
மோடியின் நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.. காஷ்மீரில் அமித்ஷா பெருமிதம்!
ஸ்ரீநகர்: தீவிரவாதிகளுக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்டகடுமையான நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் முன்பை விட தற்போது பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது என்றும் இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகும் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றார்.
ரஜோரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். அபோது அமித்ஷா பேசியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் மொழி சிறுபான்மை பஹாரிகளுக்கு விரைவில் எஸ்.டி. இடஒதுக்கீடு: அமித்ஷா அதிரடி அறிவிப்பு

மக்கள் நலத்திட்டங்களுக்காக
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமித்ஷா பேசியதாவது:- ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது மூன்று குடும்பம் மட்டுமே ஆட்சி செய்தது. ஆனால் தற்போது பஞ்சாயத் மற்றும் மாவட்ட கவுன்சில்களுக்கு நடந்த நியாயமான தேர்தல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரம் உள்ளது. இதற்கு முன்பு மத்திய அரசு அளித்த நிதி அனைத்தும் ஒருசிலரால் அபரிக்கப்பட்டது. ஆனால் தற்போது அனைத்தும் மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது.

ரத்த ஆறு ஓடும் என்றனர்
இந்த மூன்று குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரை விடுவித்து மோடியின் கரத்தை ஜம்மு காஷ்மீர் நலனுக்காக வலுப்படுத்த வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்தால், ரத்த ஆறு ஓடும் என்றனர். இன்றைய பேரணியும் இங்கு ஒலிக்கும் மோடி கோஷமும் தான் ரத்த ஆறும் ஓடும் என்று கூறியவர்களுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.

நீதிபதி ஷர்மா குழு பரிந்துரை
2019 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பலன்கள் கிடைத்துள்ளது. காஷ்மீரின் வளர்ச்சியில் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார். இங்குள்ள குஜ்ஜார், பகர்வால், பஹாரி சமூகத்தினருக்கு எஸ்.டி இட ஒதுக்கீட்டின் கீழ் பலன்களை அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஷர்மா குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.

பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது
சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு குஜ்ஜார்ஸ், பகர்வால், பஹாரிக்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்கும். ஜம்மு காஷ்மீரில் முன்பை விட தற்போது பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையால் இது சாத்தியம் ஆகியுள்ளது. பாதுகாப்பு மேம்பட்டுள்ளதால், பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகும் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

துணை நிலை ஆளுநரை சந்திக்கிறார்
ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, துணை நிலை ஆளுநரை நாளை சந்திக்கிறார். ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது ஜம்மு காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ராணுவ உயர் அதிகாரிகள், துணை ராணுவ அதிகாரிகள், மாநில உயர் போலீஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அதன்பிறகு பாரமுல்லாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கிறார்.