பெங்களூர் சட்டசபை தொகுதி அறிமுகம்: மினி தமிழ்நாடு காந்திநகர்! போட்டி எப்படி, வெற்றி யாருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பெங்களூர் சட்டசபை தொகுதி அறிமுகம்: மினி தமிழ்நாடு காந்திநகர்!- வீடியோ

  பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. மே 12ம் தேதி வாக்குப்பதிவு என்பதால், இங்கு கோடை வெயிலையும் தாண்டி தேர்தல் சூடு அனல் பறக்கிறது. குளுகுளு நகரமான, மாநில தலைநகர், பெங்களூரே கூட, தேர்தல் சூட்டுக்கு நடுவே தகிக்கும் நகரமாக மாறிவிட்டது.

  வெறும் கர்நாடக தலைநகராக பெங்களூரை கடந்து சென்றுவிட முடியாது. இந்தியாவின், சிலிக்கான்வேலி என புகழப்படும் பெங்களூர், தமிழ் இளைஞர்கள் பலருக்கும் இரண்டாவது தாய் வீடு.

  வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை பெங்களூரின் பஸ், ரயில் நிலையங்களில் ஷோல்டர் பேக்குகளுடன் சென்னைக்கும், கோவைக்கும், திருச்சிக்கும் அலைமோதும் சாப்ட்வேர் இளைஞர் கூட்டமே அதற்கு சான்று.

  Bangalore assembly constituencies and the winning chance! Have a look on Gandhinagar

  பெங்களூர் வாழ் தமிழர்கள்

  1990களில் துவங்கிய சாப்ட்வேர் புரட்சியால் வேலைவாய்ப்புக்காக வந்துவிட்டு வீக் என்டில் ஊருக்கு செல்லும் இளைஞர் கூட்டம் ஒருபக்கம் என்றால், பல தலைமுறைகளாக பெங்களூரையே வாழுமிடமாக மாற்றி, ரேஷன் கார்டு முதல் ஆதார் கார்டுவரை இங்கேயே பெற்று மண்ணில் மக்களாக தங்களை (கன்னட அமைப்புகள் அப்படி கருதாவிட்டாலும்) மாற்றிக்கொண்டு வாழ்வோர் கணிசமானவர்கள். அவர்கள்தான் இங்குள்ள அரசியல் கட்சியினரின் இலக்கு.

  பெங்களூரில் அதிகம் என்றாலும், மைசூர், சாம்ராஜ்நகர், ஷிமோகா, தும்கூர் ஆகிய மாவட்டங்களிலும், கணிசமாக வாழும் தமிழர்களை புறம்தள்ள முடியாது. 5 வருடங்கள் ஒருமுறை இவர்களை ஒரு அட்சயபாத்திரமாக பார்க்கின்றன கர்நாடகாவிலுள்ள அனைத்து கட்சிகளும். அப்போது எந்த கட்சியும் இவர்களை தமிழர்களாக பார்த்து புறம்தள்ளுவது இல்லை. போட்டியிட தமிழர்களுக்கு அதிகம் வாய்ப்பு தரமாட்டார்களே தவிர, தேர்தல் நேரங்களில் ஓட்டுக்காக வீட்டு வாசலில் நிற்க தவறியதில்லை.

  பெங்களூர் சட்டசபை தொகுதி அறிமுகம்

  இப்படிப்பட்ட ஒரு சூழலில், பெங்களூரிலுள்ள சட்டசபை தொகுதிகள் பற்றிய ஒரு அறிமுகத்தை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம். இன்று முதலில், நகரின் மைய பகுதியாக உள்ள கர்நாடகத்து கோடம்பாக்கம் என புகழப்படும், சினிமா கம்பெனிகள் சூழ்ந்துள்ள காந்திநகர் தொகுதியை பற்றிய ஒரு அறிமுகத்தை உங்கள் முன்னால் வைக்கிறோம்.

  பெங்களூரின் மத்தியிலுள்ள, சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் ஆரம்பிக்கிறது காந்திநகர் சட்டசபை தொகுதி. இந்த தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீராமபுரம், கே.பி.அக்ரஹாரம் ஆகியவை 80 விழுக்காட்டுக்கும் மேல் தமிழர்கள் மட்டுமே வாழும் பகுதிகள் என்றால் உங்களால் நம்ப முடியாது.

  ஸ்ரீராமபுரம் பெயரை கேட்டாலே கன்னட அமைப்பினர் கூட ஏரியாவிற்குள் செல்ல அச்சப்படுவார்கள். 'ரவுடி ஏரியாப்பா' என பொதுவாக ஒரு பெயரை ஈட்டிவிட்டாலும், அங்குள்ள மக்கள் அப்படியெல்லாம் இல்லை. ஒரு சில தமிழர்கள் ரவுடியிசத்தில் கோலோச்சியதால் ஸ்ரீராமபுரம் என்றால் ரவுடிகள் சாம்ராஜ்யம் என்ற பெயர் நீடிக்கிறது. ஸ்ரீராமபுரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் வசித்தாலும், வேலூர் உள்ளிட்ட வட மாவட்ட தமிழர்கள் அதிகம். பெரும்பாலானோர் நடுத்தர அல்லது ஏழைகள்தான்.

  பெங்களூரில் ஒரு நெல்லை

  கே.பி.அக்ரஹாரம் பகுதியோ முழுக்க முழுக்க ஒரு மினி நெல்லை. எங்கே திரும்பினாலும், "ஏலே நீ இங்கையால இருக்க.." என்ற குரல்கள்தான் எதிரொலிக்கும். பெங்களூரின் மையப்பகுதிக்கே நெல்லை இடம் பெயர்ந்து வந்துவிட்டதோ என புதிதாக யாராவது சென்றால் எண்ண வைக்க கூடிய அளவுக்கு, நெல்லை, தூத்துக்குடி, கணிசமான கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வாழும் பகுதி இது. இவர்களில் பெரும்பாலானோர் மிட்டாய், மிக்சர் தயாரிப்பு தொழில் செய்பவர்கள். இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற பெயரில் இவர்கள் தங்களுக்கென்று சங்கம் அமைத்துள்ளனர். சுமார் 140 மிட்டாய் தயாரிப்பு கம்பெனிகள் இந்த குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகிறது.

  என்னதான் பெங்களூரின் மையப் பகுதி என்றாலும் கூட தமிழர்கள் கணிசமாக வாழும் காந்திநகர் தொகுதி தண்ணீர் பஞ்சத்திற்கும், மோசமான சாலைகளுக்கும் பெயர் பெற்ற இடம். இந்த பகுதிகளை பார்த்தவர்கள் இது பெங்களூரில்தான் இருக்கிறதா என அதிர்ச்சியடையும் சூழலில்தான் சுற்றுச்சூழல் பராமரிக்கப்படும். ஆங்காங்கு குப்பை, உடைந்த சாலைகள், நெரிசலான சந்து பொந்துகள் என ஏதோ ஒரு பின்தங்கிய வட இந்திய நகரம் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கின்றன.

  தமிழர்கள் ஓட்டு யாருக்கு?

  1999ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் கடந்த 4 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்று வருவது காங்கிரசை சேர்ந்த தினேஷ் குண்டுராவ். இவர் முன்னாள் முதல்வர் குண்டுராவின் மகன். ஆளும் சித்தராமையா அரசில் அமைச்சர். என்னதான், காந்திநகர் தொகுதி அடிப்படை வசதிகளுக்கே அல்லாடினாலும் தொடர்ந்து இவருக்கே தமிழர்கள் தங்கள் பொன்னான வாக்குகளை அளித்து வருகிறார்கள். கடந்த இரு தேர்தல்களிலும் இவருக்கு எதிராக பாஜகவில் இருந்து அக்கட்சியின் பெங்களூர் மத்திய தொகுதி எம்.பி பி.சி.மோகன் களமிறங்கினார். ஆனால் தோல்விதான் பரிசாக கிடைத்தது. தினேஷ் குண்டுராவ் வெற்றிக்கு தமிழர்கள் வாக்குகள்தான் காரணம் என்பதை அறிந்தே கடந்த முறை, தமிழக பாஜக தலைவர் தமிழிசையை அழைத்து வந்து பி.சி.மோகன் பிரசாரம் செய்து பார்த்தார். ஆனால், தோல்விக்கான வாக்கு எண்ணிக்கைதான் அதிகமாகியதே தவிர குண்டுராவ் வெற்றியை தடுக்க முடியவில்லை.

  தினேஷ்குண்டுராவின் கீழே பணியாற்றும் பிளாக் மட்டத்திலான காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் தமிழர்கள். அவர்கள்தான் இவரது வெற்றியின் தள கர்த்தாக்கள். தமிழர்களோடு இணைந்து பணியாற்ற, குண்டுராவ் அளவுக்கு வேறு வேட்பாளர்களால் இயலவில்லை என்பதால், தொடர்ந்து 5வது முறையாக அவர்தான் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறுகிறது கள நிலவரம்.

  • காந்திநகர் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை: 208,158
  • ஆண்கள்: 1,09,183
  • பெண்கள்: 98,968
  • மூன்றாம் பாலினம்: 7

  2013 சட்டசபை தேர்தல் நிலவரம்:

   வேட்பாளர்
  கட்சி
  ரிசல்ட் வாக்குகள் வாக்கு வித்தியாசம்
   தினேஷ் குண்டுராவ்  காங்கிரஸ்
   வெற்றி  54,968  22,607
   பி.சி.மோகன்
  பாஜக  2வது இடம்  32,361  -

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Here we are bring the picture of the Bangalore assembly constituencies and the winning chance of the candidates. Have a look on Gandhinagar constituency on today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற