திருவனந்தபுரம் : நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தனித்தனியான அடையாளம் என்ற வகையில் அறிவிக்கப்பட்ட ஆதார் அட்டையின் கீழ் சிறைக்கைதிகளையும் கொண்டு வர கேரள சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் கேரளாவில் சிறைக்கைதியாக இருந்தாலும் எளிதில் ஆதார் அட்டை பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. வயது வித்தியாசம் மற்றும் சமுதாயத் தடைகள் எதுவும் இன்றி அனைவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறத. இந்நிலையில் சிறைக்கைதிகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கென தனித் தனி ஆதார் அட்டைகளை வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 3,500 தண்டனை நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதார் அட்டைகளை பெறுவதற்கான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.
பல்வேறு மாநில சிறைகளில் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் தனித்தனி ஆதார் எண் வழங்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் எளிமையாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைதிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து வைத்துக் கொண்டு அவர்கள் விடுதலையான பின்பும் கூட அவர்களைப் பற்றி தொடர்ந்து கண்காணிக்க இது உதவியாக இருக்கும் என்பது சிறைத்துறை அதிகாரிகளின் திட்டமாக உள்ளது.
கேரளாவில் உள்ள சிறைகளில் இந்தப் பணி கடந்த வாரமே தொடங்கிவிட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா மத்திய சிறையில் நடத்தப்பட்ட ஆதார் முகாமில் 27 கைதிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சிறையில் ஆதார் இல்லாத கைதிகளின் விவரங்கள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கேரளா சிறைகளில் உடள்ள 8 ஆயிரம் கைதிகளின் விவரங்களை முதலில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டள்ளது. கேரளாவில் மொத்தம் 3 மத்திய சிறைகள், 11 மாவட்ட சிறைகள், 16 சப் ஜெயில்கள், 3 மகளிர் சிறை உள்ளன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!