'தாலிபான் பயங்கரவாதிகளை அங்கீகரிக்க முடியாது.. பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை' ஐரோப்பிய ஒன்றியம்
பிரஸ்ஸல்ஸ்: ஆயுத போராட்டம் மூலம் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், தாலிபான் பயங்கரவாதிகளை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்த இயலாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
Recommended Video
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தீவிரம் காட்டியது. அப்படி பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாக இருந்த ஆப்கனுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டன.
ஆப்கனில் 1996-01 வரை ஆட்சியிலிருந்த தாலிபான் அரசு கவிழ்க்கப்பட்டு, ஜனநாயக முறையில் ஆப்கன் அரசு அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கனில் அமெரிக்கப் படைகள் இருந்தன.

அமெரிக்கப் படைகள்
அமெரிக்கப் படைகளின் இருப்பு காரணமாகத் தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரிக்கவில்லை. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் ஆப்கனிலுள்ள அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வதாக அந்நாட்டு அதிபர் பைடன் அறிவித்தார். அதன்படி அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேற ஆரம்பித்தது. இதற்காகவே 20 ஆண்டுகள் காத்திருந்த தாலிபான்கள் உடனடியாக அமெரிக்கப் படைகள் மீது தங்கள் தாக்குதல்களைத் தொடங்கினர்.

தாலிபான்கள்
அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே ஆப்கனின் பெரும்பகுதியைத் தாலிபான்கள் கைப்பற்றினர். கடந்த வாரம் தான் தலைநகர் காபூலை கைப்பற்றினர். அந்நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகத்திற்குத் தப்பிச் சென்றார். ஆப்கனை தாலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் தாலிபான் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து அறிவித்து வருகின்றன.

சர்வதேச நாடுகள்
சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. அவ்வளவு ஏன் கடந்த காலங்களில் தாலிபான்களுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்த ரஷ்யா கூட தாலிபான்களுடன் ஆப்கானை மீண்டும் கட்டமைக்க இணைந்து பணியாற்றுவதாக அறிவித்துள்ளது. இந்தியா இந்த விஷயத்தில் தெளிவான நிலைப்பாட்டை இன்னும் பொது வெளியில் அறிவிக்கவில்லை. இந்நிலையில், தாலிபான் ஆட்சி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்
இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கமிஷனின் தலைவர் வான் டெர் லேயன் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் அந்நாட்டிற்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்கான நிதியை 57 மில்லியன் யூரோக்களாக ($ 67 மில்லியன்) அதிகரிக்க வேண்டும். மனித உரிமை, சிறுபான்மையினர் நலன், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமை ஆகியவற்றை உறுதி செய்ய உதவும் வகையில் இந்த நிதியை ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கிறது.

அங்கீகரிக்க முடியாது
தாலிபான்களை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கவில்லை, அதேபோல பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இல்லை. பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரது உரிமையைப் பாதுகாப்பது குறித்து தாலிபான்கள் இப்போது பேசுவது நன்றாக இருப்பது போலத் தோன்றலாம். ஆனால், தாலிபான்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அவர்களை மதிப்பிட முடியும். அங்கிருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகளுக்கு நிதியுதவி அளிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இதற்கான நிதி அடுத்து நடக்கும் ஜி 7 மாநாட்டில் திரட்டப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகள்
பல ஆண்டுகளாகவே ஐரோப்பிய நாடுகளில் தான் அகதிகள் தஞ்சம் புகுந்து வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் 10 லட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளிலிருந்து சென்றவர்களாகும். அதன் பிறகு அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவோரின் எண்ணிக்கை மெல்லக் குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications