For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்பயா நினைவு தினம்: பலாத்கார குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்... பெண்கள் கொதிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயாவின் மரணத்திற்குப் பின்னர் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்று பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை என்றும் நிர்பயா நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் கருத்து கூறியுள்ளனர்.

Women not satisfied with govt’s steps on Rape cases

பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தூக்கிலிடுங்கள் என்றும் பெண்கள் கருத்து கூறியுள்ளனர்.

2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

‘நிர்பயா' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனையொட்டி டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவியின் பெற்றோரால் நடத்தப்படும் நிர்பயா அறக்கட்டளை சார்பில் டெல்லியில் நேற்று நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுனம் கடைபிடித்தனர். அஞ்சலி நிகழ்ச்சியில் உரையாற்றிய மாணவியின் தாயார், "கொல்லப்பட்ட நாளில் 2 அல்லது 3 மணி நேரத்தில் திரும்பி வருவேன் என்று கூறி சென்ற என் மகள் திரும்பி வரவே இல்லை. கனநேரத்தில் ஏற்பட்ட அவளது மரணம் எங்களை மிகவும் வாட்டியது. ஆனால் கொல்லப்பட்டவர்களுக்கு இன்னும் சட்டப்படியான தண்டனை இதுவரை கிடைக்கவில்லை" என்றார்.

அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி, முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் மாணவிக்கு அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர், இளையோர் பிரிவு சார்பில் மண்டி ஹவுஸ் பகுதியில் மனிதச் சங்கிலி ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்,"டிசம்பர் 16' சம்பவத்திற்குப் பிறகு 2013, 2014-இல் ஒதுக்கப்பட்ட ரூ.1,000 கோடி நிர்பயா நிதியை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் பயன்படுத்தவில்லை. மேலும், நிர்பயா மையம் ஒன்றுகூட அமைக்கப்படவில்லை.

மறைந்த நீதிபதி ஜே.எஸ். வர்மா கமிட்டியால் 2013-இல் பரிந்துரைக்கப்பட்ட காவல் மற்றும் நீதித் துறை சீர்திருத்தங்களும் நிறைவேற்றப்படவில்லை.

தலைநகரில், பெண்களுக்கு எதிரான குற்றங்களாக தினமும் சராசரியாக 40 வழக்குகள் காவல் துறையால் பதிவு செய்யப்படுகின்றன. இதில், நான்கு பாலியல் பலாத்கார வழக்குகளும் அடங்கும். தேசியத் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி கணக்கெடுப்பில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இன்னும் பாதுகாப்பற்ற நிலையை உணர்வது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நினைவு தினத்தில் பங்கேற்று பேசியவர்கள் பலரும், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவுவதாக குற்றம் சாட்டினர். இந்திய பெண்கள், பலாத்காரம், ஆசிட் வீச்சு, பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றிர்க்கு ஆளாவது அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்திகரமாக இல்லை என்று ஏராளமான பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களை பலாத்காரத்திற்கு உள்ளாக்கும் குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும் என்றும் பெண்கள் வலியுறுத்தினர்.

English summary
Indian women and girls face a barrage of threats ranging from human trafficking, sexual violence and acid attacks. New Delhi which has a burgeoning population of 16 million, records the highest number of rape cases, earning it the unsavoury reputation of ‘India's Rape Capital'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X