
சினிமா பாணியில் 1.37 கோடி பணத்தை கொள்ளையடித்த டிரைவர் சிக்கியது எப்படி?
பெங்களூரு: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். மறுநாள் நவம்பர் வங்கிகளுக்கு விடுமுறை, இரண்டு நாட்கள் ஏடிஎம்களுக்கு விடுமுறை விடப்பட்டது. கையில் பணமிருந்து செலவு செய்ய முடியாமல் மக்கள் தவித்துதான் போயினர். மூன்று தினங்களில் நிலமை சீரடைந்து விடும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் 10 நாட்களுக்கு மேலான பின்னரும் நிலைமை சீரடையவில்லை. 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டன.
20 ஏடிஎம்கள் உள்ள பகுதிகளில் 2 ஏடிஎம்களில் பணம் இருந்தாலே அது பெரிய விசயமாக பேசப்பட்டது பணம் இருக்கும் ஏடிஎம்களை தேடி வீதி வீதியாக மக்கள் அலைந்தனர்.
பெங்களூருவில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அதனை அந்த வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் டிரைவராக டொமினிக் ராய் என்பவர் வேலை செய்து வந்தார்.
கட்டுக்கட்டாக பணத்தை பார்த்தும் கைகளில் கூட தொட முடியாத நிலை உள்ளதே என்று கவலைப்பட்ட டொமினிக் கோடீஸ்வரனாக வேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக வங்கிப் பணத்தை கொள்ளையடிப்பதுதான் ஒரே வழி என்று திட்டம் போட்டார் டொமினிக்.

வங்கிப் பணம் கொள்ளை
கடந்த 23ம் தேதி பல்வேறு வங்கிகளில் பணத்தை பெற்று, அதை ஏடிஎம்களில் நிரப்ப நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் 2 காவலாளிகளுடன் சிவக்குமார் புறப்பட்டு சென்றார். அந்த வேனை டொமினிக் ராய் ஓட்டினார். மெஜஸ்டிக் அருகே கே.ஆர். ரோட்டில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு வேன் சென்றதும், திட்டமிட்டமிருந்த படியே ரூ.1.37 கோடி இருந்த வேனை டிரைவர் டொமினிக் ராய் வேகமாக ஓட்டிச்சென்று விட்டார்.

பரபரப்படைந்த பெங்களூரு
பணத்திற்காக மக்கள் வரிசையில் காத்திருந்த நிலையில் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வந்த பணத்துடன் டிரைவர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. டிரைவரையும் வேனையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 24ம் தேதி அதிகாலையில் ரூ.1.37 கோடியுடன் கடத்தப்பட்ட வேன் வசந்த்நகர் அருகே உள்ள தனியார் கல்லூரி முன்பு நின்றது. அந்த வேனில் இருந்து ரூ.45 லட்சம், ஒரு துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.

தலைமறைவான டிரைவர்
மீதிப்பணம் ரூ.92 லட்சத்துடன் டொமினிக் ராய், தனது மனைவி ஈவ்லினையும், 10 வயது மகனையும் அழைத்துக்கொண்டு தலைமறைவானார். டொமினிக் ராயின் சொந்த ஊர் தமிழ்நாடு என்று தெரியவரே அவரை தேடி தமிழ்நாட்டுக்கு வந்தது பெங்களூரு போலீஸ்.

சிக்காத டொமினிக்
டொமினிக் ராய் கேரளாவுக்கு தப்பி சென்றிருப்பதாகவும் ஒரு தகவல் பரவவே ஒரு பக்கம் கேரளாவிற்கும் சென்று தேடினர் ஆனாலும் போலீசார் கையில் சிக்காமல் மூவரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். பெங்களூருவில் இருந்து ஆந்திரா வழியாக அனைவரும் சென்னைக்கு வந்த டொமினிக் சென்னையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கினர்.

கிருஷ்ணகிரிக்கு சென்ற ஈவ்லின்
சென்னையில் வசிக்கும் ஈவ்லினின் சகோதரி வீட்டிற்கு அனைவரும் சென்றனர். அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி ஈவ்லினின் சகோதரி மற்றும் அவரது கணவரிடம் டொமினிக் ராய் கூறினார். பின்னர் சென்னையில் இருந்து அனைவரும் கிருஷ்ணகிரிக்கு சென்றனர். அங்கு சில இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, ஈவ்லினின் சகோதரி, அவரது கணவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

டொமினிக் மனைவி சரண்
26ம் தேதி கேரளா சென்று சாலக்குடிக்கு அங்கே தங்கினர் . ஞாயிறன்று இரவு பெங்களூருவுக்கு வந்த டொமினிக் ராய் கே.ஆர்.புரத்தில் மனைவியிடம் பணப்பையை கொடுத்துவிட்டு மீண்டும் தலைமறைவனார். இந்த நிலையில்தான் டொமினிக் ராயின் மனைவி போலீசில் சரணடைந்தார்.

காட்டிக்கொடுத்த மனைவி
கணவர் எங்கு இருக்கிறார்?, அவர் கொடுத்துச் சென்ற பணம் எவ்வளவு? என்பது தனக்கு தெரியாது என்று ஈவ்லின் போலீசாரிடம்தெரிவித்தார். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டதால் எடிஎம்களில் நிரப்பச்சென்ற ரூ.1.37 கோடியை டொமினிக் கடத்திச் சென்றதாகவும் கூறினார் ஈவ்லின். போலீசாரின் பிடி இறுகவே வேறு வழியின்றி கணவர் மறைந்திருக்கும் இடத்தை காட்டிக்கொடுத்தார் ஈவ்லின்.

சிறை வாழ்க்கை
ஈவ்லின் கொடுத்த தகவலின் படி கேஆர் புரத்தில் மறைந்திருந்த டொமினிக்கை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வங்கி பணத்தை கொள்ளையடித்த டிரைவர், ஒரு வாரத்தில் பிடிபட்டு இப்போது சிறையில் காலம் தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சினிமா பட பாணியில் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது முதல் அதை கையில் வைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் டொமினிக் குடும்பத்தினர்.