For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ்? இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?

By BBC News தமிழ்
|
கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரையில் இல்லாத வகையில் நேற்று பாதிப்பின் அளவு 2.73 லட்சமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்குப் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கும் மனித சமூகத்துக்கும் இடையேயான யுத்தம் மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டை விட 2021ஆம் ஆண்டில்தான் அதிகப்படியான மக்கள் மீதான தாக்குதலை இந்த வைரஸ் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவுவதற்கு என்ன காரணம்?

கடந்த 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரேநாளில் மட்டும் 1,761 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அதிகப்படுத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக நேற்று மட்டும் 15,19,486 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டாவது அலையின் வேகம் அதிகமாக இருப்பதற்கு உருமாறிய வைரஸ் ஒரு காரணமாக இருக்கலாம்' எனவும் மருத்துவ உலகினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் (B.1.1.7) கண்டறியப்பட்ட பின்னர், தங்கள் நாடுகளில் இதே பாதிப்பு வந்துவிடக் கூடாது' என்பதற்காக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் போக்குவரத்துகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும், பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் கண்டறியப்பட்டன. மூலக்கூறு ஆய்வில் அலட்சியமா? இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் 18 மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.

கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

ஆனால், இதனால் அதிகமாகப் பரவும் என்பது உறுதி செய்யப்படவில்லை' எனவும் தெரிவித்தது. பிரிட்டனைப் போல வைரஸ் தொடர்பான மூலக்கூறு ஆய்வில் இந்திய அரசு போதிய அக்கறை செலுத்தாமல் இருப்பது தான் பிரச்னைகளுக்குக் காரணம். கொரோனா வைரஸின் மரபணு தொடரை (genome sequencing) அறியும் சோதனைகளை 0.1 சதவிகிதம் என்ற அளவுக்கே இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. புதிய வைரஸ் குறித்து அறிவதற்கு இந்தச் சோதனைகள் போதுமானவை அல்ல" என்கிறார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த வீ.புகழேந்தி.

பிபிசி தமிழுக்காக மேலும் சில விவரங்களை அவர் பட்டியலிட்டார்.

"இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவுவதற்கு இரண்டு காரணங்களை வகைப்படுத்துகின்றனர். முதல் காரணம், 50 சதவிகித மக்களில் தொற்று வந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாகியுள்ளன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் 2 அல்லது 3 மாதங்கள் வரையில்தான் ரத்தத்தில் எதிர்ப்புச் சக்தி புரதம் இருக்கும். இதன்பிறகு ரத்தத்தில் எதிப்பு சக்தி குறையும்போது அவர்கள் மத்தியில் இது வேகமாக பரவும். ஆனால், தொற்று வராமல் விடுபட்ட மக்கள் மாஸ்க் போடுவது, தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதபோது தொற்று பரவும். மருத்துவ நிபுணர்களான பிரபாத் ஜா, சாகித் ஜமீல் போன்றவர்கள், இரண்டாம் அலை தீவிரமாகப் பரவுவதற்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்தான் காரணம்' என்கின்றனர். வெறும் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் இது கூடவில்லை.

கடந்த கொரோனா முதல் அலையில் 98,785 என்பதுதான் உச்சகட்ட பாதிப்பாக இருந்தது. தற்போது பாதிப்பு என்பது 2,73,000 என்ற அளவைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், கொரோனா வைரஸின் அடிப்படைத்தன்மை மாறிவிட்டதுதான்' என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நுரையீரலின் தன்மை கடந்த அலையைக் காட்டிலும் தற்போது குழந்தைகளை கொரோனா வைரஸ் அதிகமாகத் தாக்குகிறது.

கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

அடுத்ததாக, வயிற்று வலி, வாந்தி, பேதி போன்ற அறிகுறிகள் அதிகமாகத் தென்படுகின்றன. முன்பு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளைக் காட்டியது. அதேபோல், நுரையீரல் தன்மைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். இதற்கு முன்பு ஒரு கண்ணாடியை உடைத்தால் கிடைக்கும் தெளிவற்ற பிம்பம் (ground glass opacity) தென்பட்டது.

தற்போது வட்டமாக கோலி குண்டு (Nodular pattern) வடிமைப்பில் உள்ளது என்கிறார்கள். முன்பு ஒரு பக்க நுரையீரலை மட்டுமே பாதித்தது. தற்போது இரண்டு பக்க நுரையீரல்களையும் தொற்று பாதிக்கிறது.

இதனால் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் ஆக்சிஜன் தேவை ஏற்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், "பாதிப்பு அதிகரிப்பதற்கும் இறப்பு அதிகரிப்பதற்கும் 17 நாள்கள் இடைவெளி இருக்கும் என இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் நாளொன்றுக்கு இறப்பு விகிதம் என்பது பத்துக்கும் கீழ் இருந்தது. பின்னர் 10-20 என்ற அளவில் இருந்தது. இப்போது நாளொன்றுக்கு இறப்பு விகிதம் அதிகரித்தபடியே உள்ளது.

இதையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் காரணம் என்கிறார்கள்.

இந்திய அரசின் தவறா?

பிரிட்டனில் இதேபோல் பெருகியபோது தொடக்கத்திலேயே Genomic sequencing எனப்படும் கொரோனா வைரஸின் மரபணு தொடரை ஆய்வு செய்தனர்.

கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

இதன் காரணமாக, உருமாற்றம் அடைந்த வைரஸால்தான் கடந்த அலையைவிட இறப்பு விகிதம் அதிகமாகிறது' எனக் கண்டறிந்தனர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கிறிஸ்துமஸ் கொண்டாடினால் தொற்று அதிகமாகப் பரவும்' எனக் கூறி கட்டுப்பாடு விதித்தார்.

ஜெர்மனி அதிபர் ஏங்கலா மெர்க்கலும், ஈஸ்டர் பண்டிகையின்போது மக்கள் கூடுவதற்குத் தடைவிதித்தார். ஆனால், இந்தியாவில் கும்பமேளாவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதை சரியான முறையில் கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு தவறிவிட்டது" என்கிறார்.

மேலும், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மிகச் சிறிய அளவில்தான் கொரோனா பாதிப்பு இருந்தது. அதுவே, ஏப்ரல் மாதம் 52 சதவிகிதமாக பாதிப்பு உயர்ந்துவிட்டது. பஞ்சாப் மாகாணத்தில் 80 சதவிகிதமும் மகாராஷ்ட்ராவில் 61 சதவிகிதமும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.எம்.ஆரின் பல்ராம் பார்கவா, உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்தான் காரணமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்' என்கிறார். எவ்வளவு நாள் இந்த ஆராய்ச்சி நடக்கும் எனத் தெரியவில்லை. இரட்டை உருமாற்றம் அடைந்த வைரஸ்?தொடக்கத்தில், தொற்று ஏற்பட்ட மக்களில் ஐந்து சதவிகிதம் பேருக்கு வைரஸின் மரபணுத் தொடரைக் கண்டறியும் மூலக்கூறு ஆய்வை நடத்துவோம்' என இந்திய அரசு தெரிவித்தது. ஆனால், 0.1 சதவிகித அளவுக்குத்தான் சோதனையை நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வுக்கு 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளனர். இந்தியாவில் பத்து இடங்களில் இதற்கான ஆய்வு மையங்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஓர் இடத்தில்கூட இல்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் வெளியான செய்தியில், பத்து மாநிலங்களில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இருக்கிறது, அதில் தமிழ்நாடும் ஒன்று' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

இதற்குத் தமிழக அரசு சரியான பதில் அளிக்கவில்லை. இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இங்கே இல்லை' என்கிறார்கள்.கட்டுப்படுத்தும் 3 சி!கொரோனா தொற்றின் வீரியத்தைக் கட்டுப்படுத்த 3 சி' ஐ பயன்படுத்த வேண்டும் என கர்நாடகா கொரோனா தடுப்புப் பிரிவின் உறுப்பினரும் காரணவியல் மருத்துவருமான கிரிதர பாபு கூறுகிறார்.

முதல் சி என்பது கூட்டத்தைத் தவிர்ப்பது (crowd), இரண்டாவது மூடிய அறைகளுக்குள் காற்றோட்டம் இல்லாமல் (closed place) இருப்பதை தவிர்ப்பது, மூன்றாவது, பாதிப்பு உள்ளவர்களை சீக்கிரம் கண்டறிந்து தனிமைப்படுத்துவது (close contact) ஆகியவற்றை முறையாகச் செயல்படுத்த வேண்டும்' என்கிறார்.

இந்தியாவில் எவ்வளவு சதவிகிதம் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் இரண்டாம் அலை ஏற்பட்டது, எவ்வளவு சதவிகிதம் பழைய வைரஸால் ஏற்பட்டது என்பதை அரசு கண்டறிய வேண்டும். ஆனால், அவை சரியாக மேற்கொள்ளப்படவில்லை.உதாரணமாக, கனடா உள்பட பல நாடுகள் மரபணு மாற்றம் நிகழ்ந்து இரண்டாம் அலை ஏற்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், இன்னும் கண்டறிகிறோம்' என இந்திய அரசு தாமதப்படுத்துவது சரியல்ல.

தமிழகத்தில் மூலக்கூறு ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வகம் உடனடித் தேவையாக உள்ளது. மரபணு தொடரைக் கண்டறியும் ஆய்வுகளைத் துரிதப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துவது ஆகியவற்றின் மூலமே இதனைக் கட்டுப்படுத்த முடியும்" என்கிறார் விரிவாக.வடசென்னையில் பாதிப்பு குறைவு ஏன்?!உருமாறிய வைரஸ் காரணமாகத்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகிறதா?' என தமிழக பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

முதல் அலையின்போது, ஊரடங்கு, தனிமனித இடைவெளி, மாஸ்க், சானிடைஸர் எனத் தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தியதால் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இரண்டாவது அலை ஏன் தீவிரமாகப் பரவுகிறது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன" என்கிறார்.தொடர்ந்து பேசுகையில், கொரோனா தொற்றால் முதல் அலையில் பாதிக்கப்படாதவர்கள் எல்லாம் தற்போது பாதிக்கப்படுகின்றனர். தற்போது வடசென்னை போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அங்கு முதல் அலையின்போது கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

அங்குள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமானதும் ஒரு காரணமாக இருக்கலாம். தற்போது நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் தொற்றால் அதிகப்படியாக பாதிக்கின்றனர்.இரண்டாவது அலையால் ஏன் அதிக பாதிப்புகள்?இதற்குக் காரணம், 1000 பேர் வசிக்கும் ஓர் இடத்தில் தொற்று பரவுகிறது என்றால் அதில் 10 சதவிகிதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள், 10 சதவிகிதம் பேர் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவரும் கலந்துதான் இருப்பார்கள். முதலில் பரவும்போது 100 பேரில் 75 பேர் என்பது ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களாக இருந்தனர். மீதமுள்ளவர்கள் இந்த 25 பேரில் இருந்து வருவார்கள்.

இவர்களில் 50 சதவிகிதம் பேரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலையிலும் 30 சதவிகிதம் பேருக்கு கோவிட் கேர் மையங்களில் அனுமதிக்கப்படும் நிலையிலும் 20 சதவிகிதம் பேருக்கு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. முதல் அலையின் விகிதம் இப்படி இருந்தது.இரண்டாவது அலையில், ஆரோக்கியமானவர்கள், உடல்ரீதியாக பாதிப்புள்ளவர்கள் என சரிசமமாக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இயல்பாகவே ஆக்ஸிஜன் தேவைப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் இறப்பு விகிதமும் அதிகப்படியாக இருக்கிறது. நாம் வைரஸை குற்றம் சொல்கிறோம்.

ஆனால், அது அதுவாகவே இருக்கிறது. இதில் டயேரியா ஏற்படுவதை அறிகுறியாகச் சொல்கின்றனர். இதுகுறித்து முதல் அலையின்போதே கூறியிருந்தோம். ஆனால், இது அனைவருக்கும் ஏற்படக் கூடிய முக்கிய அறிகுறி அல்ல. ஒரு சிலருக்கு ஏற்படலாம்.இப்போது கண்ணில் சிவப்பு நிறம் ஏற்படுவதும் கூடுதல் அறிகுறியாக உள்ளது.

கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

அனைத்து வகையான இன்புளூயன்சா வைரஸ்களும் உருமாறும் தன்மை கொண்டவை. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள உருமாற்றத்துக்கும் அதன் காரணமாக எண்ணிக்கை அதிகமாகக் கூறுவதையும் ஏற்க முடியாது. இரண்டாவது அலை பெருகுவதற்குக் காரணம், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகள்தான்.

தொற்று அதிகமாகும்போது பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நம்முடைய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினால் தொற்று குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் தொடர்ச்சியாக, மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. காற்றோட்டமான சூழல், தனிமனித இடைவெளி, மாஸ்க், சானிடைஸர், கைகளைக் கழுவுதல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் போன்றவற்றில் தீவிரக் கவனம் செலுத்தினால் குறையும்" என்கிறார்.அலட்சியம்தான் காரணமா?வைரஸின் மரபணு தொடர் குறித்து ஆய்வு நடத்துவதில் அரசு போதிய அக்கறை செலுத்தவில்லை என்கிறார்களே?' என்றோம்.

“அறிவியல் அறிஞர்கள் அவர்கள் வேலையைச் செய்து வருகின்றனர். அதே வைரஸ் அல்லது உருமாற்றம் அடைந்த வைரஸாக இருக்கட்டும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும். முதல் அலை முடிந்ததும் இனி இது வராது' என நினைத்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக இருந்துவிட்டோம். வைரஸ் உருமாறினால்கூட அதன் தன்மை அப்படியேதான் உள்ளது.இந்தத் தொற்றானது, மருத்துவமனைகளில் அதிகமாக பரவுகிறது.

தேவையில்லாமல் மருத்துவமனைக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஒரே ஒரு ஆரோக்கியமான வயது குறைவான உதவியாளர்தான் நோயாளியின் அருகில் இருக்க வேண்டும். இது காற்றோட்டமான சூழலில் பரவுவதில்லை. இதனைக் கட்டுப்படுத்த நம்மிடம் போதுமான மருந்துகள் உள்ளன.

தடுப்பூசி போடும்போது பெரியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆரோக்கியமாக உள்ளவர்களும் இளைஞர்களும் அவசரம் காட்டத் தேவையில்லை. தங்களது வீட்டில் யாருக்குத் தேவையோ அவர்களுக்குச் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொது சுகாதாரத் துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்களின் கடினமான சூழ்நிலையையும் மனதில் கொண்டு, அவர்களை மனச்சோர்வுக்கு ஆளாக்காமல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து முறையான பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் இதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Why coronavirus is increasing in India?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X