For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்கள் பணம் வைத்துள்ள வங்கி திவாலானால் உங்களுக்கு எவ்வளவு காப்பீடு கிடைக்கும்?

By BBC News தமிழ்
|
பணம்
Getty Images
பணம்

உங்களிடம் ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை அதில் சேமித்து வைத்திருக்கிறீர்கள் அல்லது வைப்புப் பணமாக (டெபாசிட்) போட்டு வைத்திருக்கிறீர்கள். திடீரென ஒருநாள் அந்த வங்கி திவால் ஆகி விட்டால், நீங்கள் வைத்திருந்த பணம் என்ன ஆகும்?

உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் எவ்வளவு கிடைக்கும்? இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி?

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளில் ஒன்றுகூட திவால் ஆனதில்லை. ஆனாலும், திவாலாகும் விளிம்பில் இருக்கும் சில தனியார் வங்கிகள், கடும் சிக்கல்களை எதிர்கொள்ளும் கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவது அதன் வாடிக்கையாளர்களுக்கு எளிதான காரியமல்ல.

மிகச் சமீபத்திய உதாரணமாக மும்பை பிஎம்சி வங்கியுடைய (பஞ்சாப் அண்ட் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி) கதையைச் சொல்லலாம். 2016இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சியில் தோன்றி பணமதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டது இன்னமும் கூட உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால், அரசு பண மதிப்பு நீக்கம் செய்யமாலே கூட உங்கள் வங்கிப் பணம் பண மதிப்பு நீக்கத்தின் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.

யாருக்கு, எப்போது, என்ன பாதிப்பு?

அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவில் 98 சதவீத வங்கிக் கணக்குகளில் ஐந்து லட்சத்துக்கு மேல் சேமிப்பு பணம் கிடையாது. அவர்கள் சற்றே நிம்மதி அடையலாம்.

ஏனெனில் கடந்த நிதிநிலை அறிக்கையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வாக்குறுதி அளித்தார். அதாவது ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ஐந்து லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யப்படுற தொகைக்கு காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும் என்றார். தற்போது இந்திய அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது.

மேலும் அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு விஷயம் என்னவெனில் எந்தவொரு காரணத்தால் வங்கிகள் சிக்கல்களை எதிர்கொண்டாலும் சரி, தொண்ணூறு நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை திருப்பித் தர ஏற்பாடு செய்யப்படும் என்கிறது அரசு.

ஆகவே, ஏழைகள் வங்கியில் வைத்திருக்கும் பணத்தைப் பற்றி கடும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ஆனால் வங்கி அதி மோசமான சிக்கலைகளை எதிர்கொள்ளும்போது, ஐந்து லட்சத்துக்கு மேல் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் நிலை குறித்து கவலை கொள்வது அவசியம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரும், நிதிசார் விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவருமான அலோக் ஜோஷி.

பி எம் சி வங்கியிடம் தங்கள் பணம் கோரி போராடும் மக்கள்
Getty Images
பி எம் சி வங்கியிடம் தங்கள் பணம் கோரி போராடும் மக்கள்

வங்கியில் வைப்புத் தொகை மூலம் வட்டி பெற்று அதன் மூலம் வாழ்க்கையை நடத்துபவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், முதியவர்கள் அல்லது தனிமையில் வாழும்பெண்கள், பணி ஓய்வுக்கு பிறகு கிடைத்த வருங்கால வைப்பு நிதி, கருணைத் தொகையை டெபாசிட் செய்து அந்த வட்டியை நம்பி வாழ்பவர்கள்.

இவர்களில் சிலர், ரிசர்வ் வங்கியின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளைவிட அரை அல்லது ஒரு சதவீதம் கூடுதலாக வட்டி கிடைக்கும் என்பதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர்.

இப்படித்தான் மும்பை பிஎம்சி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் செய்தனர். அவர்கள் தங்களது முழு வைப்புத் தொகையை திரும்ப பெற பத்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது அவர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி என்னவெனில். அரசின் அறிவிப்பு காரணமாக ஐந்து லட்சம் ரூபாய் பணம் தற்போது கிடைத்திருக்கிறது அல்லது விரைவில் அவர்களுக்கு கிடைக்கவுள்ளது என்பதுதான்.

சமீப ஆண்டுகளில் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்த மற்றொரு வங்கி 'யெஸ்' வங்கி. ஆனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் அரசு அந்த வங்கியின் நிர்வாகத்தை மாற்றியமைத்து வங்கியை மீட்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கி மீது எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு செய்தி வந்தாலும், அது அதன் வாடிக்கையாளர்களை பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது என்பது அலோக் ஜோஷியின் கருத்து.

சரி, நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

முதலீடுகள்
Getty Images
முதலீடுகள்

ஒரே வங்கியில் உங்களது எல்லா பணத்தையும் வைப்புத் தொகையாக வைக்கக் கூடாது எனப் பொருளாதார வல்லுநர்கள் நீண்ட நாட்களாக அறிவுறுத்தி வருகிறார்கள்.

இது குறித்து நிதி நிபுணர் அலோக் ஜோஷி இரண்டு விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

முதலாவது குறைந்தது இரண்டு வங்கியிலாவது டெபாசிட் பணம் இருந்தால், வங்கி நெருக்கடிகளின் போது, குறைந்தபட்சம் ஒரு கதவாவது உங்களுக்காக திறந்திருக்கும்.

இரண்டாவது, நீங்கள் ஒரே வங்கியில் ஏதாவது ஒரு கிளையில் அல்லது வெவ்வேறு கிளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் . அப்போதும் அனைத்து கணக்குகளுக்கும் சேர்த்து 5 லட்சம் ரூபாய் வரைக்கும்தான் காப்பீட்டுப் பலனப் பெற முடியும்.

ஆனால், உங்கள் பெயரில் ஒரு கணக்கு, உங்கள் பெயரும் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் சேர்ந்த கூட்டுக் கணக்கு, உங்கள் பெயரும் உங்கள் குழந்தைகள் பெயர்களும் சேர்ந்த தனி கூட்டுக் கணக்கு, மைனர் குழந்தையின் பெயரில் மைனர் கணக்கு, HUF அதாவது இந்து கூட்டுக் குடும்ப கணக்கு அல்லது உங்கள் வணிகக் கணக்கு என, வெவ்வேறு கணக்குகள் அதே வங்கியில் இருந்தால், அவை ஒவ்வொன்றும் தனித்தனி கணக்காகக் கருதப்படும். எனவே, ஒவ்வொரு கணக்குக்கும் 5 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.

அப்படியும் கூட, ஒரே வங்கியில் அனைத்து கணக்குகளும் இருந்து திடீர் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாத சூழல் வரக்கூடும் என நீங்கள் அஞ்சும் பட்சத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கைத் தொடங்க வேண்டியிருக்கும்.

ஏன் 5 லட்சம் ரூபாய் மட்டும்?

பணம்
Getty Images
பணம்

வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களில் 98 சதவீதம் பேர், ஐந்து லட்ச ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதி வைத்துள்ள நிலையில், அரசாங்கம் ஏன் காப்பீடாக வழங்கும் தொகையை அதிகரிக்கவில்லை எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

வயதானவர்கள், ஒரு வங்கியில கணக்கு வைத்து பராமரிப்பதே சிரமமான விஷயம். அத்தகைய சூழ்நிலையில, ஆபத்தைத் தவிர்க்க அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகம் என்கிறார் அலோக் ஜோஷி.

அப்படி செய்வது அதிக சுமையென அரசாங்கம் கருதினால், வாடிக்கையாளர் தங்களுடைய கணக்கை அதிக தொகைக்கு காப்பீடு செய்ய, காப்பீட்டுக் கட்டணத்தையும் நிர்ணயிக்கலாம்.

அல்லது குறைந்தபட்சம் இந்த காப்பீட்டுத் தொகையை, மூத்த குடிமக்களுக்கு மட்டும் அதிகரிக்கத் திட்டமிடலாம். வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் அத்தகைய பாதுகாப்பு தேவைப்படும் நபர்களை அது பாதுகாக்கும் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
an unlikely event of a bank failing in India, a depositor has a claim to a maximum of Rs 5 lakh per account as insurance cover
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X