சுயஉதவிகுழுவுக்காக மாநில அளவில் கூட்டமைப்பு! ரூ.50 ஆயிரம் கடன் வழங்க இலக்கு! ஒடிசா அரசு திட்டம்
புவனேஸ்வர்: ஒடிசாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் ரூ.50 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு, அடுத்த 12 மாதத்தில் மாநில அளவிலான கூட்டமைப்பு அமைக்கப்படும் என மிஷன் சக்தி துறை செயலாளர் கூறியுள்ளார்.
ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நவீன் பட்நாயக் உள்ளார். இங்கு மகளிர் சுயஉதவிக்குழு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இதன்மூலம் திணை வகை பயிர் விளைச்சல் உள்பட ஏராளமான திட்டங்களை வழங்கி வருவதுடன் சுயதொழில்களையும் மாநில அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக அம்மாநில மிஷன் சக்தி துறை செயலாளர் சுஜாதா கூறியதாவது:
முதல்வர் நவீன் பட்நாயக்கின் உத்தரவுப்படி ஒடிசாவில் பெண்களின் சமூக-பொருளாதாரத்துக்கு அதிகாரமளிக்கும் வகையில் அடுத்த 12 மாதங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான மாநில அளவிலான கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த கூட்டமைப்பானது சுய உதவிக்குழு இயக்கத்திற்கு நல்ல ஆதரவு வழங்கும்.
குறிப்பிட்ட விஷயத்தில் முக்கிய முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும். வாழ்வாதார முன் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு ஆயிரக்கணக்கில் எஸ்எம்இக்கள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த கூட்டமைப்பு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்.
மாநிலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் 6,800 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உதவி பெற்றுள்ளன. இந்த ஆண்டு ரூ.9000 கோடி கடனுதவி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.50,000 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் சுயஉதவி குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 500 மிஷன் சக்தி பஜார்கள் உருவாக்கப்படும். வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும். இதுமட்டும் இன்றி சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட சுவையான உணவுகளை சந்தைப்படுத்துவதற்காக 500 மிஷன் சக்தி கபேக்கள் தொகுதிகள் வாரியாக அமைக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு லைன்மேன் பயிற்சி அளிக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications