ஹூஸ்டன் தூதரகத்தை மூடியதற்கு பதிலடி- செங்டு அமெரிக்கா தூதரகத்தை மூட சீனா உத்தரவு
பெய்ஜிங்: ஹூஸ்டன் நகரில் தூதரகத்தை மூடியதற்கு பதிலடியாக தங்களது நாட்டின் செங்டு நகரில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது சீனா.
கொரோனாவை முன்வைத்து சீனாவை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப். சீனாதான் கொரோனா வைரஸை உருவாக்கியது; உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறது என்று டிரம்ப் கூறி வருகிறார்.
மேலும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் சீனா மீது தென்சீனா கடல் விவகாரம் உள்ளிட்டவைகளை முன்வைத்து அமெரிக்கா தொடர்ந்து விமர்சனங்களை வெளியிட்டு வருகிறது.
லடாக்கில் மீண்டும் சீனா முரண்டு.. பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் இந்தியா.. இனி என்ன நடக்கும்!

யு.எஸ். அதிரடி
இந்த மோதலின் உச்சகட்டமாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்த சீனாவின் தூதரகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பல சீனாவின் தூதரகங்களை இழுத்து மூடப் போவதாகவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

தூதரகம் மூடல் பின்னணி என்ன?
கொரோனாவுக்கு மருந்து உள்ளிட்ட அறிவுசார் தகவல்களை சீனா ஹேக்கர்கள் திருட முயற்சிக்கின்றனர் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இதனடிப்படையில்தான் ஹூஸ்டன் தூதரகத்தை மூட அமெரிக்காவும் உத்தரவிட்டது. இதனிடையே ஹூஸ்டன் சீனா தூதரகத்தில் முக்கிய ஆவணங்களை சீனா எரித்துவிட்டதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது.

சீனா எதிர்ப்பு
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை சீனா கடுமையாக விமர்சித்திருக்கிறது. இது நேர்மையான செயல்பாடு அல்ல என்று அமெரிக்கா மீது சீனா காட்டத்தை காட்டியுள்ளது. அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கையே இது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது சீனா.

செங்டு தூதரகம் மூடல்
அத்துடன் அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக சீனாவின் செங்டு நகரத்தில் உள்ள அமெரிக்காவின் துணை தூதரகத்தை மூடவும் சீனா உத்தரவிட்டிருக்கிறது. இந்த தூதரகமானது 1985-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 150 சீன நாட்டவர் உட்பட 200 ஊழியர்கள் இந்த செங்டு துணை தூதரகத்தில் பணிபுரிகின்றனர். இருநாடுகளிடையேயான தூதரக மூடல்கள் நடவடிக்கை மோதல் போக்கை அதிகரித்திருக்கிறது.