
இமாச்சல பிரதேசத்தில் நூலிழையில் தப்பும் பாஜக..4 இடம்தான் காங்கிரஸ் தோல்வி..இந்தியா டிவி எக்ஸிட் போல்
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளில் பாஜக 35 முதல் 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 26 முதல் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக இந்தியா டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜகவின் ஜெய்ராம் தாகூர் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் இமாச்சல பிரதேச சட்டசபையின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வர உள்ளதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது.
இமாச்சல பிரதேசத்தில் பாஜக நோ.. காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும்.. இந்தியா டுடே எக்ஸிட் போல்

ஒரே கட்டமாக தேர்தல்
அதன்படி இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் கூறியதன் அடிப்படையில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானது. முன்னதாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் விடாப்படியாய் இருக்கும் பாஜக இதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டது. அதேநேரத்தில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டி வருகிறது.

35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் போடியிட்டன. கடந்த மாதம் 12 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரும் வியாழக்கிழமைதான் நடைபெறுகிறது. இமாச்சல பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விவரத்தை காணலாம். அதன்படி இந்தியா டிவி நடத்திய கருத்து கணிப்பில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே ஆட்சியை பிடிக்க பலத்த போட்டி இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக காங்கிரஸ் கடும் போட்டி
அதன்படி, இமாச்சல பிரதேசத்தில் பாஜக 35 முதல் 40 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. இதேபோல காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கு நெருக்கடி தரும் வகையில், 26 முதல் 31 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா டிவியின் கணிப்பு படி பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் தான்.

எந்தெந்த தொகுதியில்..
இந்த தேர்தலில் தற்போதைய முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் அக்னிஹோத்ரி ஹரோலி தொகுதியிலும், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் சிம்லா புறநகர் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். இந்த தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்துடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இதுதவிர மத்திய அமைச்சராக உள்ள அனுராக் தாகூர் ஹமீர்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆவார்.