தாலிபான் மீது தாக்குதல் கூடாது, பதிலடி மோசமாக இருக்கும்.. வார்னிங் அனுப்பிய பாக் ராணுவம்..பரபர தகவல்
காபூல்: பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஆப்கன் ராணுவம் தாலிபான்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனப் பாகிஸ்தான் எச்சரித்துள்ளதாகவும் ஆப்கன் துணை அதிபர் அம்ருல்லா சலே குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தாலிபான்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே, தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீது தங்கள் தாக்குதலை தீவிரப்படுக்க தொடங்கிவிட்டனர்.

தாலிபான்கள் ஆதிக்கம்
ஆப்கனில் தாலிபான்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைத் தடுக்க ஆப்கான் ராணுவத்தால் முடியவில்லை. பல இடங்களில் ஆப்கன் ராணுவம் தாலிபான்களிடம் சரணடைந்து வருகிறது. இதனால் மீண்டும் தாலிபான் வசம் ஆப்கன் செல்லும் மோசமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல தாலிபான்களுக்குப் பின்னணியிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் உதவுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் உதவி
இது குறித்து ஆப்கன் துணை அதிபர் அம்ருல்லா சலே கூறுகையில், "ஸ்பின் போல்டாக் என்ற பகுதியிலிருந்து தாலிபான்களை வெளியேற்றும் எந்தவொரு நடவடிக்கையும் ஆப்கன் ராணுவமும் விமானப்படையும் எடுக்கக்கூடாது எனப் பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாகவே எச்சரித்துள்ளது. அப்படி ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது" என்றார்.

மனிதக் கேடயமாக முதியவர்கள்
இப்போது பாகிஸ்தான் விமானப்படை தாலிபான்களுக்கு மிக நெருக்கமான ஆதரவை வழங்கி வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், தாலிபான்களும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. பாட்ஹிஸ் என்ற மாகாணத்தில் தாலிபான்கள் முதியவர்களை மனிதக்கேடயமாக பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். பல இடங்களில் தாலிபான்களை ஆப்கன் ராணுவம் விரட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாலிபான் வளர்ச்சி
கடந்த புதன்கிழமை தான், பாகிஸ்தான் -ஆப்கன் எல்லைகளில் முக்கியமான ஒன்றைத் தாலிபான் கைப்பற்றியது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய பிறகு தாலிபான் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், எல்லைப் பகுதியைக் கைப்பற்றியுள்ளது அந்த அமைப்புக்கு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பாக். - ஆப்கன் எல்லையில் அமைந்துள்ள வெஷில் என்ற பகுதியில் ஆப்கன் ராணுவம் வெள்ளைக்கொடி காட்டி தாலிபான்களிடம் சரண்டர் ஆகும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின.

முக்கியமான எல்லை
ஸ்பின் போல்டாக் எல்லையையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது. இது பாக். - ஆப்கன் முக்கிய எல்லைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தினசரி 900 லாரிகள் வரை செல்லும் முக்கிய வணிக மையமாய் திகழந்த இந்த எல்லை கடக்கும் பகுதியையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இங்கிருந்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தகருக்கு எளிதாக நுழையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அப்பகுதியில் அனைத்து விதமான போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

தாலிபான்
இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக அறியப்படும் தாலிபான் பயங்கரவாதிகள் 1996ஆம் ஆண்டு முதல் சில ஆண்டுகள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர். 2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பிற்குப் பிறகு, தாலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. அதன் பிறகு தாலிபான் ஒழிக்கப்பட்டு, அமெரிக்க உதவியுடன் ஆப்கன் அரசு உருவாக்கப்பட்டது. இருப்பினும், அந்த அரசைக் கவிழ்க்கத் தாலிபான் ராணுவம் தொடர்ந்து முயன்று வந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்கப் படைகள் இல்லையென்றால் தாலிபான்களை சமாளிப்பது மிகக் கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும்கூட, ஆப்கனில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து படைகளும் திரும்பப் பெறப்படும் எனஅமெரிக்க அதிபர் பைடன் உறுதியாகத் தெரிவித்து விட்டார். இது ஆப்கன் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications