For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தை: செலவுகளை ஏற்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

By BBC News தமிழ்
|
சென்னை உயர் நீதிமன்றம்
BBC
சென்னை உயர் நீதிமன்றம்

இன்று (07-02-2022) இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, அதன் 21 வயது வரையிலான கல்வி, வளர்ப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அந்த பெண். அதற்கான சான்றிதழையும் பெற்றார்.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிடம், மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பம் தரிக்காது என மனுதாரர் முழுமையாக நம்பியுள்ளார். மருத்துவமனை அவருக்கு உரிய முறையில் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்பது தெளிவாகிறது.

எனவே, மனுதாரருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவருக்கு பிறந்த குழந்தைக்கு 5 வயதாகும்போது, அரசு பள்ளி அல்லது தனியார் பள்ளியில் சேர்த்து, இலவச கல்வியை அரசு வழங்க வேண்டும். குழந்தையின் கல்விக்கட்டணம், பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

உணவு உள்ளிட்ட மற்ற வளர்ப்பு சார்ந்த தேவைகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் என கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பட்டப்படிப்பு முடிக்கும் வரை அல்லது 21 வயது எட்டும் வரை அரசு வழங்க வேண்டும். இலவசக் கல்வி வழங்குவதோடு, மனுதாரரின் 3-வது குழந்தையையும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் அரசு சேர்க்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது என, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இரவில் வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை கொன்று எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய நாய்

புதுவையில் இரவில் வீ்ட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை கொன்று எஜமானரின் குடும்பத்தையே நாய் காப்பாற்றியது குறித்து தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மூலக்குளம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரமணி. கல்வித்துறை அதிகாரி. இவரது வீட்டில் ராட் வீலர் வகையை சேர்ந்த 2 வெளிநாட்டு நாய்களை வளர்த்து வந்தனர். அவற்றுக்கு லெனி, மிஸ்ட்டி என பெயரிட்டு அழைத்தனர்.

இந்தநிலையில், மிஸ்ட்டி என்ற நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முகம் வீங்கியும் மிகவும் சோர்வுடனும் காணப்பட்டது.

இதையடுத்து, அந்த நாய்க்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் நாய் சோர்வுடனே இருந்து வந்தது.

இந்தநிலையில், நேற்று வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று ரமணி பார்வையிட்டார். அங்கு பயன்படுத்தாமல் கிடந்த தேங்காய் நார் மெத்தையில் சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இறந்து கிடந்தது. இதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் செல்ல வந்த அந்த பாம்புடன் மிஸ்ட்டி போராடி கொன்று இருப்பதும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால், நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணமும் அப்போது தான் அவருக்கு தெரியவந்தது.

உடனே அந்த நாயை புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது நாய் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கேரள இளைஞரின் தள்ளுவண்டி டீக்கடை: வெளிநாடுகளிலும் கிளை திறக்க திட்டம்

தேயிலை
Getty Images
தேயிலை

கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பைசல் யூசுப் ஆரம்பித்த தள்ளுவண்டி டீக்கடை 'தி சாய் வாலா', விரைவில் வெளிநாட்டிலும் இதன் கிளையை திறக்க உள்ளதாக, இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பள்ளிப்படிப்பை முடிக்காத பைசல், வேலைக்காக அலைந்துள்ளார். ஒரு வழியாக மும்பையில் ஒரு வேலை கிடைத்தது. அதை பற்றிக்கொண்டு அங்கிருந்து துபாய்க்குச் சென்றார். நாட்கள் ஓடின. நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்தில் காஃபி இறக்குமதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஏழு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். ஆனாலும், தேயிலை மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. விதவிதமான தேயிலைகளை, அவற்றின் மணத்தை, சுவையை ஆராய்வதில் ஆர்வம் காட்டினார். ஒரு கட்டத்தில், சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் தோன்றியது.

இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய பைசல், 2018-ம் ஆண்டு இறுதியில் ஆலப்புழாவில் 'தி சாய் வாலா' என்ற பெயரில் தள்ளுவண்டி டீக்கடையை தொடங்கினார். 50 வகையான தேயிலைகள் அவரிடம் உண்டு. இதனால், அவரது கடையில் டீ குடிக்க மக்கள் அலைமோதினர். அது கொடுத்த உற்சாகத்தில், வேறு சில இடங்களிலும் 'தி சாய் வாலா' கிளையை திறக்கஆரம்பித்தார். இன்று அவரது டீக்கடைக்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என, 3 மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. விரைவில் துபாயில் டீக்கடை திறக்க உள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1000 கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளார். ஓமன், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் கிளைகள் திறக்கும் எண்ணத்தில் உள்ளார்.

குறைந்த விலையில், சுத்தமான பானத்தை வழங்குவதன் மூலம் தள்ளுவண்டி டீக்கடையில் டீ அருந்துவதை நல்ல அனுபவமாக மாற்றுவதே தன்னுடைய நோக்கம் என்று அவர் கூறுகிறார் என, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்ம சன்சத் மாநாட்டில் பேசப்பட்டது இந்துத்துவா அல்ல: மோகன் பகவத்

தர்ம சன்சத் மாநாட்டில் பேசப்பட்டது இந்துத்துவா அல்ல என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளதாக, 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஆன்மிகத் தலைவர்களின் மாநாடான தர்ம சன்சத் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய சிலர் சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், 'இந்துத்துவா மற்றும் தேசிய ஒருமைப்பாடு' எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், "தர்ம சன்சத் மாநாட்டில் பேசிய வார்த்தைகள் இந்துத்துவா அல்ல. நான் எப்போதாவது கோபத்தில் ஏதாவது சொன்னால் அது இந்துத்துவம் அல்ல.

வீர் சாவர்க்கரும் கூட, இந்து சமூகம் ஒன்றுபட வேண்டும் என கூறியதும், பகவத் கீதையைப் பற்றியதே அல்லாமல், யாருக்கும் தீங்கு விளைவிப்பது அல்ல" என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Court says state should accept expenses if Baby borns after family planning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X