For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யூடியூப் மூலம் 2021இல் அதிகம் பணம் சம்பாதித்த 10 பேர் யார்? எவ்வளவு வருமானம்?

By BBC News தமிழ்
|

ஜிம்மி டொனால்ட்சன் என்கிற 23 வயது அமெரிக்க யூடியூபர்தான் 2021ஆம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த யூடியூபர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. இவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற பெயரில் பல யூடியூப் சேனல்களை நடத்துகிறார்.

அவர் மேற்கொள்ளும் பல அதிரடி காட்சிகள், பிராங்குகள் மக்களிடையே பிரபலமடைந்து, அவரது யூடியூப் சேனலின் ஒட்டுமொத்த பார்வைகள் (வியூஸ்) 1000 கோடியைக் கடந்துள்ளது. அது அவருக்கு கடந்த ஆண்டு 54 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் 405 கோடி ரூபாய்) அமெரிக்க டாலரை ஈட்டித் தந்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக அதிகம் சம்பாதிக்கும் யூடியூபர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ரயன் காஜியைப் பின்னுக்குத் தள்ளி ஜிம்மி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

2021ஆம் ஆண்டில் உலகின் டாப் 10 யூடியூபர்கள் மட்டும் 300 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 2,250 கோடி ரூபாய்) சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த யூடியூபர் பட்டியலில், இரண்டாமிடத்தில் இருக்கிறார் ஜேக் பால். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு டாப் 10 இடங்களுக்குள் வந்தார். 2017ஆம் ஆண்டு முதல் பெரிய அளவில் வெளியே தலைகாட்டாமல் இருந்த அவரது சகோதரர் லோகனும் இந்த முறை அதிகம் சம்பாதித்த டாப் 10 யூடியூபர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

அன்ஸ்பீகபிள் (Unspeakable) என்கிற பெயரில் சேனல் நடத்தும் மைன்கிராஃப்ட் விளையாட்டு வீரர் நாதன் கிரஹாம் முதல் முறையாக இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியல், யூடியூப் எப்படி ஒரே மாதிரியான, புதுமையற்ற தளமாக மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது என யூடியூப் டிரெண்ட் நிபுணர் கிறிஸ் ஸ்டோகெல் வாக்கர் கூறினார். மேலும் "எப்படி வெள்ளை இன மக்கள் மற்றும் ஆண்கள் இப்பட்டியலில் நிறைந்துள்ளனர் என்பது என்னை ஆச்சர்யப்படுத்துகிறது" என்று கூறினார்.

"இப்பட்டியலில் உள்ள பெயர்களை, கடந்த ஆண்டுப் பட்டியலில் பார்த்தீர்கள் என்றால் அங்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் வரிசை மாறி இருக்கும்" என்றும் கூறினார்.

வளரும் காலம்

ஜேக் பால்
Getty Images
ஜேக் பால்

பெருந்தொற்று காலத்தில் ஏகப்பட்ட பாரம்பரிய பொழுதுபோக்கு ஊடகங்கள் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டன. திரைப்படங்கள் வெளியாக தாமதமாயின. ஒப்ரா நிகழ்ச்சித் திட்டங்கள் மாற்றப்பட்டன, வீடியோ கேம் வெளியீடுகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால் யூடியூப் தளத்தில், நல்ல வளர்ச்சி இருந்தது.

2021ஆம் ஆண்டில் உலகம் முழுக்க யூடியூப் தளத்தை 2.3 பில்லியன் மக்கள் பயன்படுத்துவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு நாளும் 100 கோடி மணி நேரத்துக்கான காணொளிகள் நுகரப்படுவதாக யூடியூபே கூறுகிறது.

"ஒட்டுமொத்த ஊடக துறையையே பெரிய அளவில் அசைத்துப் பார்க்கும் விதத்திலும் நெறிமுறை அமைப்புகளிலிருந்து விடுபடும் விதத்திலும் யூடியூப் மேம்படுத்தப்பட்டுள்ளது. நம் சமூகம் மற்றும் பொழுது போக்குத் துறை தற்போது இருப்பதை போலல்லாமல் ஜனநாயகப்பட உள்ளது" என்கிறார் ஸ்டோகெல் வாக்கர்.

"யூடியூப் தொலைக்காட்சி போல் மாறிக் கொண்டிருப்பதை இப்பட்டியல் கூறுகிறது. இத்தளத்தில் காணொளிகளைப் பதிவிட நிறைய பணம் செலவிடப்படுவது, பதிவிடப்படும் உள்ளடக்கம் போட்டிக்குரியது என பொருள்படுகிறது. அதை பீஸ்டின் காணொளிகளில் பார்க்க முடிகிறது.

"யூடியூப் ஒரு பெரிய பட்ஜெட்டில் நடத்தப்படும் தொலைக்காட்சி சேனல் போன்றுள்ளது" என்கிறார் ஸ்டோகெல் வாக்கர்.

யூடியூபுக்காக தயாரிக்கப்படும் காணொளிகள் அதிக மதிப்புடையதாக இருப்பது, புதிதாக யூடியூபுக்குள் நுழைவதை சிரமமாக்குகிறது. சுருக்கமாக நீங்கள் காணொளிகளைப் பதிவிட்டு வெற்றி பெற வேண்டுமானால் நீங்கள் செலவழிக்க வேண்டும்.

யூடியூப்
Getty Images
யூடியூப்

யூடியூபில் அதிகம் சம்பாதிப்பவர்களாக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள், அதிக வியூஸ்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மாறாக நல்ல பிராண்டுகளுடனான கூட்டாண்மை, ஸ்பான்சர் ஒப்பந்தங்கள், வணிக ரீதியிலான வியாபாரங்கள் போன்றவை மூலம் யாரால் பணம் சம்பாதிக்க முடிந்திருக்கிறதோ அவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

எல்லா நவீன காலத்து ஊடக தளங்களைப் போன்றே, யூடியூப் தளமும் தவறான செய்திகள், கேடுவிளைவிக்கும் உள்ளடக்கங்களைக் எதிர்கொண்டு வருகிறது, ஆனால் அது ஒன்றும் யூடியூபர்கள் விளம்பரதாரர்கள் மற்றும் ஸ்பான்சர்களை கவர்வதில் பாதித்ததாகத் தெரியவில்லை.

டாப் 10 யூடியூபர்கள் இதோ.

10. பிரிஸ்டன் அர்செமென்ட்

மைன்கிராஃப்ட் வீடியோ கேமைச் சார்ந்து பதிவிட்ட பல காணொளிகளால் தன் யூடியூப் சமூகத்தை பெரிதாக்கினார். இப்பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வரும் இவர், கடந்த 2021ஆம் ஆண்டில் 16 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இவர் ஆறாவது இடத்தில் இருந்தார்.

9. லோகன் பால்

சர்ச்சைக்குரிய பாக்ஸிங் வீரரான இவர் ஒரு வ்லாகரும் கூட. கடந்த 2017ஆம் ஆண்டு, அதிகம் சம்பாதிக்கும் யூடியூபர்களில் ஒருவராக இடம்பிடித்திருந்தார். 2021ஆம் ஆண்டில் 18 மில்லியன் அமெரிக்க டாலரை ஈட்டியுள்ளார்.

8. டூட் பர்ஃபெக்ட்

நகைச்சுவை பிராங்ஸ்டரான இவர் 2020ஆம் ஆண்டு பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். தற்போது எட்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 2021-ல் 20 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியுள்ளார்.

7. ரயன் காஜி

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற பொம்மை விமர்சகரான இவர், இந்த ஆண்டு 27 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டி 7ஆவது இடம் பிடித்துள்ளார்.

6. நாஸ்ட்யா

ஏழு வயது ரஷ்ய சிறுமியான இவருக்கு யூடியூபில் 90 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். பொம்மையை ஆர்வமாகத் திறந்து பார்க்கும், அன்பாக்சிங் யூடியூபராக பயணத்தைத் தொடங்கியவர், இப்போது தன் வ்லாக் மற்றும் பாடல் காணொளிகள் மூலம் புகழின் உச்சாணிக் கொம்பை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறார். 2021-ல் 28 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியுள்ளார்.

5. அன்ஸ்பீகபிள்

மைன்கிராஃப்ட் விளையாட்டு வீரரான இவர், இந்த பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேல் காணொளிகளைப் பதிவிட்டு வருகிறார். தன் முந்தைய காணொளிகளுக்கான உரிமங்களைக் கடந்த ஆண்டு விற்றார். அது 2021ல் 28.5 மில்லியன் அமெரிக்க டாலரை ஈட்டித் தந்துள்ளது.

4. ரெட் அண்ட் லிங்க்

யூடியூப்
Getty Images
யூடியூப்

இவர்கள் தொடர்ந்து யூடியூபில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் இடம்பிடித்து வருகின்றனர். ​'குட் மிதிகல் மார்னிங்' என்கிற வாத விவாத நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். 2021-ல் 30 மில்லியன் அமெரிக்க டாலரை ஈட்டியுள்ளனர்.

3. மார்கிபிலையர்

மற்றொரு கேமிங் தயாரிப்பாளரான இவர், தன் வணிக அறிவைப் பயன்படுத்தி ஒரு நல்ல பிராண்டை உருவாக்கியுள்ளார். கடந்த ஆண்டு 38 மில்லியன் டாலர் ஈட்டியுள்ளார்.

2. ஜேக் பால்

ஜேக் பால் ஒரு குத்துச் சண்டை வீரர். அவரது சண்டை காணொளிகள் அவர் 2021ஆம் ஆண்டில் 45 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்ட உதவியது.

1. மிஸ்டர்பீஸ்ட்

அதிரடி ஸ்டன்டுகள், பிராங்குகள் மூலம் தன் பார்வையாளர்களை மகிழ்விக்கும் இவர்தான் யூடியூபில் அதிகம் சம்பாதிக்கும் நபர். ஸ்க்விட் கேம் தொடரை மீளுருவாக்கம் செய்தது, 80,000 பேர் அமரும் விளையாட்டரங்கள் கண்ணாமூச்சி விளையாடியது என பல காணொளிகளைக் குறிப்பிடலாம்.

2020ஆம் ஆண்டு, பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்த பீஸ்ட் 2021ஆம் ஆண்டில் 54 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் 405 கோடி ரூபாய்) டாலரோடு முதலிடத்தில் இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Moeny earned by youtube stars in 2021. Youtube channel with highest revence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X