For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு வருவதற்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருப்பது சரியா?

By BBC News தமிழ்
|
தமிழ்நாடு
Getty Images
தமிழ்நாடு

பொது இடங்களுக்கு வருபவர்கள் கொரோனாவை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தடுக்க, அவர்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்பதை அந்தந்த இடத்தின் பொறுப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென பொது சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தடுப்பூசி போட விரும்பாதவர்களின் நிலை என்ன?

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நவம்பர் 18ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்தச் சுற்றறிக்கையில் பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதைக் கட்டாயமாக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

"கோவிட் - 19 தொற்று நோயை, அரசுக்கு தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த நோய் பரவுவதைத் தடுக்க பெருந்தொற்றுத் தடுப்புச் சட்டம் 1897ன் கீழ் விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படியே பொதுமக்கள் அனைவரும் இடைவெளிவிட்டு நிற்பது, முகக் கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றும்படி கூறப்பட்டுள்ளனர்.

1939ஆம் ஆண்டின் பொது சுகாதாரச் சட்டத்தின்படி பொது சுகாதார நிலையை மேம்படுத்த பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் சில நடவடிக்கைகளை பரிந்துரைத்து அவற்றைப் பின்பற்றச் சொல்ல முடியும்.

அதன்படி, தனக்கு நோய் இருப்பதாகக் கருதும் எந்த ஒரு நபரும் தன்னிடமுள்ள தொற்றுநோயை, பின்வரும் இடங்களுக்கு வருவதன் மூலம் மற்றவருக்குப் பரப்பக்கூடாது. அந்த இடங்கள்:

1. தெரு அல்லது பொது இடம்.

2. மார்க்கெட், தியேட்டர் அல்லது வேறு பொழுதுபோக்கும் இடம்.

3. பள்ளி, கல்லூரி, விளையாட்டு மைதானம் போன்ற இடங்கள்.

4. ஹோட்டல், ஹாஸ்டல், தங்கும் விடுதிகள், சத்திரங்கள், கிளப்கள்.

5. தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவை.

தடுப்பூசிகளை, தடுப்பு மருந்துகளைக் கட்டாயமாக்கும் உரிமை பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கு இருக்கிறது. ஆகவே, மருத்துவ சேவையின் துணை இயக்குனர் மேலே குறிப்பிட்ட இடங்களின் உரிமையாளர்கள், பராமரிப்பாளர்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு வருபவர்கள் கோவிட் - 19க்கான தடுப்பூசியை செலுத்தியிருக்கிறார்களா என்பதை அவர்கள் உறுதிசெய்யும்படி சொல்லவேண்டும்" என அந்தச் சுற்றறிக்கை கூறியது.

கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

இது குறித்து பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகத்திடம் பொது இடங்களுக்கு வருவதற்கு தடுப்பூசி கட்டாயமா எனக் கேட்டபோது, "தடுப்பூசி போட்டிருப்பவர்கள்தான் வருகிறார்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அந்தந்த இடங்களின் உரிமையாளர்களுக்குத்தான் என்று சொல்லியிருக்கிறோம். எந்த இடத்திலும் கட்டாயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை" என்று தெரிவித்தார்.

திரையரங்குகள் போன்ற இடங்களில் அதன் நிர்வாகம் இதனைக் கவனிக்க முடியும். ஆனால், கோவில், மார்க்கெட் போன்ற இடங்களில் எப்படிச் செய்வது எனக் கேட்டபோது, "ஒவ்வொரு இடத்திற்கும் பொறுப்பாளர்கள் இருப்பார்கள் அல்லவா? அது அவர்களுடைய பணி" எனத் தெரிவித்தார் செல்வவிநாயகம்.

இம்மாதிரியான தடுப்பூசிகள் போட்டிருப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தகுந்த சட்டப் பிரிவுகள் அதிகாரமளிப்பதாகவும் அவற்றை அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகவும் செல்வவிநாயகம் கூறனார்.

ஆனால், இந்த நடவடிக்கை தடுப்பூசி போட விரும்பாதவர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. "தடுப்பூசி போட விரும்பாமல் மாற்று மருத்துவத்தை ஏற்றிருப்பவர்கள் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீதம்தான் இருப்பார்கள். அவர்களை அவர்கள் விருப்பப்படி வாழ விடவேண்டும். இது எங்கள் உடல். அதனை எப்படி பாதுகாக்க வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும். எல்லோருமே உயிர் வாழத்தானே விரும்புவார்கள்? தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கே வரமுடியாதபடி செய்து, அதனைக் கட்டாயப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு. இது சரியல்ல" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணன்.

தடுப்பூசி போடாதவர்கள், பொது இடங்களுக்கு வரும்போது நோயைப் பரப்புபவர்களாக மாற மாட்டார்களா என்று கேட்டால், "யாரெல்லாம் ஊசி போடுகிறார்களோ அவர்கள் மூலமாகத்தான் நோய் பரவுவதாக கருதுகிறோம்" என்கிறார் அவர்.

கொரோனா பரிசோதனை
Getty Images
கொரோனா பரிசோதனை

ஆனால், அரசின் உத்தரவை வெகுவாக வரவேற்பதாகச் சொல்கிறார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத். "இது மிகவும் வரவேற்க வேண்டிய உத்தரவு. தமிழ்நாட்டில்தான் தடுப்பூசிகளுக்கு எதிராக மனப்போக்கு பெரிய அளவில் இருக்கிறது. இந்தியாவில் 7 சதவீதம் பேருக்கு தயக்கம் இருக்கிறதென்றால் தமிழ்நாட்டில் 17 - 25 சதவீதம் பேருக்கு அந்தத் தயக்கம் இருக்கிறது. இதனால்தான் மருத்துவப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்றாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கிறார்கள். முதல் தவணை போட்டுக்கொண்டவர்கள் இரண்டாவது தவணைக்கு மறுக்கிறார்கள்.

தடுப்பூசி போடாதவர்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். நியாய விலைக் கடைகளிலோ, டாஸ்மாக் கடைகளிலோ பொருட்களை வழங்கக்கூடாது. தடுப்பூசி போடாமல் இருப்பது தங்கள் தனியுரிமை என்பதை ஏற்க முடியாது. நோய் வந்துவிட்டால், மருத்துவமனைக்குத்தானே வருகிறார்கள். அப்போது மருத்துவம் செய்வது யார்? இப்படிப் பலர் தடுப்பூசியைப் போடாமல் இருப்பதால் புதிய திரிபுகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் தனியுரிமை என்பது கிடையாது. இப்படி நினைத்திருந்தால், போலியோ, பெரியம்மை போன்ற நோய்களை தடுத்திருக்க முடியாது." என்கிறார் ரவீந்திரநாத்.

இந்தியாவிலேயே தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் அதிகம் நடப்பது இங்கேதான் என்கிறார் அவர். தடுப்பூசியை நம்பாவதவர்களில் 87 சதவீதம் பேர், தான் ஊசி போடாமல் இருப்பதோடு, மற்றவர்கள் செலுத்திக்கொள்வதற்கு எதிராகவும் சமூக வலைதளங்களின் மூலம் பிரசாரம் செய்கிறார்கள் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Tamilnadu govt announces mandatory corona vaccine to enter in public places. Tamilnadu Corona cases latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X