அடுத்து வந்துருச்சு... ஒரே தேசம்.. ஒரே சீருடையாம்- போலீசுக்கு! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மோடி!
சூரஜ்கண்ட்: நாடு முழுவதும் ஒரே தேசம்- ஒரே சீருடை என்ற யோசனையை செயல்படுத்தலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் சூரஜ்கண்ட்டில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெறும் இம்மாநாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் இன்று பேசிய பிரதமர் மோடி, சட்டம் ஒழுங்கு என்பது மாநிலங்களின் பொறுப்பு என்றார். அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கு என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது என்றார்.

கூட்டுறவு கூட்டாட்சி
பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: அனைத்து மாநிலங்களும் குற்றங்களைத் தடுப்பதிலும் குற்றவாளிகளைக் கையாள்வதிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கூட்டுறவு கூட்டாட்சி என்பது அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது. அது ஒரு உணர்வு மட்டுமல்ல.. மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்குமாறு பொறுப்பும் கூட.

ஒரே நாடு ஒரே சீருடை
அனைத்து மாநில போலீசாருக்கும் ஒரே நாடு- ஒரே சீருடை என்பதை அமல்படுத்தலாம். இது ஜஸ்ட் யோசனை மட்டும்தான். இதனை மாநிலங்களில் நான் திணிக்கப் போவது இல்லை. ஒருவேளை அடுத்த 5 ஆண்டுகள் அல்லது 50 அல்லது 100 ஆண்டுகளில் இப்படி ஒன்று நடக்கலாம். அதற்கான சிந்தனையும் யோசனையும்தான் இது. என்னைப் பொறுத்தவரையில் நமது நாட்டின் போலீஸுக்கு ஒரு தனித்த அடையாளம் தேவை.

பழைய சட்டங்கள்
மாநில அரசுகள் பழைய சட்டங்களை ஆராய்ந்து அவற்றை தற்போதைய நிலைமைக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டியதும் அவசியமானதாகும். சட்டம் ஒழுங்கு என்பது மாநிலத்தின் பொறுப்புதான். அதேநேரத்தில் சமநிலையில் தேசத்தின் ஒருமைப்பாட்டுடன் இணைந்ததும் கூட. தேசத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புக்கு, உள்நாட்டு பாதுகாப்பு அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டியதும் அவசியம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

அமித்ஷா பேச்சு
முன்னதாக நேற்று தலைமை உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-க்கு முன் அனைத்து மாநிலங்களிலும், இதன் கிளைகளை அமைப்பதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புக்குரிய பெரும்பாலான இடங்கள், தேசவிரோத செயல்களிலிருந்து பெரும்பாலும் விடுபட்டுள்ளன. இதற்குக் காரணம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும்தான். தேசத்தின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் நல்ல நிர்வாகத்திற்கும், உள்நாட்டு பாதுகாப்பு மிக முக்கியமானது என சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications