எங்க ஆபிஸ்ல.. அக்னி வீரர்களுக்கு செக்யூரிட்டி பணி தருவோம்.. சர்ச்சையாகும் பாஜக நிர்வாகியின் பேச்சு!
போபால்: பாஜக அலுவலகத்தில் செக்கியூரிட்டி பணிக்கு ஆள் எடுக்க நான் விரும்பினால், அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு வாய்ப்பளிப்பேன் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியுள்ளார்.
கடந்த ஜூன் 14ஆம் தேதி மத்திய அரசு சார்பாக நாட்டில் இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பை வழங்கும் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் கீழ் பணியாற்றும் இளைஞர்கள், இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் பணியில் இருப்பர். 4 ஆண்டுகளுக்கு பின் இதில் 25% பேர் மட்டும் 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணியில் தொடர தேர்வு செய்யப்படுவர். மீதமுள்ள 75% பேர், ஓய்வூதியமின்றி பணியில் இருந்து அனுப்பி வைக்கப்படுவர்.

இதுகுறித்து இந்திய ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆவேசமாக இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முக்கியமாக பீஹார் மாநில ரயில் நிலையங்களில் நடைபெற்ற போராட்டத்தின், ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தில் தேர்வு செய்யப்படவுள்ள வீரர்களின் ராணுவ சேவைக்கு பின், செக்யூரிட்டி வேலை கொடுப்பேன் என்று பாஜக நிர்வாகி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் பாஜக தேசிய செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் கைலாஷ் விஜய்வர்கியா. அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய ராணுவத்தில் ஒழுக்கம் மற்றும் உத்தரவுகளை கேட்டு நடப்பது முக்கியம். ஒரு இளைஞர் 21 வயதில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரராக தேர்வு செய்யப்படுகிறார் என்றால், அவர் 4 ஆண்டுகளுக்கு பின் கையில் ரூ.11 லட்சத்துடன் வெளியே வருவார். அவரின் நெஞ்சில் அக்னிவீரர் என்ற பதக்கம் இருக்கும்.
ஒருவேளை பாஜக அலுவலகத்தில் நான் செக்யூட்டியை நியமிக்கிறேன் என்று வைத்துக்கொண்டால், அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு நிச்சயம் வாய்ப்பளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு பின் ராணுவ சேவையில் இருந்து வெளியேறும் வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் ஏமாற்றப்படக் கூடாது என்று இளைஞர்களும், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 21 வயதில் படிப்பு, சுதந்திரம் என அத்தனையும் இழந்து ராணுவத்தில் சேரும் இளைஞர்கள், திரும்பி வந்த பின் வேலை இல்லாமல் சிரமப்பட கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதுகுறித்த எந்தக் கவலையும் இல்லாமல், பாஜக நிர்வாகி ஆணவமாக பேசியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications