ஒரே ஒரு முடிவு.. மெக்கானிக்கல் படித்து 670% சம்பள உயர்வு பெற்ற இளைஞர்.. என்ன சீக்ரெட் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

புனே: படிப்பு ஒரு பக்கம், வேலை இன்னொரு பக்கம் என வாழ்க்கையைத் தொடங்குவதே பல இளைஞர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும். அதிலும் குடும்பப் பின்னணி வசதியாக இல்லாதபோது, தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒரு புதிய துறையைக் கற்றுக்கொண்டு அதில் ஜெயிக்க நினைப்பது மிகப்பெரிய விஷயம்.

அப்படி ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு சாப்ட்வேர் துறைக்கு மாறி, குறுகிய காலத்திலேயே 670% சம்பள உயர்வைப் பெற்று சாதித்துக் காட்டியுள்ளார் புனேவைச் சேர்ந்த அஜய் பாட்டீல் என்ற இளைஞர்.

Pune youth

5 வயதில் தந்தை மறைவு: தாயின் கடின உழைப்பு

அஜய் தனாஜி பாட்டீலின் வாழ்க்கை எளிதானதாகத் தொடங்கவில்லை. அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். அதன்பின்னர், ஒற்றைத் தாயாக குடும்பப் பொறுப்பை முழுமையாகச் சுமந்தார் அவரது தாய் மங்கள்பாய் தனாஜி பாட்டீல்.

தனது மகன் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக, அவர் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதுமட்டுமின்றி, குடும்பத்தின் கூடுதல் செலவுகளைச் சமாளிக்கத் தையல் தொழிலும் செய்து வந்தார். குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியைப் புரிந்துகொண்ட அஜய், படிப்பை பாதியில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கவனத்துடன் படித்தார்.

18 வயதில் வேலை, கூடவே கல்வி

பள்ளிக் கல்விக்குப் பிறகு டிப்ளமோ முடித்த அஜய், புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். ஆனால், குடும்பத்துக்குப் பொருளாதார உதவி தேவைப்பட்டதால், தனது 18-வது வயதிலேயே டாட்டா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியராக வேலையில் சேர்ந்தார்.

பகல் முழுவதும் வேலை, இரவு மற்றும் ஓய்வு நேரங்களில் படிப்பு என இரட்டைச் சுமையைச் சுமந்தபடியே 2023 ஆகஸ்ட் மாதம் தனது பொறியியல் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் மற்றொரு நிறுவனத்திலும் பணியைத் தொடர்ந்தார்.

சாப்ட்வேர் துறை மீதான ஆர்வம்

மெக்கானிக்கல் துறையில் வேலை செய்தாலும், அஜய்யின் கவனம் தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் சாப்ட்வேர் துறையின் மீதே இருந்தது. ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பின்னணி அவரிடம் இல்லை; கோடிங் அடிப்படைகளும் பெரிதாகத் தெரியாது.

பொதுவாக பலரும் இதுபோன்ற சமயங்களில் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாகப் படித்துத் துறை மாறுவார்கள். ஆனால், அஜய்க்கு அந்த வசதி இல்லை. வேலையை விட்டால் வருமானம் நின்றுவிடும். குடும்பச் செலவுகள் மற்றும் கல்விக்காக வாங்கிய கடனை (Education Loan) மாதா மாதம் இ.எம்.ஐ (EMI) கட்டியாக வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு இருந்தது.

வேலையை விடாமல் கோடிங் பயிற்சி

வேலையையும் விடாமல், தன் இலக்கையும் விட்டுக்கொடுக்காமல் முன்னேற முடிவு செய்தார் அஜய். 2023-ல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான 'ஸ்கேலர்' (Scaler) தளத்தில் சேர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியரிங் தொடர்பான பயிற்சிகளைப் படிக்கத் தொடங்கினார். இதற்காக அவர் தனியாகக் கல்விக் கடனும் வாங்கியிருந்தார்.

ஷிப்ட் முறையில் வேலை பார்த்துக்கொண்டே கோடிங் வகுப்புகளில் கலந்துகொண்டார். நேரலை வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத நாட்களில், பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை (Recorded sessions) இரவு நேரங்களில் பார்த்துப் பயிற்சி எடுத்தார். அசைன்மென்ட்களை வேலைக்கு நடுவே கிடைத்த ஓய்வு நேரங்களில் செய்து முடித்தார்.

அந்த காலகட்டத்தில் ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் மந்தமாக இருந்ததால், அவருக்கு உடனடியாக வாய்ப்புகள் அமையவில்லை. இருப்பினும் மனம் தளராமல் கோடிங் திறன்களைத் தொடர்ந்து வளர்த்து வந்தார்.

முதல் திருப்புமுனை: இபாம் சிஸ்டம்ஸ்

நீண்ட முயற்சிக்குப் பிறகு, அஜய்க்கு முதல் சாப்ட்வேர் வேலை 'இபாம் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தில் கிடைத்தது. மெக்கானிக்கல் துறையிலிருந்து சாப்ட்வேர் துறைக்கு அடியெடுத்து வைத்த அந்த முதல் வாய்ப்பு, அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அங்கு சேர்ந்த பிறகும் தனது கற்றலை அவர் நிறுத்தவில்லை. அன்றாட வேலைகளோடு புதிய தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தார்.

சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தில் வாய்ப்பு: 670% சம்பள உயர்வு

இபாம் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் ஓராண்டு அனுபவம் பெற்ற பிறகு, உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான 'சேல்ஸ்போர்ஸ்' நிறுவனத்தில் 'டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர்' பணியில் சேர்ந்தார்.

சாப்ட்வேர் துறைக்கு மாறிய வெறும் 1.3 ஆண்டுகளில், அவரது ஆரம்பச் சம்பளத்தை விட சுமார் 670 சதவீதம் அதிக சம்பள உயர்வை இந்த புதிய வேலை பெற்றுத் தந்தது. ஆரம்பத்தில் வாங்கிய குறைந்த சம்பளத்திலிருந்து, பெரிய நிறுவனத்தில் சிறப்பான நிலைக்கு உயர்ந்தது அவரது குடும்பத்தினருக்குப் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்தது.

அஜய் பாட்டீல் பகிரும் பாடம்

தனது இந்த மாற்றத்தைப் பற்றிப் பேசிய அஜய் பாட்டீல், "எனக்கு குடும்பச் சூழல் காரணமாக வேலையை விட்டுவிட்டுப் படிக்க முடியாது என்ற நிலை இருந்தது. அதனால் வேலை பார்த்துக்கொண்டே படித்தேன். கல்விக்கடன் இ.எம்.ஐ, ஷிப்ட் வேலை எனப் பல சுமைகள் இருந்தாலும் பொறுமையோடு தொடர்ந்து பழகினேன். நமக்குத் தொடர்புடைய கல்விப் பின்னணி இல்லை என்றாலும், விடாமுயற்சியும் சரியான வழிகாட்டுதலும் இருந்தால் எந்தத் துறையிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை என் பயணம் எனக்கு உணர்த்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி எதுவாக இருந்தாலும், முறையான திட்டமிடலும் தொடர் பயிற்சியும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு அஜய் பாட்டீலின் வாழ்க்கை சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+