For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

India vs Pakistan: பாகிஸ்தான் உடனான தோல்வியால் இனி என்ன ஆகும்?

By BBC News தமிழ்
|
India vs Pakistan: What will happen to men in blue in T20 WC
Getty Images
India vs Pakistan: What will happen to men in blue in T20 WC

இழப்பதற்கு இனி ஏதும் இல்லை; இது பாகிஸ்தானின் நிலை. ஏனெனில் அக்டோபர் 21-ம் தேதி இந்திய நேரப்படி கிட்டத்தட்ட இரவு 11 மணிவரையில் ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட இந்திய அணியை பாகிஸ்தான் சாய்த்தது கிடையாது.

ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றாலும் பெரிய சிக்கல் இல்லை; தொடர்ச்சியாக உலகக் கோப்பைத் தொடர்களில் 12 முறை இந்தியாவிடம் தோற்ற அணி எனும் புள்ளிவிவரம் 13 என மாறும் அவ்வளவுதான்.

ஆனால் இந்திய அணிக்கோ பாகிஸ்தானை வீழ்த்தியே ஆகவேண்டும் எனும் அழுத்தம். தோல்வியுற்றால் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த அணி என வரலாற்றில் பதியப்படும்.

அது போக, விராட் கோலி டி20 ஃபார்மெட்டில் அணித்தலைவராக வழிநடத்தும் கடைசி தொடர், கிட்டத்தட்ட பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கடைசி தொடர்; ஒரு ஆலோசகராக தோனிக்கு முதல் தொடர், இப்படி இத்தொடரில் இந்தியாவுக்கு பல அழுத்தங்களும் இருந்தன.

புள்ளிவிவரங்கள் ஒருபுறமிருக்க இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு எதிராக உள்நாட்டில், குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் அபிமானிகள் என அறியப்படுபவர்கள் சிலர் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து கண்டித்தார்கள். அது தேசநலனுக்கு எதிரானது என கொக்கரித்தார்கள்.

ஒருபுறம் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் மண்ணில் விளையாட முடியாது என விலகிச் சென்றுவிட, சர்வதேச போட்டிகளில் வலுவான அணிகளுடன் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தது பாகிஸ்தான்.

அதேவேளை, இந்திய வீரர்கள் கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வந்தார்கள். உலகக் கோப்பைக்கு சிறந்தமுறையில் தயாராகும் வகையில் அரபு மண்ணில் நடந்த ஐபிஎல் தொடர் கைகொடுத்தது.

பாகிஸ்தான் உலகக்கோப்பை தொடர்களில் இன்னொரு முறை தோற்றுப்போவதற்கு எதற்கு விளையாட வேண்டும் என இந்தியா தரப்பில் கேலி குரல்கள் எழுந்தன. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூட இப்படிச் சொல்லி இருந்தார். மறுபுறம் இந்தியாவை வென்றால் பரிசு மழை என பாகிஸ்தான் மண்ணில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா vs பாகிஸ்தான்
Getty Images
இந்தியா vs பாகிஸ்தான்

இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோலியும் சரி, பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் பாபர் அசமும் சரி, இதை மற்றுமொரு போட்டி என்கிற கோணத்திலேயே பார்க்கவிரும்புவதாக தெரிவித்திருந்தனர். வார்த்தை போர்கள் எதுவும் இல்லை.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கலாம், ஆனால் போட்டி நடப்பதற்கு முன் தேவையில்லை. 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை நினைவில் வைக்க வேண்டும். இரு அணி ரசிகர்களும் போட்டி முடிந்தபிறகு கொண்டாட்டத்தை தொடரலாம் எனக்கூறி இருந்தார். மோக்கா மோக்கா விளம்பரம் உள்ளிட்டவற்றை குறித்தே தனது கருத்தை அப்படி வெளிப்படுத்தி இருந்தார்.

இத்தகைய சூழலில்தான், போட்டி நாள் வந்தது. விராட் கோலி டாஸை சுண்டினார்; பாகிஸ்தான் அணித்தலைவர் வென்றார்; பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். டாஸ் நமது கையில் இல்லை என்றார் விராட் கோலி.

அந்தபுள்ளியில் இருந்து ஆட்டம் முடியும் வரை, பாகிஸ்தானே முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முடிவில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது பாகிஸ்தான்.

உலகக்கோப்பை டி20 வரலாற்றிலேயே 150 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை துரத்தி ஒரு விக்கெட் கூட இழக்காமல் வென்ற முதல் அணி பாகிஸ்தான் தான்.

பாகிஸ்தானின் வெற்றிக்கு கிரிக்கெட் உலகில் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. இந்திய வீரர்களான ஷேவாக், ஹர்பஜன் உள்ளிட்ட பலரும் கூட பாகிஸ்தானுக்கு தங்களது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்கள்.

வலுவான அணியாக கருதப்பட்ட இந்தியா தோல்வியடைய காரணமாக அமைந்தது என்னென்ன?

டாஸ்

டாஸ் சுண்டும் விராட் கோலி
Getty Images
டாஸ் சுண்டும் விராட் கோலி

டாஸில் வென்றவுடனேயே முதலில் பனித்துளிகளை பற்றிக் குறிப்பிட்டிருந்தார் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் ஆசம். தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தம் ஏற்படுத்த முயற்சிப்போம் என்றார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அப்போது பேசும்போது இலக்கை நிர்ணயிக்கும் பணியைச் செய்வதில் மகிழ்ச்சியே. ஆனால் நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சையே தேர்ந்தெடுத்திருப்போம் என்றார். டாஸ் என்பது உங்கள் கையில் கிடையாதல்லவா என்றார்.

ஆனால் ஆட்டம் முடிந்தபிறகு தோல்விக்கான காரணங்களில் பனித்துளிகளையும் குறிப்பிட்டுச் சொன்னார் விராட் கோலி.

ஷாஹீன் அஃப்ரிடி அபாரம்

ஷாஹீன் அஃப்ரிடி
Getty Images
ஷாஹீன் அஃப்ரிடி

பாகிஸ்தான் அணிக்கு எப்போதுமே ஐசிசி தொடர்களில் சிம்மசொப்பனமான வீரர்களில் ஒருவர் ரோகித் ஷர்மா. ஆனால் அவருக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவர்கள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் தான்.

இன்றைய ஆட்டத்தில் ரோகித் தனது கணக்கை துவங்க ஆரம்பிக்கும் முன்னரே, அதாவது அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

மிடில் ஸ்டம்பை தகர்த்தெறியும் வண்ணம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி வீசிய யார்க்கருக்கு ரோகித்தின் விக்கெட் பலியானது.

முதல் ஓவரிலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாகிஸ்தான், தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்பட்டது. ரன்களை கட்டுப்படுத்தும் வண்ணம் ஃபீல்டர்கள் கிடுக்கிப்பிடி போட்டனர். முதல் ஓவரிலேயே அணித்தலைவர் கோலி களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒருபுறம் இடது கை வேகப்பந்து வீச்சாளரை வைத்து விக்கெட்டைத் தகர்க்க மறுபுறம் அவருக்கு துணையாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிமை அழைத்து சூழல்வலை அமைத்துக் குடைச்சல் கொடுத்தார் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசம்.

முதல் ஓவரை வீசிய அதே துடிப்போடு தனது இரண்டாவது ஓவரை வீச வந்தார் ஷாஹீன். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஷாஹீன் வீசிய இன்ஸ்விங்குக்கு இரையானார் இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல்.

இந்திய ரசிகர்களுக்கு பேரிடி. அப்போது ஆறு ரன்களுக்கு இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தை தன்னம்பிக்கையுடன் சிக்சருக்கு பறக்கவிட்டார் சூரியகுமார் யாதவ்.

கோலியும் ஷாஹீன் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸர் வைத்து தெம்புடன் இன்னிங்ஸை தொடர முயன்றார். அப்போது பவர்பிளேவின் கடைசி ஓவரை வீசிய ஹசன் அலி, சூரியகுமார் யாதவை பெவிலியனுக்கு அனுப்பிவைக்க, பவர்பிளே முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.

அப்போது கோலியுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இணைந்தார். ஆனால், அதுவே இந்திய அணியின் கடைசி வலுவான கூட்டணி.

மிடில் ஆர்டர் சொதப்பல்கள்

விராட் கோலி
Getty Images
விராட் கோலி

இந்திய அணி பாகிஸ்தான் உடனான போட்டியில் இரு ஆல்ரவுண்டர்கள் உடன் விளையாடியது. ஒருவர் ரவீந்திர ஜடேஜா மற்றொருவர் ஹர்திக் பாண்ட்யா.

ஹர்திக் பாண்ட்யாவை ஒரு பேட்ஸ்மேனாகவே அணியில் சேர்த்திருப்பதாக விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் அவரது முடிவு பெரிய பலன் தரவில்லை.

ஏனெனில், ஹர்திக் பாண்ட்யா பந்துவீசப்போவதில்லை எனும்போது, அவர் பேட்டிங்கிலும் சிறந்த பார்மில் இல்லாத சூழலில் பேட்ஸ்மேனாக களமிறக்கியது இந்திய அணி. அதற்காக இஷான் கிஷன் வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இஷான் கிஷன் தான் விளையாடிய கடைசி இரு போட்டிகளில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், மும்பை அணியின் கடைசி லீக் போட்டியில் பந்துவீச்சில் வலுவான அணி என கருதப்படும் ஹைதரபாத் அணியை துவம்சம் செய்தார்.

அவர் சந்தித்தது 32 பந்துகள் தான். ஆனால் அதில் 11 பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி ஓடின, நான்கு பந்துகள் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்தன. அந்த போட்டியில் 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து மிரட்டி இருந்தார்.

அதேபோல, கடந்த அக்டோபர் 18-ம் தேதி நடந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை அணியை துவைத்து எடுத்து 46 பந்துகளில் 70 ரன்கள் விளாசி இருந்தார்.

ஹர்திக் பாண்ட்யா பந்துவீசுவாரா என்பது சந்தேகம் எனும் சூழலில், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷனை புறக்கணித்து, பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்ட்யாவை களமிறக்கிய உத்தி கோலிக்கு இம்முறை பலனளிக்கவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டதில் பந்த்துக்கு பெரும் பங்குண்டு. அவர் ஹசன் அலி ஓவரில் அனாயாசமாக இரு சிக்ஸர்கள் வைத்தார். ஆனால் பெரிய ஸ்கோர் குவிக்கும் முன்னர் 39 ரன்களிலேயே ஆட்டம் இழந்தார்.

கைவசம் விக்கெட்டுகள் இல்லாததால் இந்திய அணி கடைசி ஓவர்களில் அதிரடி காட்ட முடியவில்லை.

விராட் கோலி அரைசதமடித்து அவுட் ஆனார். அவர் 49 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வழியாக கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் முதல் முறையாக விராட் கோலி விக்கெட்டை பாகிஸ்தான் வீழ்த்தியது. அவரது விக்கெட்டை வீழ்த்தியவரும் ஷாஹீன் தான்.

ஜடேஜா, பாண்ட்யா ஜொலிக்காத நிலையில் 20 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது இந்திய அணி.

பாகிஸ்தான் ஆட்டத்தில் விராட் கோலி தனது கால் நகர்த்தல்கள் மற்றும் முன் நகர்ந்து, பந்து இன்ஸ்விங் ஆவதற்கு முன்பே விளாசும் உத்தி மூலம் தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டதோடு இந்திய அணி கெளரவமான ரன்களை எட்ட உதவினார்.

பாகிஸ்தான் வீரர்களின் நேர்த்தியான ஆட்டம்

பாகிஸ்தான் பேட்டர்கள்
Getty Images
பாகிஸ்தான் பேட்டர்கள்

152 ரன்கள் எடுத்தால் வரலாற்றில் முதன்முறையாக ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்தியாவைச் சாய்க்கலாம் எனும் இலக்கோடு களமிறங்கிது பாகிஸ்தான்.

தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வானும், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசமும் களமிறங்கினர்.

முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அதில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் வைத்து கச்சிதமாக ஆட்டத்தை தொடங்கியது ரிஸ்வான் - பாபர் இணை.

இரண்டாவது ஓவரை ஷமியிடம் கொடுத்தார் கோலி - பலனில்லை. மூன்றாவது ஓவரை பும்ரா வீசினார் - விக்கெட் விழ வில்லை.

நான்காவது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தியை அழைத்தார். அவரால் ரன்களை கட்டுப்படுத்த முடிந்ததே தவிர இணையை பிரிக்க முடியவில்லை.

ஆரம்ப ஓவர்களில் விக்கெட் வேட்டையை தொடங்கவேண்டும் எனும் முனைப்போடு முதல் நான்கு ஓவர்களில் நான்கு பேரை பந்துவீச வைத்த உத்தி, பலன் தரவில்லை. பவர்பிளே முடிவிலேயே விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது இந்த இணை.

பந்துவீச்சாளர்கள் மாறிக்கொண்டிருந்தார்களே தவிர இந்த இரு இணையும் உடும்புப்பிடியாய் விக்கெட்டை காத்துக் கொண்டிருந்ததால், ஆட்டம் அதிவேகமாக பாகிஸ்தான் பக்கம் நகரத் தொடங்கியது.

ஒரு ரன் அவுட்டில் இருந்து நடுவரின் தீர்ப்பு ஒன்றால் முகமது ரிஸ்வான் தப்பிப்பிழைத்தார். அதைத்தவிர இந்தியாவுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் இந்த இணை வழங்கவே இல்லை. குறிப்பாக அனைத்து பந்துவீச்சாளர்களையும் பாரபட்சமின்றி தவறான பந்துகளை வீசினால் தண்டித்தார்கள்.

நிதானமாக நின்று விளையாடி, 18வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து வைத்தது இந்த இணை. இரு வீரர்களும் அரை சதம் விளாசினர். ஷமி வீசிய பதினெட்டாவது ஓவரில் முதல் ஐந்து பந்துகளிலேயே 17 ரன்களை இவ்விருவரும் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாக்கூர், அனுபவ வீரர் அஷ்வின் வெளியே அமர்ந்திருக்க, இத்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அசைக்க முடியாமல் தவிக்க, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் உள்ளது. இன்னும் ஸ்காட்லாந்து, ஆஃப்கானிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து அணிகளுடன் விளையாடவுள்ளது. இந்த நான்கில் இன்னும் ஒரு தோல்வி ஏற்பட்டால் கூட இந்திய அணியின் அரை இறுதி கனவு மங்கிவிடும் வாய்ப்புண்டு.

இத்தகைய சூழலில் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. மறுபுறம் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை நெருங்க முதல் அடியை வெற்றிகரமாக எடுத்துவைத்துவிட்டது.

போட்டி முடிந்தபிறகு பேசிய விராட் கோலி இது இந்த தொடரில் எங்களுக்கு முதல் போட்டி. கடைசி போட்டியல்ல என குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
India vs Pakistan: What will happen to men in blue in T20 WC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X