8 பேர் உயிரோடு எரித்து கொலை..பற்றி எரியும் மேற்கு வங்கம்! ஆளுநர் தன்கர், மம்தா இடையே முற்றும் மோதல்
கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள், வீடுகளுக்கு தீவைத்து 8 பேரை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பான்ர்ஜிக்கும், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் மோதல் முற்றியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
இந்நிலையில், நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பாது ஷேக் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர்.

8 பேர் எரித்துக் கொலை
இதனால், படுகாயம் அடைந்த பாது ஷேக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பாது ஷேக்கின் ஆதரவாளர்கள், தங்களது எதிர்தரப்பினரின் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைத்தனர். இதனையறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்ற நிலையில், சம்பவ இடத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வன்முறையில் 8 உடல்கள் எரிந்த நிலையில் இருந்தது.

பின்னணியில் திரிணாமுல்
இச்சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன, ஆனால் அதனை அக்கட்சி மறுத்துள்ளது. இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மரணங்கள் "கொடூரமானவை" என்று விவரித்த மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், மாநிலம் கொடூரமான கலாச்சாரத்தின் பிடியில் இருப்பதாகக் கூறினார்.

முற்றும் மோதல்
விவகாரம் முற்றியுள்ள நிலையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தன்கரைக் கேட்டுக்கொண்டார், மேலும் அவரது கருத்துக்கள் மாநில அரசாங்கத்தை புரட்டிப் போடுவதற்கு மற்ற அரசியல் கட்சிகளை தூண்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மம்தா தன்கருக்கு எழுதிய கடிதத்தில், அவரது கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது மற்றும் அத்தகைய கண்ணியமான அரசியலமைப்பு பதவியை வகிக்கும் நபருக்கு தகுதியற்றது என்று கூறினார்.
"உங்கள் பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் அரசியல் மேலோட்டங்களைக் கொண்டிருக்கின்றன, அவை அரசாங்கத்தை உலுக்க மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவை வழங்குகின்றன" என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை கேட்கும் அமித் ஷா
பிர்பூம் மாவட்டத்தில் 8 பேர் உடல் கருகி இறந்து கிடந்ததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து மேற்கு வங்க அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த கொலைகளை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கு வங்க அரசை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொலைகள் குறித்த விரிவான உண்மை அறிக்கையை விரைவில் அனுப்புமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க பாஜக எம்பிக்கள் அமித் ஷாவை சந்தித்து மம்தா ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications