மேற்குவங்கத்தில் திடீரென ராணுவம் ஏன்... திரிணாமுல் எம்பிக்கள் லோக் சபாவில் அமளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு வங்கத்தில் திடீரென ராணுவத்தை மத்திய அரசு இரண்டு இடங்களில் நிறுத்தியுள்ளது. இதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், லோக் சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், மேற்குவங்கத்தில் ராணுவத்தை நிறுத்த காரணம் என்ன என்று கேள்வி கேட்டு அமளியில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பல்சித், டன்குனி என்ற இரு இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் திடீரென மத்திய அரசு ராணுவத்தைக் குவித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. மேலும், ராணுவத்தை நிறுத்துவதற்கு முன்பு அம்மாநில அரசின் அனுமதியை மத்திய அரசு கோர வேண்டும். இதனையும் மத்திய அரசு செய்யவில்லை.

மேற்கு வங்கத்தில் ராணுவத்தை நிறுத்தியதற்கான முறையான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்காத நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் மம்தா ஈடுபட்டு வருகிறார்.

லோக் சபாவில் அமளி

லோக் சபாவில் அமளி

இந்நிலையில், இன்று தொடங்கிய லோக் சபா கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மேற்கு வங்கத்தில் ராணுவத்தினரை நிறுத்தியது தொடர்பாக கேள்வி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பை தெரிவித்து லோக் சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அமளியில் ஈடுபட்டுள்ளது.

ராணுவம் சுங்கம் வசூல் செய்கிறதா?

ராணுவம் சுங்கம் வசூல் செய்கிறதா?

இதேப் பிரச்சனையை ராஜ்ய சபாவிலும், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் எதிர்த்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினரான குலாம் நபி ஆசாத்தும் கேள்விகளை எழுப்பினார். அப்போது, மேற்கு வங்கத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கத்தை ராணுவம் வசூல் செய்கிறதா என்று கேள்வி எழுப்பினார். மேற்கு வங்கத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

மனோகர் பாரிக்கர் விளக்கம்

மனோகர் பாரிக்கர் விளக்கம்

இதனிடையே, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், மேற்கு வங்கத்தில் ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வழக்கமான ஒன்றுதான் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், இது ஒரு வழக்கமான பயிற்சிக்காகத்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கும் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பழி வாங்கும் நடவடிக்கை

பழி வாங்கும் நடவடிக்கை

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும், இதனைக் கண்டித்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்காகவே மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TMC raises army deployment issue in Lok Sabha today, congress joins with it.
Please Wait while comments are loading...