"நல்லா விளையுற நிலத்தில்.." பெண்களை பற்றி இப்படியா பேசுவது.. சர்ச்சையில் சிக்கிய லோக்சபா எம்.பி
திஸ்புர்: அசாமை சேர்ந்த இஸ்லாமிய எம்பி ஒருவர் இந்துக்களின் திருமணம் குறித்து கூறியுள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அசாம் மாநிலத்தின் துர்பி நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக இருப்பவர்தான் பதுருதீன் அஜ்மல். இவர் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AIUDF) தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் இந்துக்களின் திருமணம் குறித்து அவர் கூறியுள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்
ANI செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டியளிக்கும்போது கூறியதாவது, "இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த பெண்கள் 18 வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், இந்து சமூகத்தில் 40 வயது ஆனால் கூட சில பெண்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. அதன் பின்னர் திருமணம் செய்துகொள்கிறார்கள். பின்னர் எப்படி குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும்?

எதிர்ப்பு
இந்து பெண்கள் இஸ்லாமியர்களின் ஃபார்முலாவை பின்பற்ற வேண்டும். அதாவது அவர்கள் 20-22 வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அல்லது 18-20 வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் பாருங்கள் எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்று. விளை நிலத்தில் விதைகளை விதைத்தால்தான் உங்களுக்கு பலன் கிடைக்கும்" என்று கூறியுள்ளார். இந்த கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. அதாவது இந்து மதத்தில்தான் அதிக விவாகரத்துகள் இருப்பதாக இஸ்லாமிய தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது இந்துக்களின் நாடு என்றும் பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.

வங்கதேசம்
இது குறித்து அசாம் பாஜக எம்எல்ஏ டி கலிதா கூறியதாவது, "நீங்கள் ஒரு இஸ்லாமியர். நாங்கள் இந்துக்கள். இந்நிலையில் நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டுமா? இது ராமரின் தேசம். வங்கதேசம் அல்ல. இஸ்லாமியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எங்களுக்கு எதுவும் இல்லை. இந்த அட்வைஸ் மூலம் உங்கள் தாய் மற்றும் சகோதரிகளையும் நீங்கள் கட்டாயப்படுத்துகிறீர்கள். இது கண்டிக்கத்தக்கது. வங்கதேசத்தில் சென்று இப்படி வேண்டுமானால் பிரசாரம் செய்யுங்கள். இந்த அட்வைஸை இந்துக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அரசியலுக்காக தரம் தாழ்ந்த கருத்தை கூறாதீர்கள்" என்று கூறியுள்ளார்.

திருமண வயது
கடந்த சில நாட்களாகவே இஸ்லாமிய பெண்களின் திருமண வயது குறித்து பெரும் விவாதங்கள் மேலெழுந்துள்ளன. ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமிய பெண்களின் திருமண வயது 15 என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, 'சர் டின்ஷா பர்துன்ஜி முல்லா எழுதிய முகமதிய சட்டத்தின் கோட்பாடுகள்' எனும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள 195வது பிரிவை மேற்கோள்காட்டி இந்த சிறார் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பிரிவில், இஸ்லாம் மதத்தை சேர்ந்த பருவமடைந்த எவரானாலும் திருமண பந்தத்தில் நுழையலாம். பருவமடையாத அல்லது மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் வழிகாட்டுதல்படி திருமணம் செய்யலாம். பருவமடைந்த இஸ்லாமியரின் திருமணம் அவரின் அனுமதியின்றி நடத்தப்பட்டால் அது செல்லாது. பருவமடைதலுக்கு 15 வயது என்பது சான்று என சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications