டிக் செய்த மோடி, அமித்ஷா.. குஜராத்தின் அடுத்த முதல்வர் இவர்தானாமே.. புதிய தகவல்கள்!
காந்தி நகர்: குஜராத் முதல்வராக இருந்து வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் விஜய் ரூபானி இன்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 65 வயதான விஜய் ரூபானி ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இவரது ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. குஜராத்தை பொறுத்தவரை பா.ஜ.க.வின் அசைக்க முடியாத இரும்பு கோட்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, தொடச்சியாக மூன்று முறை குஜராத் முதல்வராக இருந்துள்ளார். அப்போது தொழில் துறையில் முன்னணி பெற்று விளங்கியது குஜராத். 'குஜராத் மாடல்' என்று அதன் பெருமையை மற்ற மாநிலங்களில் பேச ஆரம்பித்தனர்.

குஜராத் மாடல்
இந்த 'குஜராத் மாடல்' என்னும் பெயரே மோடிக்கு பிரதமர் பதவியை தேடி கொடுத்தது. இப்படி பாஜகவுக்கு நற்பெயரை வாங்கி கொடுத்த குஜராத்தில் அடுத்த தேர்தலில்வெற்றி கன்பார்ம் என்னும் நிலையில் , அதுவும் மோடி, அமித்ஷா நம்பிக்கையை பெற்ற விஜய் ரூபானி ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று அரசியல் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். '' தலைமையின் நம்பிக்கையை பெற்று இருந்தாலும் விஜய் ரூபானி மக்களிடத்தில் நெருக்கமாக இல்லை. அதுபோக ஒரு முதல்வரை அடுத்த தேர்தலிலும் தக்க வைத்தால் மக்களிடம் செல்வாக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது'' என்று கருதியே பா.ஜ.க தலைமை, விஜய் ரூபானியை பதவி விலக வைத்ததாக கேள்விக்கு விடை கிடைக்கின்றன.

காரணம் என்ன?
ஆனால் ராஜினாமா செய்ததன் காரணம் குறித்து விஜய் ரூபானி எதுவும் வாய் திறக்கவில்லை. ''என்னை போன்ற ஓர் எளிய தொண்டரையும் குஜராத் முதல்வராக பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காக பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது பதவிக்காலத்தில் குஜராத்தின் வளர்ச்சிப் பாதைக்கு சில பணிகளை செய்துள்ளேன். புதிய தலைமையும் இதனை தொடரும் என நம்புகிறேன். கட்சி எனக்கு எந்த பொறுப்பை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்று விஜய் ரூபானி கூறியிருக்கிறார்.

அடுத்த முதல்வர் யார்?
விஜய் ரூபானி ஏன் ராஜினாமா செய்தார்? என்ற விவாதம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இவர்தான் அடுத்த முதல்வர்? இல்லை, இல்லை அவர்தான் முதல்வராக வருவார்? என்று பல்வேறு கருத்துக்கள் குஜராத்தின் பட்டிதொட்டியெங்கும் றெக்கை கட்டி வலம் வருகின்றன. இது ஒருபுறமிருக்க தற்போது குஜராத் துணை முதல்வராக இருக்கும் நிதின் படேல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, லட்சத்தீவில் குட்டையை குழப்பிய அதன் நிர்வாகி பிரபுல் படேல், மாநில அமைச்சர் ஆர்.சி.பால்டு மற்றும் குஜராத் பா.ஜ.க தலைவர் சி.ஆர்.பாடில் ஆகியோர் முதல்வர் ரேஸில் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இவர்தான் அவர்
இது தவிர கோர்தன் ஜடாஃபியா மற்றும் பர்ஷோத்தம் ரூபலா ஆகியோரும் அடுத்த முதல்வர் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருப்பதாக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் பேசி வருகின்றன. தற்போது குஜராத்தில் பா.ஜ.க துணைத்தலைவராக இருக்கும் கோர்தன் ஜடாஃபியா, கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த பெரும் கலவரத்தின்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக... மேற்கண்ட தலைவர்கள் குஜராத் முதல்வர் நாற்காலியில் உட்கார சுற்றி, சுற்றி வந்தாலும், இதில் யார் உட்கார போகிறார்? என்பது மோடி, அமித்ஷாவின் கையிலே உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications