
விதி மீறல்! பிரதமர் மோடி, அமித்ஷா மீது காங். குற்றச்சாட்டு! தேர்தல் ஆணையம் தலையிட வலியுறுத்தல்
காந்திநகர்: குஜராத் சட்டமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி சுமார் இரண்டரை மணி நேரம் சாலையில் மக்களை சந்தித்துள்ளதாகவும்(roadshow) இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 1ம் தேதி 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து இன்று மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இன்று நடந்த வாக்குப்பதிவில் அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்கு செலுத்தினார். அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
வருவார்.. ஆனால் வரமாட்டார்.. அமித்ஷா, நட்டாவை வைத்து ‛கேம்’ ஆடிய பாஜகவினர்.. குஜராத்தில் ஆக்ரோஷம்

தேர்தல் ஆணையம்
ஆனால் இவர்கள் இருவரும் தேர்தல் விதிகளை மீறிவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது, "வாக்குப்பதிவின்போது அமித்ஷாவுடன் பாஜக எம்பி ஒருவர் இருந்தார். இவர்கள் இருவரும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பாஜக.. பாஜக என கோஷமிட்டுள்ளனர்" என்று பவன் குற்றம்சாட்டியுள்ளார். இது இவ்வாறு இருக்க மறுபுறத்தில் தங்களது வேட்பாளர் தாக்குதலுக்கு உள்ளாகிறார் என பாதுகாப்பு கேட்டும் தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார். தேர்தல் விதி மீறல்களை ஆணையம் கண்டும் காணாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பிரதமர் குறித்து கூறுகையில்,

குற்றச்சாட்டு
"இன்று வாக்குப்பதிவு நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்மாக சுமார் இரண்டரை மணி நேரம் மக்களை சந்தித்திருக்கிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது? இந்த விஷயங்கள் அனைத்தும் அப்பட்டமான தேர்தல் விதி மீறல்கள்தான். எனவே இது குறித்து தேர்தல் ஆணையத்தில் நான் முறையீடு செய்ய இருக்கிறேன். நேற்று எங்களது வேட்பாளர் ஒருவர் 24 பாஜக குண்டர்களால் தாக்கப்படும்போது தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தற்போதும் அதையேதான் ஆணையம் செய்துகொண்டிருக்கிறது. அதேபோல குஜ் பகுதயில் ஏகப்பட்ட சாராய பாட்டில்களை பாஜக விநியோகித்திருக்கிறது. குஜராத் முழுமைக்கும் மதுபானங்கள் தடை செய்யப்பட்டுள்ளது அனைவரும் தெரியும். ஆனாலும் மது ஆறாக பல்வேறு இடங்களில் ஓடியிருக்கிறது" என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

பேட்டி
இன்று காலை பிரதமர் மோடி அகமதாபாத்தின் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளியில் வாக்களித்தார். வாக்குச்சாவடியில் அவருக்கு முன்னாள் மற்றொரு பெண்மணி வாக்களிக்க நின்றுகொண்டிருந்தார். உடனே இவர் பிரதமரை பார்த்ததும் ஒதுங்கி வழிவிட்டு நின்றார். ஆனால் இதனை ஏற்காத பிரதமர் முதலில் நீங்கள் வாக்களியுங்கள் எனும் தொனியில் கைகாட்டினார். இதனையடுத்து அப்பெண்மணி வாக்களித்து முடித்ததையடுத்து மோடி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் வெகு விமர்சையாக நடைபெற்றதாகவும், இதனை சாத்தியமாக்கிய பொதுமக்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

வேட்பாளர்கள்
அதேபோல இளைய தலைமுறையினர் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருந்தார். மாநிலம் முழுவதும் அகமதாபாத், காந்திநகர், மெஹ்சானா, படான், பனஸ்கந்தா, சபர்கந்தா, ஆரவலி, மஹிசாகர், பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, ஆனந்த், கெடா மற்றும் சோட்டா உதய்பூர் என 14 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 2.51 கோடி பேர் வாக்களிக்கின்றனர். மொத்தம் 61 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 69 பேர் பெண் வேட்பாளர்களாவார்கள். அதேபோல 285 பேர் சுயேட்சை வேட்பாளர்களாவார்கள்.