
'அதை வாயிலையே வைக்க முடியல' பாகிஸ்தானுக்கு குட்டு.. இந்தியாவுக்கு பாராட்டு! ஓப்பனாக விளாசிய தாலிபான்
காபூல்: மிக மோசமான பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள ஆப்கனுக்கு உலகின் பல நாடுகளும் உதவிகளை அளித்து வரும் நிலையில், அதன் தரம் குறித்து தாலிபான் அதிகாரியின் பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஆப்கனில் நடைபெற்ற போரை யாரும் மறந்திருக்க முடியாது. அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கிய உடனேயே தாக்குதலை ஆரம்பித்த தாலிபான்கள் மளமளவென அந்நாட்டைக் கைப்பற்றியது.
முதலில் எல்லைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தாலிபான்கள், அதன் பின்னர் ஊரக பகுதிகள், கடைசியில் நகரங்கள் என சில வாரங்களில் ஒட்டுமொத்த தலைநகரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
பாட்டில் பாட்டிலாக.. 3000லி மதுபானத்தை தூக்கி சென்ற தாலிபான் அரசு அதிகாரிகள்.. அடுத்து நடந்த சம்பவம்

கடும் பாதிப்பு
இதன் காரணமாக ஆப்கன் நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அத்திவாசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு அதிகரித்துவிட்டது. இதனால் ஆப்கன் நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சில இடங்களில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவே மக்கள் தங்கள் உடல் உறுப்புகளை விற்று வருவதாகத் தகவல் வெளியானது. இன்னும் சில பகுதிகளில் பெற்றோர்களே குழந்தைகளை விற்கும் அவலமான சூழல் கூட ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உதவிகள்
ஆப்கனின் தாலிபான் அரசை பெரும்பாலும் இதுவரை எந்தவொரு நாடும் அங்கீகரிக்கவில்லை. அதேநேரம் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல நாடுகள் உதவிகளை அறிவித்தன.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்க உள்ளதாக அறிவித்தன. இந்தச் சூழலில் இந்தியா அனுப்பிய கோதுமை தரமாக உள்ளதாகவும், பாகிஸ்தான் கோதுமை மோசமாக உள்ளதாகவும் தாலிபான் அதிகாரி ஒருவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

சரியில்லை
ட்விட்டரில் வேகமாகப் பரவும் வரும் அந்த வீடியோவில் தாலிபான் அதிகாரி ஒருவர், "பாகிஸ்தான் கொடுத்த கோதுமை வாயில் வைக்கவே முடியவில்லை" என்று கூறுகிறார். இந்த வீடியோவை ஆப்கன் மக்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், இந்தியா நல்ல தரமான கோதுமையை வழங்கி உதவியுள்ளதாகவும் ஆப்கன் மக்கள் ட்விட்டரில் நன்றி தெரிவிக்கின்றனர். இது குறித்து ட்விட்டரில் ஆப்கனை சேர்ந்த ஒருவர், "பாகிஸ்தான் வழங்கிய கோதுமை பயன்படுத்த முடியாதபடி கெட்டுப்போன நிலையில் உள்ளது. இந்தியா எப்போதும் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்து வருகிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா உதவி
இப்படி பலரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அளித்த கோதுமையின் தரத்தை ஒப்பிட்டு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் பாகிஸ்தான் கோதுமையின் தரம் மோசமாக இருப்பதாகக் கூறிய தாலிபான் அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா ஆப்கானிஸ்தான் மக்களுக்குக் கோதுமையை அனுப்பத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை தான் 2000 மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றிக்கொண்டு இந்தியாவில் இருந்து லாரிகள் ஆப்கனுக்கு புறப்பட்டது.

50,000 மெட்ரிக் டன்
பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு மொத்தம் 50,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்புவதாக இந்தியா அறிவித்தது. இதுவரை இரண்டு தவணைகளில் கோதுமை அனுப்பப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களிலும் இந்தப் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மக்களுடனான தனது சிறப்பு உறவை இந்தியா எப்போதும் மதிக்கும் என்று சமீபத்தில் தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார்.