ரூ.23 ஆயிரம் கோடி!!.. இந்தியாவின் "கோவாக்சினை" வாங்கியதில் முறைகேடா? சிக்கலில் பிரேசில் அதிபர்
ரியோ டி ஜெனிரோ: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் தீவிர வலதுசாரி தலைவர் ஜெய்ர் போல்சனாரோ. அந்நாட்டு அதிபரான ஜெய்ர் போல்சனாரோ மீது தற்போது மிகப்பெரிய ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. இவரின் பதவிக்கே ஆபத்து ஏற்படும் அளவிற்கு ஊழல் புகார் வைக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாடாளுமன்ற கமிட்டி இந்த ஊழல் புகாரை கடுமையாக விசாரித்துக் கொண்டு இருக்கிறது. வேக்சின் வாங்கியதில் முறைகேடு செய்ததாக ஜெய்ர் போல்சனாரோவிற்கு எதிராக அங்கு பொது மக்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டம்
கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் அரசு இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்சின் வாங்கிக்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்தது. 20 மில்லியன் கோவாக்சின் டோஸ் 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம்தான் தற்போது பிரேசிலை உலுக்கி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிரேசில் சுகாதாரத்துறையை சேர்ந்த லூயிஸ் ரிக்காடோ மிராண்டா என்று தலைமை அதிபர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்
மிரண்டாவின் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் லூயிசும் இதே புகாரை வைத்துள்ளார். இவர்கள் வைக்கும் புகாரின்படி, இந்த வேக்சினின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஒரு வேக்சின் டோஸின் விலை 15 டாலர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயோடெக் நிறுவனம் 1.34 டாலருக்கு ஒரு டோஸ் வேக்சினை அளிக்க முன்வந்த போது, பிரேசில் அரசு கூடுதலாக 13.70 டாலர் கொடுத்து வேக்சின் டோஸ் வாங்க முடிவு செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டி உள்ளனர்.

புகார்
அதோடு இந்த ஒப்பந்தத்திற்கு முன்பணமாக 45 மில்லியன் டாலரை சிங்கப்பூரில் இருக்கும் மேடிசன் பயோடெக் என்ற ஹெல் கம்பெனிக்கு அனுப்பவும் அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பெயர் ஒப்பந்தத்திலேயே இல்லை. ஆனால் இந்த நிறுவனத்திற்கு 45 மில்லியன் டாலர் முன்பணம் ஏன் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. சுகாதாரத்துறை தலைமை அதிகாரியாக இந்த முன்பணத்தை நான் கொடுக்க மறுத்துவிட்டேன் என்று லூயிஸ் ரிக்காடோ மிராண்டா தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு
வேண்டுமென்றே கூடுதல் விலைக்கு வேக்சின் வாங்கியது, சம்பந்தமே இல்லாத ஹெல் கம்பெனி ஒன்றுக்கு 45 மில்லியன் டாலர் முன்பணம் அளிக்க சொன்னது என்று இந்த ஒப்பந்தத்தில் இரண்டு புகார்களை இவர்கள் அடுக்கி உள்ளனர். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம், இது தொடர்பாக லூயிஸ் ரிக்காடோ மிராண்டா மற்றும் அவரது சகோதரர் இரண்டு பேரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை நேரில் சந்தித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எச்சரிக்கை
இந்த ஒப்பந்தம் தவறானது, இதில் ஊழல் நடப்பது போன்று தெரிகிறது. இதை உடனே நிறுத்துங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தை நிறுத்த முடியாது. "சில ஒப்பந்தங்களை இப்படித்தான் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும்" என்று அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கூறியதாக மிராண்டா சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு தங்களுக்கு கடுமையான மிரட்டல் வந்ததாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

அலெக்ஸ்
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் ஜெய்ர் போல்சனாரோவிற்கு நெருக்கமானவருமான் அலெக்ஸ் தங்களை போன் செய்து மிரட்டியதாகவும், ஒப்பந்தம் பற்றி வாயை திறக்க கூடாது என்று கூறியதாகவும் லூயிஸ் ரிக்காடோ மிராண்டா தெரிவித்துள்ளார். இந்த ஊழல் புகார்கள் பெரிதாக வெடித்துள்ள நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றன.

விசாரணை
இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிற்கு இந்த ஒப்பந்தத்தில் என்ன பங்கு இருக்கிறது, இந்த வேக்சின் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா என்று அந்நாட்டு பாராளுமன்ற கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விசாரணைக்கு மிராண்டா புல்லட் பாதுகாப்பு காரில் வந்து வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணையை முழுக்க லைவில் ஒளிபரப்பப்பட்டது.

என்ன நடக்கும்
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊழல் செய்தாரா என்று இதில் வாக்கு அளிக்கப்பட உள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் பதவிக்கே கூட இந்த கோவாக்சின் ஒப்பந்தம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த ஊழல் புகாரை போல்சனாரோ மறுத்துள்ளார். இன்னும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு நாங்கள் ஒரு டாலர் கூட கொடுக்காத போது எப்படி நீங்கள் ஊழல் புகார் சுமத்தலாம்.

அதே விலை
உலக நாடுகள் பல வேக்சின் வாங்கிய அதே விலைக்குத்தான் நாங்கள் ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம் என்று போல்சனாரோ கூறியுள்ளார். பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த விளக்கத்தில், நாங்கள் இன்னும் பிரேசிலுக்கு இந்தத் டோஸும் அனுப்பவில்லை. எங்களின் விலை விவரத்தில் நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். இது தொடர்பான புகார்கள் அனைத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications