குஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜகவுக்கு வாக்களித்த 2 காங். எம்எல்ஏக்கள் வாக்குகள் செல்லாது என அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் ராஜ்யசபா தேர்தலில் புது திருப்பமாக, கட்சி மாறி வாக்களித்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது பாஜக முயற்சிக்கு பின்னடைவாகும்.

குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்தது பாஜக.

Election Commission meet taking place right now over Congress complaint

இதனால் பெங்களூர் ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரை அக்கட்சி தங்க வைத்து பாதுகாத்தது.

இருப்பினும், இன்று காலை வாக்குப் பதிவு நடைபெற்ற போது 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நாங்கள் பாஜகவுக்குதான் வாக்களித்தோம் என பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தனர். இதனால் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியானது.

எனவே, குஜராத் ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், பாஜகவுக்கு தான் வாக்களித்தோம் என இரு எம்.எல்.ஏக்கள் பகிரங்கமாக பேட்டியளித்தனர். அவர்களது வாக்குகள் செல்லாது என அறிவித்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியது.

இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருந்தது. எனவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வந்தனர். இதற்கு நடுவே காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் டெல்லியில், இப்பிரச்சினை குறித்து அவசரமாக ஆலோசித்து வந்தனர்.

இதன்பிறகு, காங்கிரஸ் குழு தேர்தல் ஆணையத்திற்கு சென்று 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லாது என அறிவிக்க கோரியது. ஆனால் அருண் ஜேட்லி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சந்தித்து 2 எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லும் என அறிவிக்க கோரினர்.

இருமுறை இவ்வாறு அவர்கள் தேர்தல் அதிகாரியை சந்தித்தனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். நள்ளிரவு வரை ஆலோசனை தொடர்ந்தது. பாஜக தலைவர் அமித்ஷா, தேர்தல் ஆணையத்தின் வெளியே வந்து அமர்ந்து ரிசல்டுக்காக காத்திருந்தார். இரவு 11.30 மணியளவில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்தது.

கட்சி மாறி வாக்களித்து, அதை வெளியே சொன்ன இரு காங். எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ரகசிய வாக்கெடுப்பு முறைக்கு எதிராக அவர்கள் நடந்துகொண்டதை காரணமாக கூறி அந்த வாக்குகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, தாங்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக அவ்விரு எம்எல்ஏக்களும் தெரிவித்த வீடியோவை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துவிட்டு இந்த முடிவை அறிவித்தது.

இது காங்கிரசுக்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆனால் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமே மாற்றி ஓட்டு போட்டார்களா, மேலும் சிலரும் அப்படி செய்தார்களா என்பது தெரியவில்லை. ஒருவேளை மாற்றி ஓட்டுப்போட்டு அதை மறைத்து வைத்திருந்தால் காங். வேட்பாளர் அகமது பட்டேல் ராஜ்யசபா செல்வது கேள்விக்குறியாகிவிடும்.

வாக்குகள் எண்ணப்படும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Election Commission meet taking place right now over Congress complaint, EC's decision will come today says Source.
Please Wait while comments are loading...