For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி அறிவியல்பூர்வமற்றதா? மருத்துவ வல்லுநர்கள் சொல்வது என்ன?

By BBC News தமிழ்
|
குழந்தைகளுக்கான தடுப்பூசி
triloks / getty images
குழந்தைகளுக்கான தடுப்பூசி

இந்தியாவில் ஜனவரி 3ம் தேதி முதல் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், 'அது அறிவியல்பூர்வமானதா இல்லையா' என்ற வாதங்கள் எழுந்துள்ளன. கோவிட் தொற்று குறையாத சூழலில், அனைத்துத் தரப்பிலும் நோய் எதிர்ப்பாற்றல் உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது' என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள்.

பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

மேலும், ஜனவரி 10 ஆம் தேதி முதல் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்' எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாட்டில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3ஆம் தேதி தொடங்க உள்ளது' என்றார். இதற்காக பள்ளிகளுக்கே சென்று சிறுவர்களுக்கு நேரடியாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்காக வரும் ஜனவரி 1ஆம் தேதி 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக பத்தாம் வகுப்பு அடையாள அட்டையைக் காட்டி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் முடிவு அறிவியல்பூர்வமற்றதா?

இந்நிலையில், குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசியை செலுத்தும் மத்திய அரசின் முடிவு அறிவியல்பூர்வமற்றது' என அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) மூத்த தொற்றுநோயியல் மருத்துவர் சஞ்சய் கே ராய் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவு கூடுதல் பலனைத் தராது' எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். இவர் கோவேக்சின் தடுப்பூசி சோதனைகளின்போது முதன்மை ஆய்வாளராக இருந்தவர்.

கொரோனா
Getty Images
கொரோனா

இதுதொடர்பாகப் பேசியுள்ள சஞ்சய் கே ராய், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ள நாடுகளின் தரவுகளையும் ஆய்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முடிவு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சஞ்சய் கே ராய், பிரதமரின் தன்னலமற்ற சேவைக்காக அவரது பெரிய அபிமானியாக உள்ளேன். ஆனால், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது தொடர்பான அறிவியல்பூர்வமற்ற முறைகளால் தான் அதிர்ச்சியடைந்தாகவும் கூறுகிறார்.

குழந்தைகளிடையே நோய்த் தொற்றின் தீவிரம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அந்த வகையில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு 2 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் சஞ்சய் கே ராய் கூறுகிறார். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கு முன்னர் பிற நாடுகளின் தரவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்மைகள் அதிகமா?

இந்தத் தகவல் மருத்துவ உலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்பக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா , ''இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த 18 வயதுக்கும்கீழ் உள்ளவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயது உள்ளவர்கள்தான். அதனால் அரசு எடுத்துள்ள இந்த முடிவின் மூலம் பதின்ம வயது உள்ளவர்களைப் பாதுகாக்க முடியும்'' என்கிறார்.

தொடர்ந்து பேசியுள்ள என்.கே.அரோரா, ''பதின்ம வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளன. இந்த வயதில் உள்ளவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இவர்களுக்குத் தொற்று ஏற்படும்போது இவர்களது வீட்டில் உள்ளவர்களுக்கும் தொற்று பரவும். ஒமிக்ரான் பரவும் சூழலில் 15 முதல் 18 வயது உடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் நன்மைகளே அதிகம்'' என்கிறார்.

குழந்தைகளுக்கான பாதிப்பு குறைவு

ஒரு குழந்தைக்குத் தடுப்பூசி போடும்போது அதில் சாதக, பாதகங்கள் உள்ளன. வளர் இளம் பருவத்தினருக்கு ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்தினால் வரக் கூடிய தீவிர விளைவுகள் என்பது பத்து லட்சம் பேரில் பத்து முதல் 15 பேருக்கு வரலாம் என சஞ்சய் ராய் கூறுகிறார். பெரியவர்களுக்குத் தடுப்பூசி போடுவதால் 80 முதல் 90 சதவிகிதம் வரையில் இறப்பைக் குறைக்கிறது எனவும் அவர் கூறுகிறார். ஆனால், குழந்தைகளுக்கு கோவிட் தொற்றால் ஏற்படும் பாதிப்பு என்பது குறைவாக உள்ளது. அதிலும், இறப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது'' என்கிறார், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் கல்பாக்கம் வீ.புகழேந்தி.

Covid-19
Getty Images
Covid-19

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், குழந்தைகளுக்குத் தொற்று வராதா என்றால் நிச்சயமாக வரும். ஆனால், நோயின் தீவிரம் குழந்தைகளுக்கு ஏற்படாது என்பதுதான் சஞ்சய் ராயின் வாதம். இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா பாதிப்பு என்பது 4 அல்லது 5 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. குழந்தைகள் இறப்பது என்பது 0.008 என்ற அளவில்தான் உள்ளது. அதேநேரம், எந்தவொரு தடுப்பூசியிலும் 100 சதவிகித பாதுகாப்பு என்பது கிடையாது. கோவேக்சின் பரிசோதனை ஓட்டத்தில் அதன் திறன் எவ்வளவு உள்ளது என்ற ஆய்வில் கலந்து கொண்டவராகவும் சஞ்சய் ராய் இருக்கிறார். அவர் கருத்தின்படி பார்த்தால் அரசு எடுத்துள்ள முடிவு என்பது சாதகமானது அல்ல'' என்கிறார்.

குழந்தைகளை ஏன் முதலில் சேர்க்கவில்லை?

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஜெயந்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். குழந்தைகளுக்கு முதலில் தடுப்பூசி போடாததற்குக் காரணம், கோவிட் தொற்று பரவிய முதல் பத்து மாதங்களுக்குள் அவசரம் மற்றும் அவசியம் கருதி தடுப்பூசியை கொண்டு வந்தனர். இதற்காக மூன்று கட்டங்களாக கிளினிக்கல் ட்ரையல் நடத்த வேண்டும்.

சாதாரணமாக ஒரு தடுப்பூசியானது பயன்பாட்டுக்கு வருவதற்கு மூன்று வருடங்கள் ஆகும். சில தடுப்பூசிகள் ஐந்து ஆண்டுகள்கூட ஆகும். கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகெங்கும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது ஐந்து வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதனை செலுத்தும்போது தொடக்கத்தில் குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உதாரணமாக, பெரியவர்களை நோய் தாக்கினால் அதனை அவர்கள் தாங்குவதற்கான சக்தி இருக்கும். இன்னொரு காரணம், கோவிட் தொற்றைப் பொறுத்தவரையில் 1.5 சதவிகித குழந்தைகளைத்தான் மருத்துவமனையில் அனுமதிக்க வைத்தது'' என்கிறார்.

அரசின் நோக்கம் என்ன?

Covid vaccine children
Getty Images
Covid vaccine children

தொடர்ந்து பேசிய மருத்துவர் ஜெயந்தி, ஒருகட்டத்தில் 18 வயதுக்கு மேல் தடுப்பூசி செலுத்த அனுமதித்தனர். இந்தத் தொற்று குழந்தைகளைத் தாக்கும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது ஏன் அவசியம் என்றால், நாம் பல்வேறு கொரோனா திரிபுகளை நாம் பார்த்து வருகிறோம். இங்கு தொற்றும் குறையவில்லை. நோய் எதிர்ப்பாற்றலை அனைத்து தரப்பிலும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில்தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்திய குழந்தைகள் நல அகாடமியும் (IAP) பரிந்துரை செய்துள்ளது'' என்கிறார்.

ஆனால், அது அறிவியல் பூர்வமற்றது' என சஞ்சய் கே ராய் சொல்கிறாரே? எனக் கேட்டபோது, குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படக் கூடிய நன்மை, தீமை என அனைத்தையும் பார்க்க வேண்டும். பெரும்பான்மையான பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவது என்பது நாடு தழுவிய பிரசாரமாக இருக்கிறது. இதனை சிறுவர்களுக்கு செலுத்துவது என்பது சவாலாகவும் இருக்கப் போவதில்லை.

சொல்லப்போனால், நமது நாட்டில் வளர் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும்போதே ஏகப்பட்ட வதந்திகள் உலவியது. அது மனித இயல்புதான். அதுவும் குழந்தைகளுக்கு தடுப்பூசி என்றால் பெற்றோருக்கு அச்சம் வருவது இயல்பு. ஆனால், அது பாதுகாப்பானது என்பதற்கான தரவுகள் வந்துள்ளன. நிறைய இடங்களில் செலுத்தத் தொடங்கிவிட்டனர். இதுதொடர்பாக எழக்கூடிய கலவையான கருத்துகளில் சஞ்சய் ராயின் கருத்தும் ஒன்று. நாம் தரவுகளின் அடிப்படையிலும் போதிய காலஅவகாசம் ஒதுக்கியும் செயல்படுகிறோம்'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Health experts has said children are being vaccinated with the goal of making everyone immunized. Vaccination of children is scheduled to begin in India from January 3
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X