For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழு வயதில் 1330 திருக்குறள்களை கரைத்துக் குடித்த 'குறள் சரவெடி' அத்விகா!

By Shankar
Google Oneindia Tamil News

மினியாபோலிஸ் (யு.எஸ்): ஏழே வயதான அமெரிக்கத் தமிழ் சிறுமி அத்விகா 1330 திருக்குறள்களையும் கூறி அசத்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனைக்காக உள்ளூர் தமிழர்களால் 'திருக்குறள் சரவெடி' என்று பாசத்துடன் அழைக்கப்படுகிறார்.

தமிழ் மறையான திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமெரிக்கத் தமிழர்கள் மிகுந்த அக்கறையுடன் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். அமெரிக்கா முழுவதும் பரவலாக ஒரு குறளுக்கு ஒரு டாலர் என்ற பரிசுத் தொகையுடன் திருக்குறள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஊர்களில் உள்ள வெவ்வேறு தமிழ் அமைப்புக்கள் இதை நடத்துகிறார்கள்.

athvika-memorised-1330-thirukkurals-at-stretch

மினசோட்டா தமிழ்ச் சங்கமும் தமிழ்ப் பள்ளியும்

மினசோட்டா தமிழ்ச் சங்கமும் தமிழ்ப் பள்ளியும் இணைந்து நடத்திய திருக்குறள் போட்டியில் ஏழு வயது சிறுமி அத்விகா 1330 திருக்குறள்களையும் அதற்கான தமிழ் விளக்கத்துடன் கூறி புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த மூன்றாண்டுகளாக மினியாபோலிஸ் நகரில் இந்த திருக்குறள் போட்டி நடைபெற்று வருகிறது, இந்த ஆண்டு 4 வயது முதல் 12 வரையில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

ஐந்து வயதில் 110 குறள்கள் : ஊக்கம் கொடுத்த அமெரிக்கன் டால்

திருக்குறள் போட்டி அறிமுகமான முதலாம் ஆண்டில், ஐந்தே வயது நிரம்பிய அத்விகா, 110 குறள்களை விளக்கத்துடன் சொல்லி 110 டாலர்கள் பரிசு பெற்றார்.
110 குறள்களை விளக்கத்துடன் கூறினால் கிடைக்கும் பரிசுப் பணத்தில், அவளுக்கு பிடித்தமான அமெரிக்கன் டால் பொம்மையை அவளுடைய பணத்திலேயே வாங்கிக் கொள்ளலாம் என்று தந்தை சொல்ல, அதையே வேதவாக்காக நினைத்து, குறள்களையும் சொல்லி, அமெரிக்கன் டால் பொம்மையும் வாங்கிக் கொண்டார்.

'திருக்குறள் சரவெடி' யின் 1330 குறள்கள் சாதனை

6 வயது நிரம்பிய போது நடைபெற்ற இரண்டாம் ஆண்டு போட்டியில் அறத்துப்பால் பிரிவில் உள்ள 320 குறள்களையும் அர்த்தத்துடன் கூறி அசத்தினார். கடந்த சனிக்கிழமை, ஜூன் 13ம் தேதி நடைபெற்ற மூன்றாம் ஆண்டு போட்டியில் மீதமுள்ள 900 குறள்களையும் , அதற்குரிய அர்த்தத்தை தமிழில் கூறி 1330 குறள்களையும் நிறைவு செய்துள்ளார்.

900 குறள்களையும் ஒரே மூச்சில் சொல்லிவிடுவேன் என்று அத்விகா வலியுறுத்தியும், நடுவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சற்று இடைவெளி விட்டு கூறி முடித்தார், குரல் ஏற்ற இறக்கத்துடனும், உரிய முக பாவனைகளுடன் கைகளை உயர்த்தி, நீட்டி அவர் கூறியதை கேட்ட போது, ஒரு குட்டி அவ்வையார் போலத் தான் தெரிந்தார். அங்கே குழுமியிருந்தவர்கள் அத்விகாவை 'திருக்குறள் சரவெடி' என்றே அழைத்தனர்.

ஐந்து வயதிலேயே புறநானூறு பாடியவரல்லவா!

1330 குறள்களை ஒப்புவித்த சாதனை ஒரு புறம் என்றால், ஐந்து வயதிலேயே வாசிங்டனில் நடைபெற்ற புற நானூறு மாநாட்டில், கலந்து கொண்டு ஐந்து புறநானூறு பாடல்கள் பாடிய இவரது தமிழ்ப் புலமையை என்னவென்று சொல்வது? அதே மாநாட்டில் 'புறநானூறும் பெண் வீரமும்' என்ற தலைப்பில் ஆறு நிமிடங்கள் உரையாற்றியும் உள்ளார்.

முன்னதாக மினசோட்டாவில் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டியில்,, நான்கே வயதான அத்விகா, அவ்வையின் ஆத்திச்சூடி 100, பாரதியின் ஆத்திச்சூடி 100 மற்றும் 20 குறள்கள் என அசத்தியும் இருக்கிறார்.

Athvika memorised 1330 Thirukkurals at a stretch

பெரும் பேர் கண்டிகை

அத்விகாவின் பெற்றோர்கள் சச்சிதானந்தன் - பிரசன்னா , அருணகிரி நாதர் பாடல் பாடிய தலமான மேல்மருவத்தூர் - அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை கிராமத்தைச் சார்ந்தவர்கள். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

மகளுக்கு தமிழ் மீது ஆர்வத்தை உருவாக்கியதுடன், இன்பத்துப் பால் உட்பட அனைத்து குறளகளையும் படித்து, கருத்துக்களை மழலைக்கு புரியும் வகையில் சொல்லிக்கொடுத்ததில் பெரும்பங்கு தாயார் பிரசன்னாவைச் சாரும்.

ஊடல் என்பதை செல்லச்சண்டை எனவும், தலைவன் தலைவி யை அப்பா- அம்மா க்கு உவமானமாகவும், குழந்தைக்கு புரியும் வகையில் எளிய நடையில் பயிற்சி அளித்துள்ளனர்.

அப்பா 'நோ' கோபம்

ஏழு வயதில் திருக்குறளை ஒப்புவிக்க மட்டுமல்லாமல், படித்துக் கூறவும் அத்விகாவுக்கு தெரியும். அதே போல் குறளை உவமானமாகக் கூறி இடித்துரைக்கவும் செய்கிறார்.

அப்பா அம்மா ஏதாவது கோபமாக கூறிவிட்டால், உடனே திருவள்ளுவரை துணைக்கு அழைத்து, உரிய குறளை எடுத்து விடுகிறார்.

குறிப்பிட்ட தலைப்பில் ஏதாவது உரையாடலைக் கேட்டால், அது சம்மந்தமான குறளை, குறிப்பிட்டு உரையாடலுக்கு மேலும் வலுவூட்டுகிறார். அமெரிக்காவில் சிறந்த தமிழ்ப் புலவராக வருவதற்கான அத்தனை அறிகுறிகுளும் இந்த இளம்தளிர் 'அத்விகா'விடம் தெரிகிறது.

தமிழ் வளர்க்க தளராத முயற்சி

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் குடியேறிய தமிழர்களின் குழந்தைகளுக்கு, தமிழ் கற்றுக்கொள்ள பள்ளிகள் இல்லாத காலம்.. பெற்றோர்கள் விரும்பினாலும், பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுத் தர இயலாத நிலை இருந்தது.

ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களின் அயராத உழைப்பினால், தற்போது அமெரிககா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மொழியின் ஆழத்தயும் ஆளுமையும், குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமாக திருக்குறள் போட்டிகள் உள்ளிட்ட தமிழ்த் திறன் போட்டிகள் நடைபெறுகின்றன.

செய்தி: இர தினகர்

English summary
Athvika, a Tamil girl from USA memorised 1330 Thirukkurals at a stretch in Minnesota Tamil School event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X