கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்?

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்டிருந்தாலும் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை. போட்டியிட்டவர்களில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்?
Getty Images
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்?

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெங்களூரின் சி.வி. ராமன் நகர், கோலார் தங்க வயல், காந்தி நகர், ஹனூர், ஷாந்தி நகர், சிவாஜி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் பெங்களூரின் சி.வி. ராமன் நகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசின் சம்பத் ராஜிற்கும் கோலார் தங்க வயல் தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.தவின் பக்தவத்சலத்திற்கும் வெற்றிவாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால், மற்ற தமிழ் வேட்பாளர்களைப் போலவே இவர்களும் தோல்வியைத் தழுவினர். இதில் பக்தவத்சலம் டெபாசிட்டையும் இழந்தார்.

பெங்களூரின் சி.வி ராமன் நகரில் சம்பத் ராஜை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.கவைச் சேர்ந்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான எஸ். ரகு, 58887 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார்.

சி.வி. ராமன் நகர் தொகுதியில் சம்பத்ராஜ் தோல்வியடைந்ததற்கு அந்தத் தொகுதியில் காங்கிரசுக்குள் நிலவிய உட்கட்சிப் பூசல்தான் முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பாகவே காங்கிரசைச் சேர்ந்த பி. ரமேஷ் என்பவர் தனக்குத்தான் தொகுதி என முடிவுசெய்து பிரச்சாரத்தைத் துவக்கியிருந்தார். அவருக்கு ஆதரவுகோரி சுவரொட்டிகள்கூட பல இடங்களில் ஒட்டப்பட்டன.

சம்பத்ராஜ்
BBC
சம்பத்ராஜ்

ஆனால், கட்சித் தலைமை சம்பத் ராஜை வேட்பாளராக அறிவிக்க முடிவுசெய்ததும் ரமேஷ் காங்கிரசிலிருந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்தார். இதையடுத்து அதே தொகுதியில் ரமேஷ் போட்டியிட ம.ஜ.த. வாய்ப்பளித்தது. இப்போது அந்தத் தொகுதியில் பி. ரமேஷ் வெற்றிபெறவில்லை என்றாலும் 20,478 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். சம்பத் ராஜின் வாக்குகள் 46,660. பி. ரமேஷ் காங்கிரசிலேயே இருந்திருந்தால் ஒருவேளை சம்பத்ராஜ் வெற்றிபெற்றிருக்கலாம் என்கிறார்கள் தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

சி.வி. ராமன் நகர் தொகுதியைப் பொறுத்தவரை, தமிழர் - தமிழரல்லாதவர் என்ற பிரச்சனையே எழவில்லை. மற்ற தொகுதிகளைப் போலவே பெரிய கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகவே நடந்தது என்று கூறுகிறார் அங்குள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

தவிர, "பெங்களூர் நகருக்குள், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் தமிழர்கள் கட்சி சார்ந்தே வாக்களித்தார்களே தவிர தமிழர் என்ற அடிப்படையில் வாக்களிக்கவில்லை" என்கிறார் பெங்களூரில் வசிக்கும் அனைத்திந்திய தமிழ் சங்கங்களின் தலைவரான மீனாட்சி சுந்தரம்.

பாரம்பரியமாக தமிழர்கள் வெற்றிபெற்றுவந்த கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட 16 பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். ஆனால், முதல் இரண்டு இடங்களில் ரூபகலா, அஸ்வினி சம்பங்கி என்ற தமிழரல்லாதவர்களே பிடித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரசைச் சேர்ந்த ரூபகலா 71151 வாக்குகளைப் பெற்று தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறார்.

கோலார் தங்க வயல் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட்ட எம். பக்தவத்சலம், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம். அன்பு ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். பக்தவத்சலம் 8976 வாக்குகளுடன் நான்காவது இடத்தையும் அ.தி.மு.க. வேட்பாளர் அன்பு 1024 வாக்குகளுடன் 7 வது இடத்தையும் பிடித்தனர். இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் ராஜேந்திரன் 20393 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தாலும் டெபாசிட் தொகைத் தக்கவைத்துக்கொண்டார்.

பெங்களூரிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ள கோலார் தங்கவயல் சட்டமன்றத் தொகுதியில் வசிப்பவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். இருந்தபோதும் 2004ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு தமிழர்கள் யாரும் இங்கிருந்து தேர்வுசெய்யப்படுவதில்லை. 2008ஆம் ஆண்டுத் தேர்தலில் சம்பங்கியும் 2013ஆம் ஆண்டுத் தேர்தலில் ராமக்கா என்பவரும் வெற்றிபெற்றனர். இருவருமே பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்?
BBC
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்?

கோலார் தங்க வயல் தொகுதி 2004ஆம் ஆண்டுவரை பெரும்பாலும் தமிழர்களே போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி. சி.எம். ஆறுமுகம் மூன்று முறையும் எம். பக்தவத்சலம் மூன்று முறையும் எஸ். ராஜேந்திரன் இரண்டு முறையும் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இதில் எம். பக்தவத்சலம் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட்டே இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கிறார்.

ஆனால், 2001ல் கோலார் தங்க வயல் மூடப்பட்ட பிறகு, அந்த தொகுதியில் வசித்த தமிழர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி பெங்களூரிலும் அதைச் சுற்றிலும் குடியேற ஆரம்பித்தனர். இது அந்தத் தொகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது. பிறகு, 2008ல் தொகுதி சீரமைப்பின்போது அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் பல அந்தத் தொகுதியோடு இணைக்கப்பட்டன. இதனால், தமிழரல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மத்திய அரசின் 'பெமல்' நிறுவனம் துவங்கப்பட்டதும் அங்கு கன்னடம் பேசுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது. இது போன்ற காரணங்களால், பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் எதுவும் தமிழர்களை நிறுத்துவதில் கவனம் செலுத்தவில்லை.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்?
BBC
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்?

கோலார் தங்கச் சுரங்கம் இயங்கிவந்த வரை, சி.பி.ஐ., சி.பி.எம்., இந்திய குடியரசுக் கட்சி, அ.தி.மு.க. ஆகியவை இந்தத் தொகுதியில் செல்வாக்குச் செலுத்தின. ஆனால், 2008க்குப் பிறகு தேசியக் கட்சிகள் இங்கு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இதனால், 2008ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்தத் தொகுதியையே சேராத ஒய். சம்பங்கி பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெல்ல முடிந்தது.

தற்போது வெற்றிபெற்றுள்ள ரூபகலா, கோலார் மக்களவைத் தொகுதியில் ஏழு முறை வெற்றுள்ள முனியப்பாவின் மகள் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.

இந்த இரு தொகுதிகள் தவிர, காந்தி நகர், ஹனூர், ஷாந்தி நகர், சிவாஜி நகர் ஆகிய தொகுதிகளிலும் ஒன்றிரண்டு தமிழர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயிரம் வாக்குகளைத் தாண்டிப் பெறவில்லை. 2004வரை தமிழர்களே வெற்றிபெற்ற சாந்தி நகர் தொகுதியில் ஆம் ஆத்மி, இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 4 தமிழர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம் ஆத்மி வேட்பாளரான ரேணுகா மட்டும் 2658 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். மற்றவர்கள் மிகக் குறைவான வாக்குகளையே பெற்றனர்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்?
Getty Images
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர் யாரும் வெற்றிபெறாதது ஏன்?

ஒரு காலத்தில் தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதியான சிவாஜி நகர் (முன்பு பாரதி நகர்) தொகுதியில் இந்த முறை 2 தமிழர்கள் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேட்பாளர்களில் கோலார் தங்க வயல் தொகுதியில் போட்டியிட்ட அன்பு 1024 வாக்குகளையும் ஹனூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.பி. விஷ்ணுகுமார் 503 வாக்குகளையும் பெற்றனர்.

"மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தாங்கள் கர்நாடகத்தில் வாழும் மராட்டியம் பேசும் மக்கள் என்ற எண்ணம் உண்டு. அதனால்தான் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி போன்றவை அங்கு வலுவாகச் செயல்படுகின்றன. ஆனால், தமிழர்களை அப்படி ஒருங்கிணைக்கக்கூடிய சக்திகள் ஏதும் இங்கு இல்லை. தவிர இந்த மண்ணிலேயே பிறந்து வாழ்ந்தவர்களுக்கு தமிழர் என்ற உணர்வு அடிநாதமாக இருக்கிறது. 1991ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் தமிழர்கள் என்று உணர்ந்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்தவர்களுக்கு அந்த உணர்வு இல்லை" என்கிறார் மீனாட்சி சுந்தரம்.

கர்நாடகத்தைப் பொறுத்தவரை, மொழி உணர்வு அடிப்படையில் யாரும் சட்டமன்ற வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதில்லை என்ற அம்சமும் சுட்டிக்காட்டப்படுகிறது. காவிரி விவகாரம் தலையெடுக்கும்போதெல்லாம் கன்னட உணர்வைத் தூண்டும் வாட்டாள் நாகராஜ் இந்த முறை சாம்ராஜ நகர் தொகுதியில் போட்டியிட்டு, வெறும் 5977 வாக்குகளை மட்டுமே பெற்றார். தமிழ் வேட்பாளர்களும்கூட தேர்தல் பிரச்சாரத்தில், தாங்கள் தமிழர்கள் என்பதைச் சொல்லி வாக்கு சேகரிப்பதில்லை.

ஆக, தமிழராக உள்ள ஒருவர் வெற்றிபெற்றாலும் அவர் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவராகவோ, தொகுதி சார்ந்தவராகவோ செயல்பாடுவாரே தவிர, கர்நாடகத்தில் வசிக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனைப் பிரதிபலிப்பவராக செயல்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.

பிற செய்திகள்:


BBC Tamil
English summary
''1991ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் தமிழர்கள் என்று உணர்ந்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்தவர்களுக்கு அந்த உணர்வு இல்லை''

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற