ஆத்தா நீ போகயில.போகயில! சடலத்தில் இருந்த நகை மாயம்! வடிவேல் பாணியில் ப்ளான் போட்டு சிக்கிய சில்வண்டு
காரைக்கால் : காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உயிரிழந்தவரின் உடலுக்கு குளிர்சாதன பெட்டி வைக்க வந்த இருவர் உயிரிழந்தவரின் உடலில் இருந்த நான்கு சவரன் நகை திருடிய வழக்கில் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் இவரது தாயார் அருமை கண்ணு என்கின்ற மூதாட்டி நேற்று வயது முதிர்வால் உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலுக்கு குளிர்சாதன பெட்டியை வைக்க தென்னங்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (32) மற்றும் ராஜபாண்டியன் (37) வந்துள்ளனர். அப்பொழுது இருவரும் உயிரிழந்தவரின் உடலில் இருந்த நான்கு சவரன் நகையை திருடியதாக கூறப்படுகிறது.

மூதாட்டி மரணம்
பின்னர் உறவினர்கள் அருமைகண்ணு உடலில் கிடந்த நான்கு சவரன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் குளிர்சாதன பெட்டி வைக்க வந்த ரஞ்சித் மற்றும் ராஜபாண்டியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் தான் அவர்கள் இருவரும் வடிவேல் பாணியில் பெண்ணின் சடலத்தில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது.

குளிர்சாதன பெட்டி
மூதாட்டி இறந்ததாக தகவல் கிடைத்ததும் குளிர்சாதன பெட்டியை எடுத்துக் கொண்டு துக்க வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் வீடு வசதியாக இருப்பதை பார்த்துள்ளனர். போதாக்குறைக்கு மூதாட்டியின் கழுத்திலும் பெரிய தங்க செயின் ஒன்று இருந்துள்ளது. ஆசை கண்ணை மறைக்க இறுதி சடங்கு செய்யும் போது யாரும் அருகே வரக் கூடாது என ரஞ்சித் மற்றும் ராஜபாண்டி உறவினர்களிடம் கூறியதோடு, அருமை கண்ணு உடலை நாங்களே பெட்டியில் வைத்து விடுகிறோம் என கூறியுள்ளனர்.

நகை மாயம்
இதனை உறவினர்கள் நம்பிய நிலையில், மூதாட்டியின் கழுத்தில் இருந்த சங்கிலியை நைசாகக் கழற்றி விட்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்ற நிலையில், அருமை கண்ணுவின் உறவினர்கள் அவரது கழுத்தில் இருந்த நகைகள் காணாமல் போனதை கவனித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது ரஞ்சித் மற்றும் ராஜபாண்டி ஆகிய இருவரும் நகையை நைசாக கழற்றி அங்கிருந்து நழுவியது தெரிய வந்தது.

அதிரடி கைது
இதனைத் தொடர்ந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த நகையை திருடிய ரஞ்சித் மற்றும் ராஜபாண்டி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரஞ்சித் மற்றும் ராஜபாண்டி ஆகியோரை கைது செய்து விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தனர். அதில் மூதாட்டியின் நகையை திருடியதாக இருவரும் உண்மையை ஒத்துக் கொண்டதின் பேரில் போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து நான்கு சவரன் நகையை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications