For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா: 'ஈழவா' சமூகத்துடன் கை கோர்த்து உள்ளாட்சித் தேர்தலில் கால்பதிக்க வியூகம் வகுக்கும் பா.ஜ.க.

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கால்பதிக்க முடியாமல் தத்தளித்து வரும் பாரதிய ஜனதா கட்சி கணிசமான மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஈழவா சமூகத்தின் தலைவரான வெள்ளாப்பள்ளி நடேசன் அண்மையில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைவர்களை சந்தித்து பேசியிருப்பது கேரளா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

கேரளா மாநிலத்தில் 22% இஸ்லாமியர்களும் 19% கிறிஸ்துவர்களும் இருக்கின்றனர். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரியும் மிகவும் வலுவான 'ஆளும் கட்சியாக' மாறி மாறி ஆட்சியில் அமர்ந்து வருகின்றன.

இதனால் பாரதிய ஜனதா கட்சியால் இம்மாநிலத்தில் நுழையவே முடியாத ஒருநிலை இருந்து வருகிறது. கேரளாவில் கால் பதிக்க பல ஆண்டுகளாக பகீரதபிரயத்தனத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் நவம்பர் 2, 5 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஈழவா சமூகத்தின் வெள்ளாப்பள்ளி நடேசனை புதிய கட்சியை உருவாக்க வைத்து அதனுடன் கூட்டணி அமைத்தால் எப்படியும் கேரளாவில் கால்பதித்துவிட முடியும் என்பதுதான் பா.ஜ.க.வின் வியூகம்.

Ezhava's may give BJP a foothold in Kerala?

ஈழவா சமூகம்

கேரளாவில் பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தினர் சுமார் 25%. கேரளாவைப் பொறுத்தவரையில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈழவா சமூகத்தினர் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டனர். சமூக சீர்திருத்தவாதி நாராயணகுருவின் காலத்தில்தான் அனைத்து சமூகத்தினரும் சமம் என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது.

ஈழவர்களைப் பொறுத்தவரையில் கள் இறக்குதல், கயிறு தயாரித்தல் ஆகிய தொழில்களை செய்பவர்கள். இந்த சமூகம் பிற சமூகத்தினரை போல சமத்துவதமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக நாராயணகுரு "ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற எஸ்.என்.டி.பி. யோகத்தை 1903ஆம் ஆண்டு நிறுவினார். அவர் 1928ஆம் ஆண்டு காலமானார்.

வெள்ளாப்பள்ளி நடேசன்

இந்த எஸ்.என்.டி.பி.யோகம் என்கிற அமைப்புதான் ஈழவா சமூகத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய அமைப்பு. இதில் வெள்ளாப்பள்ளி நடேசன் உள்ளே நுழைந்த கதை சுவாரசியமானது.

வெள்ளாப்பள்ளி நடேசன் இளம்பிராயத்தில் மாணவர் காங்கிரஸ் இருந்தவர். மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஏ.கே. அந்தோணி, வயலார் ரவி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். தன்னுடைய 25வயதில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவர். இதன் பின்னர் ஒட்டுமொத்தமாக அரசியலுக்கே முழுக்கு போட்டார். அதே நேரத்தில் கேரளாவில் பிரபலமான ரயில்வே காண்டிராக்டராக உருவெடுத்தார்.

பின்னர் நாராயணகுருவின் கொள்கைகளுக்கு எதிராக மதுபான தயாரிப்பு குறிப்பாக கள்ளுக்கடை வியாபாரத்தில் 'மன்னனாக' கோலோச்சினார். 1990களில் ஈழவா சமூகத்தின் தலைமைபீடமான சிவகிரி மடத்தில் செயல்பட்டு வந்த எஸ்.என்.டி.பி.யோகத்தில் அதிகார சண்டை ஏற்பட்டது. அப்போது அதிகாரத்தில் இருந்த சுவாமி சாஸ்வதிகானந்தா என்பவர் தூக்கி எறியப்பட்டு சுவாமி பிரகாசானந்தா என்பவர் அதிகாரத்துக்கு வந்தார். பின்னர் தூக்கி எறியப்பட்ட சுவாமி சாஸ்வதிகானந்தா முல்லைப் பெரியாறில் மூழ்கி உயிரிழந்தார்.

இதில் சுவாமி பிரகாசானந்தாவுக்கு பக்க பலமாக இருந்தவர்தான் வெள்ளாப்பள்ளி நடேசன். 1996ஆம் ஆண்டு எஸ்.என்.டி.பி.யோகத்தின் செயலராக பதவி ஏற்ற நிலையில் படிப்படியாக இந்த அமைப்பையே தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அத்துடன் ஈழவா சமூகத்தையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இதனால் வெள்ளாப்பள்ளி நடேசன் தேர்தல் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தார். பெரும்பான்மையான ஈழவா சமூகத்தினர் இடதுசாரி கட்சிகளுக்கே வாக்களிப்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

பா.ஜ.க. விரித்த வலை

இந்த பின்னணியில்தான் ஈழவா சமூகத்தை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக 2013 ஆம் ஆண்டும் சிவகிரி மடத்துக்கு சென்றார் மோடி. அதேபோல் எந்த அரண்மனைக்குள் ஈழவா சமூகம் நுழையவே கூடாது என தடை செய்யப்பட்ட அதே திருவனந்தபுரம் அரண்மனையில் வைத்து அச்சமூக தலைவரான வெள்ளாப்பள்ளி நடேசனை கடந்த ஆண்டு சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி. தாம் பிரதமரான பின்னரும் சிவகிரி மடத்துக்கு மீண்டும் சென்றார் மோடி.

அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தியின் முழுமையான வழிகாட்டுதலில் தற்போது புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக வெள்ளாப்பள்ளி நடேசன் அறிவித்துள்ளார்.

3வது அணி

கேரளாவில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி இடதுசாரிகளுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது அணி உருவானது இல்லை. அப்படி உருவானாலும் அது போணியாகாது என்று கூறப்பட்ட நிலையில் ஈழவா சமூகத் தலைவரான வெள்ளாப்பள்ளி நடேசன் தாம் புதிய கட்சி தொடங்கி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலில் 3வது அணியை உருவாக்குவோம் என அறிவித்ததுதான் கேரளா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அதுவும் அண்மையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைவர்களை வெள்ளாப்பள்ளி நடேசன் சந்தித்துவிட்டு திரும்பிய நிலையில் இந்த விவகாரம்தான் கேரளாவில் மைய அரசியலாக இருக்கிறது. அதே நேரத்தில் ஈழவா சமூகத்திலேயே வெள்ளாப்பள்ளி நடேசனுக்கு எதிராக கலகக்குரலும் வெடித்துள்ளது.

அதிர்ச்சியில் உறைந்த இடதுசாரிகள்

வெள்ளாப்பள்ளி நடேசனின் இந்த முயற்சிகளை ஆளும் காங்கிரஸ் போணியாகாது என்கிற வகையில் விமர்சிக்கிறது. ஆனால் இடதுசாரிகளோ மிகவும் அதிர்ந்து போய் உள்ளனர். ஏனெனில் தங்களது வாக்கு வங்கியில் குறைந்தபட்சம் 2% ஈழவா வாக்குகள் குறைந்தாலும் இடதுசாரிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்கிற அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.

இதனால்தான் "முறைகேடான வழிகளில் சம்பாதித்த கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் வெள்ளாப்பள்ளி நடேசன் அதை பாதுகாக்கவே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேருகிறார்" என்று மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் வெள்ளாப்பள்ளி நடேசனின் முறைகேடுகளை இடதுசாரிகளின் அதிகாரப்பூர்வ ஏடுகள் பட்டியல் மேல் பட்டியல் போட்டு பிரசாரம் செய்து வருகிறது.

போணியாகுமா?

அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தலில் கேரளா பா.ஜ.க. - வெள்ளாப்பள்ளி நடேசனின் எஸ்.என்.டி.பி. இணைந்த 3வது அணியை எதிர்கொள்ளப் போகிறது. ஈழவா சமூகத்தினர் ஒற்றுமையாக வாக்களித்தால் பா.ஜ.க.வும் சில இடங்களை அள்ளிவிட வாய்ப்பிருக்கிறது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் 1980களிலும் இப்படி ஈழவா சமூகத்தில் இருந்து சமூக ஜனநாயகக் கட்சி என்ற ஒரு கட்சி உதயமானது. ஒரு சில எம்.எல்.ஏ. சீட்டுகளைப் பெற்று அமைச்சர் பதவி கூட அந்த கட்சிக்கு கிடைத்தது. ஆனால் அக்கட்சி போணியாகமல் கரைந்தே போன வரலாறும் கேரளா மண்ணில் இருக்கிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது.

அக்னிபரீட்சைக்கு தயாரகிவிட்டது கேரளா!

English summary
BJP joined hands with Vellapally Natesan, general secretary of the Sree Narayana Dharma Paripalana Yogam (SNDP) in Kerala and will become the Third front in the state also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X