For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூச்சுத் திணறும் இந்தியாவின் 2 லட்சம் ஏடிஎம் கள்!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இந்தியாவில் தற்போது மொத்தம் 2 லட்சத்து 2,801 ஏஎடிஎம் கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நவம்பர் 8 ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தப் பின்னர் இந்த ஏடிஎம் களை மாற்றியமைக்கும் பணி துவங்கியது. ஏன் மாற்றியமைக்க வேண்டும் என்றால் பழைய ஏடிஎம் களில் உள்ள ரேக்குகளில் - அதனை கேசட்டுகள் என்றே அழைக்கிறார்கள் - பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள்தான் வைக்க முடியும். புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைக்கும் விதத்தில் ரேக்குகளை மாற்றியமைக்கும் பணிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இது அவ்வளவு சுலபமான பணி இல்லை. மாறாக, மிக பிரம்மாண்டமான பணி என்றே வங்கித்துறை அதிகாரிகள் சொல்லுகின்றனர்.

இந்த 2 லட்சத்து 2,801 ஏடிஎம் களை மாற்றியமைப்பதற்கு இன்று நாட்டில் கிடைக்கும் தகுதியான என்ஜினியர்கள் சுமார் 2,000 பேர்தான். ஒரு ஏடிஎம் மை புதிய கரன்சிகளுக்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைக்க சராசரியாக 3 மணி நேரம் தேவைப்படுகிறது. என்ஜினியரைத் தவிர்த்து 4 பேர் இதற்குத் தேவை. இரண்டு பேர் பணத்தை ஏஎடிம் உள்ளே வைப்பார்கள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் சம்மந்தப்பட்ட ஏஎடிஎம்மின் பாதி பாஸ்வேர்டு தெரிந்திருக்கும். முறைகேட்டினை தடுப்பதற்குத்தான் இந்த வழி. இது தவிர துப்பாக்கி ஏந்திய ஒரு பாதுகாவலர் மற்றும் ஒரு டிரைவர். ஆகவே ஒவ்வோர் ஏஎடிஎம் மை போய் அடைவதற்கும் குறைந்தது 5 பேர் தேவை. இன்று இந்தியாவில் மூன்று நிறுவனங்கள்தான் ஏடிஎம் களை நிர்வகித்துக் கொண்டிருக்கின்றன - என்சிஆர் (NCR), டைபோல்டு (Diebold) மற்றும் ஏஜிஎஸ் (AGS). சராசரியாக இந்த நிறுவனங்கள் 100 லிருந்து 200 ஏஎடிஎம் களுக்கு ஒரு என்ஜினியர் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Upgrading India's 2 lakh plus ATMs is an uphill task

இன்று நாளொன்றுக்கு 7,000 முதல் 8,000 ஏடிஎம் கள் வரையில் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே சொல்லப் படுகிறது. ஏற்கனவே இதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ். முந்தரா தலைமையிலான ஒரு குழு இந்த பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. இதில் சில வகை ஏடிஎம் களில் பயன்படுத்துப்படும் ரேக்குகள் இந்தியாவில் தற்போது கிடைக்காத காரணத்தால் அவற்றை வெளிநாட்டிலிருந்து ஏற்றுமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. இது புதிய இடையூறை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதில் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம் ஏடிஎம்களை மாற்றியமைக்கும் பணி இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பெரு நகரங்களில், நடுத்தர நகரங்களில் முடிந்து விடலாம். ஆனால் உண்மையான பிரச்சனை சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் என்ன நடக்கப் போகிறது என்பதுதான். ஏனெனில் நகரங்களை முடித்து விட்டுத்தான் ஊரக பகுதிகளை நோக்கி இந்த 5 பேர் குழு பயணிக்கப் படப் போகிறது.

"இது பெரிய சவால்தான். நகரங்களில் சமாளிக்கலாம். ஆனால் கிராமங்களை நோக்கி பயணிக்கும் போது பிரத்தியேகமான பிரச்சனைகள் இருக்கின்றன. மேலும் பயணப்படும் நேரமும் அதிகமாகும். ஏற்கனவே ஊரக பகுதிகளில் ஒரு ஏடிஎம் பழுதடைந்தால் அதனை சரியாக்க குறைந்தது மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரையில் ஆகிறது. பழுது இயந்திரத்தில் என்றால் அதனை சரியாக்கி விடுவது சுலபம்தான். ஆனால் பிரச்சனை சர்வருடனான இணைப்பு என்றால் அது சற்றே நேரம் பிடிக்கக் கூடிய வேலையாகும். மேலும் ஐவர் குழுவுக்கான இருப்பிட வசதி, உணவு போன்றவையும் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் ஆகிறது. ஆகவே உண்மையான சவால் ஊரக பகுதிகளில்தான்,'' என்கிறார் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் எம்.சி. கார்த்திகேயன்.

தற்போது ஏடிஎம் களை மொத்தமாக, புதிய கரன்சி நோட்டுக்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு 200 கோடி ரூபாய் ஆகும் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய, விரிந்து பரந்த நாட்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் களை மாற்றியமைப்பது என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இன்று சராசரியாக இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு ஏடிஎம் மில் இருந்து 130 பேர் தலா 4,000 ரூபாய் எடுப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆகவே நாளொன்றுக்கு 10,000 கோடி ரூபாய் ரொக்கம் ஏடிஎம் மில் இருந்து வெளியே வருகிறது. இன்று இந்த கேஷ் எகானமி எனப்படும் பணப் பரிவர்த்தனை பொருளாதாரம் அடியோடு முடங்கிப் போய்க் கிடக்கிறது. 500, 1,000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் என்பது மொத்த பணப்புழக்கத்தில் 86 சதவிகிதமாகும். 14 சதவிகிதம்தான் மற்ற நாணயங்களான 1, 2, 5, 10 மற்றும் ரூபாய் நோட்டுக்களான 5,10, 20, 50 மற்றும் 100 ஆகும். இந்த 14 சதவிகதத்தை வைத்துத் தான் இன்று இந்தியர்கள் தங்களது வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிகப்படியாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகிப்பதால் இவற்றின் சர்வர்கள் மிகவும் மெதுவாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

கேஷ் எகனாமியை ஒழிக்கப் போகிறோம் என்று சொல்லும் அரசு அதற்கான எந்த விதமான அடிப்படை கட்டுமான வசதிகளையும் செய்யாமல்தான் 500, 1000 ரூபாய்களை ஒழிக்கும் அட்டூழியத்தைச் செய்திருக்கிறது. போதியளவு ஏஎடிஎம் களும் இன்று இல்லை. இன்று அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 1,500 ஏடிஎம் களும், சீனாவில் 350 ஏடிஎம் களும் இருக்கின்றன. இந்தியாவில் வெறும் 130 ஏடிஎம் கள்தான் இருக்கின்றன. மேலும் அதிகரிக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை தாங்கும் அளவுக்கும் சர்வர்களின் செயற்பாடுகளில் கூடுதல் தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்தப் படவில்லை.

எல்லோரையும் வங்கிப் பரிவர்த்னையின் கீழ் கொண்டு வருவதுதான் மோடி அரசின் இந்த திட்டத்தின் நோக்கம் என்றே சொல்லப்படுகிறது. இந்தியாவின் கிராமங்கள் 6,38,596. இருக்கும் வங்கிக் கிளைகளோ 50,421. சராசரியாக 12 கிராமங்களுக்கு, அதாவது 9,500 மனிதர்களுக்கு சேவை செய்ய ஒரு வங்கிக் கிளைதான் தற்போது இருக்கிறது. ஒரு பேச்சுக்கு, மோடியின் ஆசைப்படி நாளைக்கே, இந்த 6,38, 596 கிராமங்களில் நான்கில் ஒரு பங்கு கிராமங்கள் வங்கிச் சேவையை ஆலிங்கணம் செய்ய வந்தாலும் அதனை தாங்கும் சக்தி இந்திய வங்கித் துறைக்கு அறவே கிடையாது என்பதுதான் கள யதார்த்தம்.

இதனிடையே இந்த ஏடிஎம் களில் நிரப்புவதற்கு புதிய நோட்டுக்கள் எப்போது வரும் என்பதுதான் புதிராக இருக்கிறது. ஏனெனில் நவம்பர் 18 ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் இது பற்றிய ஒரு வழக்கில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் எப்போது வந்து சேரும் என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக தெரிவிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து விட்டது. காரணம் இதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்பதுதான். தற்போது வெறும் 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. ரூபாய் நோட்டுக்கள் இன்று நாட்டின் நான்கு இடங்களில் - மைசூர், மேற்கு வங்கத்தின் சப்போனி, மஹாராஷ்டிரா வின் நாசிக் மற்றும் மத்திய பிரதேசத்தின் தேவாஸ் - அச்சடிக்கப் படுகின்றன. இதில் மைசூரில் 2,000 ரூபாய் நோட்டுக்கள் அதிகமாகவும், ஓரளவுக்கு 500 ரூபாய் நோட்டுக்களும் அச்சடிக்கப் படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் அனைத்து நான்கு அச்சகங்களும் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்தால் தவிர பிரச்சனை இப்போதைக்குத் தீரப் போவதில்லை என்பதுதான் கள யதாரத்தம்.

English summary
PM Modi's demonitisation has paralysed the entire cash economy and 2 lakh plus ATMs still not upgraded to dispense cash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X