ஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக, காங். யாருக்கும் பெரும்பான்மை இல்லை.. கிங் மேக்கரான ஜேஜேபி!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் காட்சிகள் எதுவும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் ஜனநாயக் ஜனதா கட்சி, அல்லது சுயேட்சைகள் ஆதரவு அளிக்கும் கட்சியே ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடந்தது.
இதில் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அதிக கவனம் ஈர்க்கிறது. ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது.இங்கு பாஜகதான் ஆட்சி நடத்தி வருகிறது.

வரலாறு எப்படி
2014 இங்கு நடந்த தேர்தலில் 47 சட்டசபை தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அப்போது காங்கிரஸ் 15 இடங்களையும் ஐஎன்எல்டி 19 இடங்களையும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வென்றது.இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேதான் பிரதான போட்டியாகும்.

ஏன் முக்கியம்
டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் மாநிலம் என்பதால் தேசிய கட்சிகள் இந்த தேர்தல் மீது அதிக கவனம் செலுத்துகிறது. இந்திய தேசிய லோக் தள், ஆம் ஆத்மி மற்றும் ஸ்வராஜ் இந்தியா கட்சி, ஜேஜேபி, பிஎஸ்பி, எல்ஜேபி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. மொத்தம் 1169 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை
இங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமான முயன்றது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டு வந்தது. நடந்து முடிந்த தேர்தலில் 61.62% வாக்குகள் பதிவானது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.

தொடக்கத்தில் முன்னிலை
இதில் பாஜக தொடக்கத்திலேயே முன்னிலை வகித்து வந்தது. ஆனால் போக போக போட்டி கடுமையானது. மாலை வரை நெக் டு நெக் போட்டி நடந்தது. கடைசி வரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஹரியானாவில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது.

வெற்றி இடங்கள்
ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆச்சர்யமாக ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும்.

யார்
இதனால் ஹரியானாவில் தற்போது ஜனநாயக் ஜனதா கட்சி மற்றும் சுயேட்சைகள் கிங் மேக்கர்களாக மாறியுள்ளனர். ஜனநாயக் ஜனதா கட்சியை வளைக்க ஒரு பக்கம் காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இன்னொரு பக்கம் சுயேட்சைகளின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டு வருகிறது. இதனால் ஹரியானா அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!