"திடீரென பற்றிய நெருப்பு!" விமான நிலையத்தில் 2 விமானிகள் உடல் கருகிப் பலி! என்னாச்சு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ளது சுவாமி விவேகானந்தா விமான நிலையம். நேற்று (மே 12) இரவு 9.10 மணி அளவில் இந்த ஏர்போட்டில் சத்தீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றுள்ளது.
விமானிகள் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட சமயத்தில் விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை.

விமானப் பயிற்சியின் போது இந்த விபத்து நடந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார். இந்த விபத்தில் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா மற்றும் கேப்டன் ஏபி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மற்றும் சத்தீஸ்கர் அரசு சார்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் "ராய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வருத்தமான செய்தி கிடைத்தது. இந்த விபத்தில், எங்களின் இரு திறமையான விமானிகள் கேப்டன் பாண்டா மற்றும் கேப்டன் ஸ்ரீவஸ்தவா உயிரிழந்தனர். இந்த துக்க நேரத்தில் கடவுள் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வலிமை அளிக்கப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்" என்றார்.