For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் மோதிக்கு கிடைத்த அனுபவங்களும் சாதித்ததும் என்ன?

By BBC News தமிழ்
|
What Modi did in his USA trip
Getty Images
What Modi did in his USA trip

5 நாள் அமெரிக்கப் பயணம் சென்ற நரேந்திர மோதி திரும்பி வந்துவிட்டார். அமெரிக்காவில் அவர் உலக வல்லரசுகள் சிலவற்றின் தலைவர்களை சந்தித்தார். ஐ.நா அவையிலும் உரையாற்றினார்.

அவருக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது? அங்கே அவர் என்ன சாதித்தார்?

இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் மோதி முதல் முறையாக இரு தரப்பு சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்பு மிகச் சிறந்த சூழ்நிலையில் நடந்தது. இரு நாடுகளும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்புடன் தங்கள் நட்பை மேலும் வலுப்படுத்த உறுதியளித்தன.

குவாட் குழுவில் இடம் பெற்றுள்ள நான்கு நாடுகளும் முதல் முறையாக நேருக்கு நேர் உச்சி மாநாட்டில் சந்தித்தன.

இதில், குறிப்பாக இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில், இந்தியாவுடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் இணைந்து சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்ய ஒத்துழைக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக, நான்கு நாடுகளும் பல பகுதிகளில் ஒத்துழைப்புக்கான பணிக்குழுக்களை உருவாக்கியுள்ளன, அவற்றின் பணிகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

கடந்த ஆறு மாதங்களில் பிரதமர் மோதியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

2019 இல் மோதி கடைசியாக அமெரிக்கா சென்றபோது டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலம். இரு தலைவர்களுக்கிடையே சிறந்த நட்புறவு நிலவியது. இருவரும் ஒருவருக்கொருவர் புகழுரைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்போதும் இதே செப்டம்பர் மாதத்தில் தான், டெக்சாஸ் மாகாணத்தின் ஹ்யூஸ்டன் நகரில் 'ஹௌடி மோதி' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் மோதியுடன் டிரம்பும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் மனதை டிரம்பும் கவர்ந்தார்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள் போன்றோரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதற்காக பலரும் மோதியை வெகுவாகப் பாராட்டினர்.

ஹௌடி மோதி நிகழ்ச்சி குறித்த விவாதங்கள், அமெரிக்க நாளேடுகளில் பல நாட்கள் வரை சுடச் சுட இடம்பெற்றன. மேலும் அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் மோடியும் ட்ரம்பும் உரையாற்றிய விதம் குறித்தும் தொலைக்காட்சி செய்திகளில் விவாதிக்கப்பட்டது.

அந்தச் சூழலிலும், மோதியின் காலத்தில் இந்தியாவில் நடந்த மனித உரிமை மீறல்களைப் பற்றிச் சில கட்டுரைகள் குறிப்பிடத் தொடங்கின. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, 370 வது பிரிவு காஷ்மீரில் ரத்து செய்யப்பட்டு, பொது மக்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஒரு அமெரிக்க செய்தித்தாளில் வந்த கட்டுரையில், மோதியை 'இந்தியாவின் டிரம்ப்' என்று அழைத்தனர்.

இருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டில், மோதி அமெரிக்காவில் உள்ள ஹ்யூஸ்டன் மற்றும் நியூயார்க் சென்றபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவரை வரவேற்றனர்.

ஹௌடி மோதி நிகழ்ச்சியில், 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்காக மோதி டிரம்ப்பை வெளிப்படையாகவே ஆதரித்தார். மக்கள் கூடியிருந்த அந்த மன்றத்தில் உரையாற்றிய அவர், "அப்கி பார் டிரம்ப் சர்க்கார்" என்றார். அவரது பிரசார உரையைப் பார்த்து உடனிருந்த டிரம்ப் கூட திகைத்தார்.

ஆனால் 2020 தேர்தலில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபரானார். அந்தத் தேர்தல் பிரசாரத்தில், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்தியாவில் மனித உரிமை மீறப்படுவதாகக் கூறி மோதி அரசை கடுமையாக விமர்சித்தனர்.

இப்போது 2021 இல் மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

இந்த முறை தொற்றுநோய் காரணமாக, மோதியால் எந்தப் பெரிய நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய மோதி, தற்போது சில நூறு பேருடன் மட்டுமே திருப்தியடைய வேண்டியிருந்தது.

வாஷிங்டனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பல பேருந்துகளில் வந்து வெள்ளை மாளிகைக்கு வெளியே மோதியை வரவேற்கக் கூடினர், அவர்களும் உற்சாகமாக இருந்தனர். சிலர் மோடியை சந்திக்க முடியவில்லை என்று வருத்தத்தில் இருந்தனர், ஆனாலும், மோதியின் படம் மற்றும் ஆதரவில் எழுதப்பட்ட பெரிய பேனர்களைத் தாங்கி அவருக்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பினர்.

மோதிக்கு எதிராகவும் ஒரு குழு அங்கு கூடி இருந்தது. அவர்கள் மோதி எதிர்ப்பு முழக்கமிட்டனர். சிலர் மோதியே திரும்பிச்செல் என எழுதப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தியபடி குரல் எழுப்பினர். அவர்களில் பெரும்பாலோர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் பலர் மஞ்சள் கொடியை ஏந்தியிருந்தனர், அதில் காலிஸ்தான் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இந்தியாவில் காலிஸ்தான் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

ஒரு சந்தர்ப்பத்தில், இந்த இருவேறு குழுக்களும் நேருக்கு நேர் வந்து ஒரு மோதல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அங்கு சரியான நேரத்தில் காவல் துறை வந்து பாதுகாப்புக்கு நின்றது.

டிரம்ப் ஆட்சியில் இருந்த அளவுக்கான வரவேற்பு இனி சாத்தியமில்லை என்பதைப் பல தெளிவான குறியீடுகளால் பைடன் அரசு தெரிவிக்கத் தவறவில்லை.

டிரம்ப் பாணியை பின்பற்றாத பைடன்

மோதி இருதரப்பு சந்திப்புக்காக வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, அதிபர் பைடன் வெளியே வந்து அவரை வரவேற்கவில்லை. மாறாக, மோடி ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பைடன் அவரைச் சந்தித்தார்.

இரு தலைவர்களும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உறுதியளித்தனர். வணிகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், காலநிலை மாற்றம் மற்றும் கோவிட் தொற்றுநோய் ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றாகப் போராடவும் தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளும் வெளிப்படுத்தின.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தி சார்ந்த நலன்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் அளவுக்கு, இரு நாடுகளுக்கும் ஒருவருக்கொருவர் தேவைப்படும் அளவுக்கும் இன்று புவி சார் அரசியல் நிலை மாறிவிட்டது.

மோதி-பைடன் இரு தரப்பு சந்திப்பில், எல்லாமே மிகவும் அளவிடப்பட்ட முறையில் நடந்தன. ஒவ்வொரு சொல்லும் அளந்து அளந்தே பேசப்பட்டது.

பெருந்தொற்று காரணமாகவும் கொண்டாட்டங்கள் குறைவாகவே இருந்தன. மோதியின் உற்சாகமும் குறைந்தே காணப்பட்டது. பைடனும் மோதிக்கு 'சிறந்த தலைவர்' போன்ற பட்டங்கள் எதுவும் வழங்கவில்லை.

அதே நேரத்தில், பைடனுக்கு 'சிறந்த தலைவர்' என்ற பட்டம் வழங்க மோடி முயற்சி செய்ததும் தெரிந்தது.

ஜனநாயக மாண்புகளை வலியுறுத்திய பைடன், கமலா

மாறாக, துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மோதியுடனான சந்திப்பின் போது ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

பைடன், மோதியுடனான சந்திப்பில், "மகாத்மா காந்தியின் அகிம்சை, மரியாதை மற்றும் சகிப்புத்தன்மை போன்ற இலட்சியங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவை" என்று கூறினார்.

காந்தியடிகளின் கொள்கைகளை மேற்கோள் காட்டிய மோதி, உலகிற்கு அவர் செய்த நன்மைகளையும் பட்டியலிட்டார்.

ஆனால், அமெரிக்கச் செய்தித்தாள்களில் மோதியின் அமெரிக்க வருகை பற்றி எந்தச் சிறப்புக் குறிப்பும் இல்லை. சில செய்தித்தாள்களில், ஜனநாயக மதிப்புகள் குறித்து மோதிக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் என்று தலைப்பிடப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன.

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸில் வெளியான செய்தியின் தலைப்பு 'கமலா ஹாரிஸ் இந்த வரலாற்றுபூர்வ சந்திப்பில் இந்தியாவில் மனித உரிமைகள் தொடர்பான அழுத்தத்தை மோதிக்கு உணர வைத்தார்" என்பதாக இருந்தது.

அதே சமயம், அமெரிக்க இதழான பொலிடிகோவில் வெளியான ஒரு கட்டுரை, இந்தியாவில் மனித உரிமை மீறல் குறித்து, பைடன் நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பது பற்றி விவாதிக்கிறது.

இந்தக் கட்டுரையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வழக்கறிஞர் ஜான் சிஃப்டனின் அறிக்கையும் அடங்கும், அதில் அவர், "இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் குறித்து பைடன் நிர்வாகம் ஏன் அமைதி காக்கிறது" அமெரிக்க அதிகாரிகள் ஏன் கைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர்? இது என்ன உத்தி? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கிடையே, மோதியின் அமெரிக்கப் பயணம் வெற்றிகரமாகவும் தனித்துவமாகவும் இருந்தது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா தன் வசம் உள்ள 157 இந்திய தொல் பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த பொருட்களுடன் பிரதமர் நரேந்திர மோதி தாயகம் திரும்புவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இந்த பொருட்கள் பெரும்பாலும் 11ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை சேர்ந்தவை.

கலைப்பொருட்களில் பாதி (71) கலாசாரம் சார்ந்தவையாக இருந்தாலும், மற்ற பாதி இந்து மதம் (60), பெளத்த மதம் (16) மற்றும் சமணம் (9) ஆகியவற்றுடன் தொடர்புடைய சிலைகளையும் கொண்டுள்ளன.

அவை உலோகம், கல் மற்றும் சுடுமண்ணால் தயாரிக்கப்பட்டவை.

வெண்கல சேகரிப்பில் முதன்மையாக லட்சுமி நாராயணன், புத்தர், விஷ்ணு, சிவன் பார்வதி மற்றும் 24 சமண தீர்த்தங்கரர்கள், கண்கலமூர்த்தி, பிராமி மற்றும் நந்திகேசன் ஆகியோரின் புகழ்பெற்ற தோரணைகளின் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
What Modi did in his USA trip?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X