For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சின்ன வெங்காயம் விலை கடும் சரிவு: அதிக விளைச்சல் இருந்தும் லாபம் பார்க்காத தமிழக விவசாயிகள்

By BBC News தமிழ்
|

Click here to see the BBC interactive

சின்ன வெங்காய விலை கடுமையாக சரிந்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசு கொள்முதல் செய்து, மானிய விலையில் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். அப்படி செய்தால், விவசாயிகளுக்கு பெரிதும் பயனாக இருக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

சாம்பார் வெங்காயம் என்று சொல்லப்படும் சின்ன வெங்காயம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

small onion prices fall sharply and farmers worried

மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் மேல் சின்ன வெங்காய சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டிற்கு 3-4 லட்சம் டன்கள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் பயன்பாடு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை பெருமளவு சரிந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 80 - 100 ரூபாய் வரை விற்றது. தற்போது கிலோ ரூ. 15 ரூபாய் வரை குறைந்து விட்டது. தினமும் 300-400 டன் விற்பனை ஆகாமல் தேக்கமடைகிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலை சரிந்தும் விற்பனை இல்லை

இது குறித்து திருச்சி பால்பண்ணை வெங்காய மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் தங்கராஜ் பிபிசி தமிழிடம் கூறுகையில், "சின்ன வெங்காயத்தின் விலை இன்றைக்கு வெகுவாக குறைந்து விட்டது. முன்பு ஒரு கிலோ 80 - 100 ரூபாய் வரை விற்றது. தற்போது முதல் தர சின்ன வெங்காயம் கிலோ 23 ரூபாய், இரண்டாம் தரம் 20 ரூபாய், மூன்றாம் தரம் ரூ. 15 ரூபாய் என உள்ளது. இது இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரம்பலூர் மற்றும் துறையூர் பகுதி வெங்காயம் திருச்சிக்கு அதிகளவில் வருகிறது. தமிழ்நாட்டில் ஈரோடு, மதுரை, ஓட்டன்சத்திரம் உள்ளிட்ட மொத்தம் 8 இடங்களில் உள்ள சந்தைகளுக்கு மொத்தம் 1,200 டன்கள் வரை சின்ன வெங்காயம் வருகிறது. இதில், பெருமளவு டெல்டா மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவிற்கு 200 டன் செல்கிறது. ஆனால், வழக்கமான மொத்த விற்பனை நடைபெறவில்லை. தினமும் 200 - 300 டன்கள் வரை விற்பனையாகாமல், தேக்கம் அடைகிறது. ஏற்றுமதி தடைபட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது," என்றார் தங்கராஜ்.

ஏற்றுமதி தேக்கம் ஏன் ?

விலை உயரும் போது ஏற்றுமதி தடை விதிக்கப்படுவதும், விலை சரிந்து விட்டால் ஏற்றுமதி அதிகரிக்கப்படுவதும் இயல்பானதுதான். ஆனால், தற்போது தேக்கம் ஏன் என்று ஏற்றுமதியாளர்களிடம் கேட்டதற்கு,

''இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி ஆகிறது. அந்த நாடுகளில் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏற்றுமதி அதிகளவில் இருந்தது. ஆனால், நடப்பாண்டிற்கான சீசன் இன்னும் தொடங்கவில்லை. வெங்காயத்தின் விலை இதே சீராக இருந்தால், மார்ச் 2வது வாரத்தில் ஏற்றுமதி தொடங்கி விடும். இதையடுத்து கொள்முதல் விலை சற்று உயர வாய்ப்புள்ளது.'' என்கிறார் சென்னையில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக இருக்கும் எஸ்.பி.மதன்.

அரசு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் என இரண்டின் விலையும் உச்சத்தை தொட்டது. பெரிய வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில் சின்ன வெங்காய ஏற்றுமதியில் புதிய உச்சம் தொட்டுள்ளது. ஆனாலும், தங்களுக்கு பாதிப்பு தொடர்வதாக கூறுகிறார்கள் விவசாயிகள்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயி எசனை பூபதி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''மொத்த வியாபாரிகள் கிலோ 15 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்றால், இதைவிட கிலோவிற்கு 5 ரூபாய் வரை குறைவாகத்தான் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வார்கள். ஆனால், அதிகரித்தால் எங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. இடையில் உள்ளவர்களுக்குத்தான் லாபம் கிடைக்கும்.

கஷ்டப்பட்டு, உழைத்து உற்பத்தி செய்தாலும் எங்களால் விலையை நிர்ணயம் செய்ய முடியாது. வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கொடுக்கும் இடத்தில்தான் விவசாயிகள் இருக்கிறோம். ஆகையால், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உள்ளது போல், சின்ன வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.'' என்கிறார்.

நியாய விலைக் கடைகளில் விற்பனை கோரிக்கை

மேலும், ''கடந்த ஆண்டு, விலை கடுமையாக அதிகரித்து, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை வந்த போது, அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. அதே போல், விலை கடுமையாக சரியும் போதும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசு கொள்முதல் செய்து, மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். அப்படி செய்தால், விவசாயிகளுக்கு பெரிதும் பயனாக இருக்கும்.

அதேபோல், காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செய்த, காப்பீட்டுக்கு தற்போது வரை இழப்பீடு கிடைக்கவில்லை. இயற்கை இடர்பாடு, பூச்சி, நோய் தாக்குதல் என பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் விவசாயம் செய்தாலும் உரிக்காமலேயே கண்ணீர் விடும் நிலையில்தான் தற்போது நாங்கள் இருக்கிறோம்.'' என்கிறார் விவசாயி பூபதி.

தற்போது அறுவடை செய்யப்படும் வெங்காயம் அதிகபட்சம் 60 நாட்கள் வரை உலர்த்தி இருப்பு வைக்க முடியும். அதற்கு விலை உயரும் என்கிற நம்பிக்கை உள்ளது. அனைத்து விவசாயிகளாலும் அவ்வளவு நாட்கள் காத்திருக்க முடியாது. அறுவடை செய்ததை, உடனே விற்க வேண்டிய நிலையில்தான் பலரும் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு அதிகரித்த ஏற்றுமதி

இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு சின்ன வெங்காய ஏற்றுமதி பெருமளவு அதிகரித்துள்ளது. அதன்படி, சின்ன வெங்காய ஏற்றுமதி 487 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலராக சின்ன வெங்காய ஏற்றுமதி இருந்தது. கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 11.6 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ப்யூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் முக்கிய வெங்காய ஏற்றுமதி நாடுகளாக இலங்கை (35.9%), மலேசியா (29.4%), தாய்லாந்து (12%), ஐக்கிய அரபு அமீரகம் (7.5%) மற்றும் சிங்கப்பூர் (5.8%) ஆகியவை விளங்குகின்றன. இந்தியா அனைத்து விதமான ஏற்றுமதியிலும் தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
small onion prices fall sharply and farmers worried
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X