சீனா கட்டிய ராட்சத அணை.. பூமியின் சுழற்சியே மாறி போச்சு.. நாசா ஆய்வில் தெரிய வந்த ஷாக் தகவல்
பெய்ஜிங்: மனிதர்கள் நாம் பூமியில் செய்யும் நடவடிக்கைகளைப் பூமியின் இயல்பை மாற்றுகிறது. அப்படி தான் சீனா செய்த ஒரு காரியத்தால் பூமியின் சுழற்சி பாதிக்கப்பட்டு ஒரு நாளின் நீளமே அதிகரித்துள்ளதாம். ஏன் இதுபோல நடந்தது.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் நாசா விளக்கியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனா நாம் வியக்கும் வகையில் பல கட்டுமானங்களை, உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படி சீனா கட்டிய மிகப் பெரிய திட்டம் தான் த்ரீ கோர்ஜஸ் அணை. இது உலகின் மிகப் பெரிய புனல் மின் நிலையமாகும்.

இந்த அணை எவ்வளவு பெரியது என்று கேட்கிறீர்களா.. பூமியின் சுழற்சியையே பாதிக்கும் அளவுக்கு இது மிகப் பெரிய திட்டமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சீன ஆய்வு: மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அணை, சீனாவின் துயம் என்று அழைக்கப்படும் யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதாகும்.. அருகே உள்ள குடாங்சியா, வுக்ஸியா மற்றும் ஜிலிங்க்ஸியா ஆகிய 3 பள்ளத்தாக்குகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கடந்த 1994ம் ஆண்டு இந்த கோர்ஜஸ் அணையின் கட்டுமானத்தைத் தொடங்கியது. சுமார் 12 ஆண்டுகள் கட்டுமானம் நடந்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டில் கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்தது.
2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் ஏற்பட்ட சுனாமியால் பூமியின் சுழற்சி எப்படிப் பாதிக்கப்பட்டது என்பது குறித்து நாசா ஆய்வு செய்தது. அப்போது தான் 2005இல் இந்த அணைக்குப் பூமியைச் சுழற்சியைப் பாதிக்கும் திறன் இருப்பது கண்டறியப்பட்டது.
நாசா ரிப்போர்ட்: இது தொடர்பாக நாசா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், "பூமியின் நிறை எப்போதும் பரவலாக இருக்கும். ஒரே இடத்தில் பூமியின் நிறை அதிகரிக்கும் போது கிரகத்தின் நிலைத்தன்மை மற்றும் சுழற்சியில் அது சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும்.. இதேபோல், டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம் காரணமாக ஏற்படும் நிலநடுக்கம் என்பது பூமியின் சுழற்சியைச் சிறிது பாதிக்கும்" என்று கூறியிருக்கிறது.
கடந்த 2004இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகும் இதுதான் நடந்ததாக நாசா தெரிவித்துள்ளது. அதாவது 2004ல் ஏற்பட்ட நிலநடுக்கம், பூமியின் நிரையை பாதித்ததாகவும் இதனால் பூமியின் சுழற்சி பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதனால் பூமியில் ஒரு நாளின் நீளம் 2.68 மைக்ரோ விநாடிகள் குறைந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வல்லுநர்கள் விளக்கம்: எப்படி நிலநடுக்கம் பூமியின் சுழற்சியைப் பாதித்ததோ அதேபோல நீர் ஒரே இடத்தில் அதிகளவு தேங்குவதும் பூமியின் சுழற்சியை மாற்றும் என்று வல்லுநர்கள் விளக்குகிறார்கள். இது குறித்து நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் புவி இயற்பியலாளர் டாக்டர் பெஞ்சமின் ஃபோங் சாவ் கூறுகையில், "சீனா எட்டியுள்ள இந்த ராட்சத அணையில் 40 கன கிலோமீட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும்..
இதன் காரணமாக இது பூமியில் ஒரு நாளின் நீளத்தை 0.06 மைக்ரோ வினாடிகள் அதிகரிக்கிறது. மேலும், பூமியின் துருவ நிலையை சுமார் 2 சென்டிமீட்டர் அளவுக்கு நகர்த்துகிறது. மிகப் பெரிய பூகம்பங்கள் பூமியின் சுழற்சியில் ஏற்படுத்தும் மாற்றத்துடன் ஒப்பிடும்போது இது பெரிது இல்லை. ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நம்மால் தவிர்த்துவிட முடியாது" என்றார்.
பல விஷயங்கள் பாதிக்கிறது: மேலும், மனிதர்களின் வேறு பல நடவடிக்கைகளும் கிரகத்தின் சுழற்சியைப் பாதிக்கிறதாம்.. பருவநிலை மாற்றம் காரணமாகவும் இந்த மாற்றம் நடக்கிறதாம். அதாவது பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு இரு துருவத்திலும் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது, வெப்ப மண்டல கடல்களின் எழுச்சி ஆகியவை கிரகத்தின் பூமத்திய ரேகையில் அதிக நிறை குவிப்பதாகவும் இது பூமியின் சுழற்சியை மெதுவாக்கி ஒரு நாளின் நீளத்தைக் குறைப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications