For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபுதாபியில் நடந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

அபுதாபி: எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி அபுதாபியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து அமீரகம் வந்துள்ள ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பீ.மு.மன்சூர் அவர்கள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சரியாக இரவு 8.00 மணிக்குத் துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கமாக ஜுனைத் அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் அறிமுக உரையை முஹம்மத் முனவ்வர் நிகழ்த்தினார். அமீரகத்தில் ஃபோரம் ஆற்றி வரும் பல்வேறு சமூகப் பணிகளை அவர் செவ்வனே எடுத்துரைத்தார்.

அடுத்தபடியாக நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான முனைவர் மன்சூர் சாஹிப் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தம் சிறப்புரையில், சச்சார் கமிஷன் அறிக்கையைச் சட்டிக்காட்டி, இந்திய முஸ்லிம்களின் அவலத்தைப் போக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை எனவும், அரசு வழங்கும் சிறுபான்மை கல்வி உதவித் தொகைகள் குறித்தும், உயர்கல்வியில் தேர்வு செய்ய வேண்டிய பாடங்கள் பற்றியும் மாணவர்களுக்கு அறிவுறுத்துவது இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களின் கடமை என்பதையும் பல சான்றுகள் கூறி விளக்கினார்.

மேலும் முனைவர் மன்சூர் அவர்கள் தன்னுடைய முன்னாள் மாணவர்கள் பலரையும் அபுதாபியில் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த ஃபோரமுக்கு நன்றி தெரிவித்தார். கல்வியில் பின்தங்கியுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை மேம்படுத்த பல்வேறு விதமான ஆலோசனைகளையும், தனது வாழ்வில் நடந்த பல அனுபவங்களையும் தன்னுடைய கல்லூரி முன்னாள் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். முனைவர் அவர்களின் சிறப்புரை ஜமால் முஹம்மத் கல்லூரி மாணவர்களின் பழைய நினைவுகளைக் கிளறியது என்றால் அது மிகையில்லை.

நிகழ்ச்சியின் இறுதியாக பொறியாளர் தமீம் அவர்கள் "சமுதாயச் சேவை" என்ற தலைப்பில் அழகுற உரை நிகழ்த்தினார். குழந்தைகளின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக் கூடாது என்றும், அது இஸ்லாத்திற்குப் புறம்பானது என்றும் மனக்குமுறலுடன் விளக்கிப் பேசினார். கல்வியில் சமூகத்தைச் சக்திப்படுத்த ஃபோரம் அமீரகத்திலிருந்து தாயகத்தில் உள்ள சிறுபான்மையினருக்குச் செய்யும் உதவிகளை தெளிவாக எடுத்துரைத்தார்.

"பள்ளி செல்வோம்" (ஸ்கூல் சலோ) என்ற முழக்கம் தற்போது இயக்கமாக மாறி, மாபெரும் வெற்றி பெற்றுள்ளதையும், அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் இதில் பெரும் பங்காற்றிட முடியும் என்பதையும் கூறிய தமீம், குறிப்பாக ஜமால் முஹம்மத் கல்லூரி மாணவர்களின் தொண்டுள்ளம் கண்டு தான் நெகிழ்ந்து போனதாகவும் உணர்வுபூர்வமாக உரையாற்றினார். அது பலரையும் உணர்ச்சி பொங்க வைத்தது.

ஜமால் முஹம்மத் கல்லூரி முன்னாள் மாணவர் சுல்தான் உட்பட பலரும் தங்கள் பேராசிரியர் முனைவர் மன்சூர் அவர்கள் தங்களை நெறிப்படுத்தியதை நினைவு கூர்ந்தனர். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு உற்ற துணையாக இருந்த சுல்தான் அவர்கள், முனைவர் மன்சூர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

சுல்தான் அவர்களுக்கு ஃபோரம் சார்பாக முஹம்மத் முன்னவர் நினைவுப் பரிசினை வழங்கினார். இறுதியாக, நன்றியுரையை ஜுனைத் அமீன் நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

English summary
EIFF arranged for a programme in Abu Dhabi to create awareness among people about the importance of education.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X