நிருபர் கேட்ட அந்த கேள்வி.. கடுப்பான கே.எல்.ராகுல்.. "நாங்க விளையாடத்தான் வந்திருக்கோம்" என பதிலடி
ஜெய்பூர்: காற்று மாசுபாடு தொடர்பாக நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ராகுல் டென்ஷனாகி விட்டார்.
நாங்கள் கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறோம் என்று காட்டமாக ராகுல் பதிலளித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நாளை தொடங்குகிறது.
இதையொட்டி கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.

பட்டாசுகள்
இந்த போட்டியை ஒட்டி, செய்தியாளர்களை சந்தித்தார் இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல். அப்போது கிரிக்கெட்டை தவிர்த்து வேறு ஒரு கேள்வி நிருபர்களால் முன்வைக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடித்ததால் டெல்லி நகரப்பகுதி காற்று மாசு அடைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதே போலத்தான் ஜெய்ப்பூர் நகரத்திலும் காற்று மாசுபாடு அதிகரித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

காற்றுமாசுபாடு
இந்த நிலையில், காற்று மாசுபாடு இங்கே எப்படி இருக்கிறது என்று ராகுலிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல் அளித்த பதில் இதுதான்: நாங்கள் இன்னமும் வெளியே போய் பார்க்கவில்லை. நேரடியாக தங்குமிடத்தில் இருந்து பேருந்து மூலமாக மைதானத்துக்கு வந்து சேர்ந்தோம். எனவே இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

கையில் இல்லை
காற்று மாசுபாடு மீட்டர் ஒன்றை நான் கையில் வைத்துக்கொண்டு அலையவில்லை. அப்படி வைத்திருந்தால் காற்று எவ்வளவு மாறுபாடு அடைந்துள்ளது என்பதை பார்த்து சொல்லிவிடுவேன். ரொம்ப மோசமாக பாதிப்பு இருக்காது என்று நான் நம்புகிறேன். நாங்கள் இங்கே வந்திருப்பது கிரிக்கெட் விளையாடுவதற்காக. இவ்வாறு கே.எல்.ராகுல் தெரிவித்தார் .

விராட் கோலி கோபம்
நிருபர்களுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காரசார பதிலை பரிமாறிக்கொள்வது சமீபகாலத்தில் இது இரண்டாவது முறையாகும். அரபு எமிரேட்சில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போதைய கேப்டன் விராட்கோலி. அவரிடம் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர், ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு இஷான் கிஷனை அணியில் சேர்த்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி வாங்கிக் கட்டிக் கொண்டார். ஏனென்றால் விராட் கோலி சிரித்தபடி, தலையில் கை வைத்துக்கொண்டு, பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு இப்படி ஒரு பதிலை அளித்தார். உங்களுக்கு சர்ச்சை வேண்டும் என்றால் முதலிலேயே சொல்லி விடுங்கள். அதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட கேள்விகளை கேட்காதீர்கள், என்று விராட் கோலி பதிலளித்தார். இப்போது ஜெய்ப்பூரில் காற்று மாசு தொடர்பாக கேள்வி எழுப்பியதால் ராகுல் காட்டமாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications