசிய ரவி நாயக், மாநிலத்தில் எங்கெல்லாம் மலைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் அரசு தடுப்பணைகள் கட்டி தண்ணீரைச் சேமித்து வைக்கலாம். தண்ணீரை பாதுகாப்பது காலத்தின் தேவை எனப் பேசினார்.
அமித்ஷா குடிக்கும் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ. 850 என ரவி நாயக் கூறிய நிலையில், அமித்ஷாவை காட்டமாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.