பெண்ணை கடத்தி காரில் பாலியல் சித்திரவதை செய்த 6 பேர்: பெங்களூரில் பயங்கரம்
பெங்களூர்: நண்பர்களுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, வீடு திரும்பிய இளம் பெண்ணை ஒரு கும்பல் கடத்தி சென்று பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் பிரேசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ராகினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மங்களூரில் முதுகலை படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, பெங்களூரிலுள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார். பிறகு நண்பர்கள் கலைந்து சென்றபோது, ஆண் நண்பர் ஒருவர் தனது காரிலேயே ராகினியை வீட்டில் கொண்டு சென்றுவிடுவதாக கூறி அழைத்து வந்துள்ளார்.

திடீரென வந்த கார்
ராகினியின் வீடு அமைந்துள்ள அடுக்குமாடு குடியிருப்பு கேட்டுக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு இருவரும் காருக்குள் இருந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரம். இவர்கள் கார் நிறுத்தப்பட்ட இடத்தில் வேறு எந்த வாகனங்களும் ஓடவில்லை. ஆனால் ஒரே ஒரு கார் மட்டும் அதே இடத்தை மூன்று முறை சுற்றி வந்துள்ளது. மூன்றாவது முறை அந்த கார் வந்தபோது, ராகினி அமர்ந்திருந்த காருக்கு முன்னால் வந்து திடீரென பிரேக் போட்டு நின்றுள்ளது அந்த கார்.

காரில் கடத்தல்
எதிரே வந்து நின்ற காரில் இருந்து 6 பேர் கொண்ட வாலிபர் கும்பல் இறங்கி ஓடி வந்து ராகினியை தங்கள் காரில் ஏறுமாறு மிரட்டியுள்ளனர். அவர் மறுக்கவே, ராகினியையும் அவரது நண்பரையும் காரின் பின் சீட்டில் இழுத்து போட்டுவிட்டு, சாவியை பிடுங்கி காரை வலுக்கட்டாயமாக இயக்கிக்கொண்டு அங்கிருந்து பாய்ந்துவிட்டனர். கார் பயணித்துக்கொண்டிருந்தபோது ராகினியிடம் வாலிபர்கள், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

கத்தி முனையில்
சுமார் ஒரு மணி நேரமாக அங்குமிங்கும் சுற்றிவிட்டு, காக்ஸ் டவுன் பகுதியிலுள்ள ரயில்வே பாதை அருகேயுள்ள புதர் மண்டிய இடத்தில் காரை நிறுத்தியுள்ளனர். இதன்பிறகு நண்பரை வெளியே இழுத்து போட்டு அவரிடம் இரு வாலிபர்கள் கத்தியுடன் நின்று கொண்டனர். "எங்களுக்கு ஒத்துழைக்காவிட்டால், உனது நண்பர் கத்தியால் குத்தி கொல்லப்படுவார்" என்று ராகினியை மிரட்டிய அந்த கும்பல், காருக்குள்ளேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

நண்பர்கள் தேடுதல் வேட்டை
15 நிமிடம் கழித்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. இதையடுத்து ராகினியை அழைத்து வீட்டில் கொண்டு வந்துவிட்டுள்ளார் நண்பர். நடந்த சம்பவத்தை நினைத்து இரவு முழுக்க அழுதபடியே இருந்துள்ளார் ராகினி. இருப்பினும், தனது பெற்றோரிடம் இதுகுறித்து அவர் கூறவில்லை. மறுநாள் காலையில், ராகினியின் ஆண், பெண் நண்பர்கள் அனைவரும் பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை தேடும் முயற்சியை தொடங்கியுள்ளனர். அந்த கும்பல் வந்த கார் எண்ணை வைத்து அந்த ஏரியாவில் சுற்றி பார்த்தபோது அந்த, கார் ஒரு வீட்டில் நிற்பதை கண்டுபிடித்தனர்.

போலீசார் அடாவடி
இதையடுத்து நண்பர்கள் அனைவரும் சேர்ந்து, காரின் உரிமையாளரான அந்த பலாத்கார கும்பலை சேர்ந்தவரையும், அவரது நண்பர்களையும் வீட்டிலேயே மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதன்பிறகு ராகினியை அழைத்துச் சென்று பிரேசர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டியுள்ளனர். பாலியல் சித்திரவதை என்று கூறாமல், அசிங்கமாக நடந்துகொண்டனர் என்று புகாரில் தெரிவிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர்.

இழுபறிக்கு பிறகு வழக்கு பதிவு
இதற்கு மசியாத ராகினியின் நண்பர்கள் மீடியாக்களை தொடர்புகொண்டு தகவல் கொடுத்தனர். போலீசாரிடம் நிருபர்கள் தொடர்புகொண்டு விவரம் கேட்டததால், சம்பவம் நடந்து இரு நாட்களுக்கு பிறகு, எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தல், தீஞ்செயலை பலர் சேர்ந்து செய்தல், தவறான நடத்தை, தெரிந்திருந்தே காயப்படுத்தியது, பெண்ணின் கற்பை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல், பலவந்தம் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பெண் நிருபர்களிடம் கூறுகையில், "பலாத்காரத்திற்கு ஈடான செயல்களில் அந்த கும்பல் ஈடுபட்டது" என்று அழுதபடி தெரிவித்தார்.