ஹோலி கொண்டாடிய முகமது ஷமி மகள்.. "தெரிந்தே செய்திருந்தால்.." மோசமாக திட்டிய முஸ்லீம் ஜமாத் தலைவர்!
கொல்கத்தா: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் மகள் ஆய்ரா ஷமி நண்பர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய சம்பவம் விமர்சனத்தை பெற்று வருகிறது. ஷரியத் சட்டங்கள் குறித்து அறிந்து, ஆய்ரா ஷமி ஹோலி பண்டிகையை கொண்டாடி இருந்தால், அது குற்றம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி இஸ்லாமியர் என்பதாலேயே பல்வேறு நேரங்களிலும் குறி வைத்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். அண்மையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது முகமது ஷமி நோன்பு வைக்காமல் மைதானத்தில் கூல் டிரிங்ஸ் குடித்த சம்பவம் சில இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் விமர்சனத்தை பெற்றது.

அதிலும் அனைத்திந்திய இஸ்லாமியர் ஜமாத் அமைப்பின் தலைமர் பரேல்வி, இஸ்லாத்தில் நோன்பு இருப்பது ஒரு கடமை. வேண்டுமென்றே நோன்பை தவிர்த்தால், அவர்கள் பாவம் செய்தவர்களாக கருதப்படுவார்கள். முகமது ஷமி வேண்டுமென்றே நோன்பு இருப்பதை தவிர்த்துள்ளார். இதனால் அவர் ஒரு கிரிமினல் என்று விமர்சித்தார். இது தேசிய அளவில் விவாதமாக மாறியது.
இதனைத் தொடர்ந்து முகமது ஷமிக்கு பலரும் ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் முகமது ஷமியின் மகள் ஆய்ரா ஷமியும் ஹோலி கொண்டாடினார். அதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் வெளியாகியது.
தற்போது முகமது ஷமியின் மகள் ஹோலி கொண்டாடியதை இஸ்லாமிய அமைப்புகள் விமர்சித்துள்ளன. இதுதொடர்பாக அனைத்திந்திய இஸ்லாமிய ஜமாத் தலைவர் மவுலானா ரஸ்வி பேசுகையில், முகமது ஷமியின் மகள் சிறு குழந்தை. அவர் ஏதும் அறியாமல் ஹோலி பண்டிகையை கொண்டாடி இருந்தால், அதில் ஒரு குற்றமும் கிடையாது.
ஒருவேளை அவர் ஷரியத் சட்டங்கள் அறிந்த போதும், ஹோலி பண்டிகையை கொண்டாடி இருந்தால், நிச்சயம் அது குற்றம்தான். இதுதொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். ஷரியத்தில் இல்லாத விஷயங்களை உங்கள் குழந்தைகள் செய்வதை அனுமதிக்காதீர்கள். இந்து மக்களுக்கு ஹோலி மிகப்பெரிய பண்டிகை.
ஆனால் இஸ்லாமியர்கள் ஹோலி கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். ஷரியத் சட்டங்கள் குறித்து அறிந்த போதும் ஹோலி கொண்டாடினால், நிச்சயம் அது குற்றமே. அதேபோல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கும், இந்திய வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக முகமது ஷமிக்கு என் மனதின் அடியாழத்தில் இருந்து வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications